நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு திமுக ஜால்ரா: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு

14-08-2019 05:53 PM

திருத்தணி,

நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு ஆதரவாக ஜால்ரா அடிப்பதாகவும் தமிழ்நாட்டில் அக்கட்சிக்கு எதிராகவும் திமுக நடந்துகொள்கிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

திருத்தணியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 

திமுகவினர், நாடாளுமன்றத்தில் பாஜக ஆட்சிக்கு ஜால்ரா அடிக்கின்றனர். தமிழகம் வந்தவுடன் பாஜக ஒரு தீவிரவாத இயக்கம்; மதவாத இயக்கம், அதுவொரு அன்னிய சக்தி, முஸ்லிம் சமூகத்தினருக்கு விரோதமானது என்று பொய்யான வதந்திகளைப் பரப்புகின்றனர்.

டில்லியில் இருக்கக்கூடிய திமுக எம்.பி.க்கள், டி.ஆர். பாலு உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் என அத்தனை பேரும் பாஜகவுக்குச் சலாம் போடுகின்றனர். நாங்கள்தான் உங்களின் உண்மையான நண்பர்கள். எங்களுடன் தமிழகத்தில் கூட்டணி வைக்கத் தவறிவிட்டீர்கள்.

உங்களின் நிஜ நண்பர்களைத் தேடிப் பிடிக்க மறந்துவிட்டீர்கள். அதனால்தான் உங்களுக்குத் தமிழகத்தில் தோல்வி என்று திமுகவினர் பாஜகவிடம் தெரிவிக்கின்றனர்.

இதையெல்லாம் ஏன் அவர்கள் சொல்ல வேண்டும்? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பினார்.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து திமுகவினர் பேசிவருவது குறிப்பிடத்தக்கது.