இருதரப்பு பிரச்சனைகளுக்கும் மதிப்பளிக்கவேண்டும்: சீனாவுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அறிவுரை

14-08-2019 05:20 PM

பெய்ஜிங்

சீனாவும் இந்தியாவும், இருதரப்பு பிரச்சனைகளையும் அறிந்துகொண்டு, அதற்கு மதிப்பளிக்கவேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன செய்தி நிறுவனமாகிய இசின் ஹூவாவுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.

3 நாள்அரசுமுறைப் பயணமாக சீனா சென்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பீஜிங்கில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

சீன உதவி அதிபர் வாங் க்யிஷான-உடனும் ஜெய்சங்கர் பேச்சு வார்த்தை நடத்தினார்.

முன்னதாக ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு சீனா அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சீனா சென்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேச்சு நடத்தியிருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

இந்நிலையில், ஜெய்சங்கர் அந்த சந்திப்பு குறித்து சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

”மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட 2 நாடுகளான இந்தியா – சீனா இடையிலான ஒத்துழைப்பு, சர்வதேச நாடுகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்” என்று தெரிவித்தார்.

”இருநாடுகளுக்கு இடையே உறவு மிகப்பெரியது. இருதரப்பு உறவுகளாக மட்டும் அது இருக்கவில்லை. உலகளாவிய பரிமாணங்களை அது கொண்டுள்ளது. இருநாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு, இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தப்படவேண்டும். உலக அமைதிக்காக ஒன்றிணைந்து பங்களிப்பு அளிக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

”இருநாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட, வலுவான பகுதிகளை கண்டியறிவேண்டும். இருநாடுகள், இருதரப்பின் பிரச்சனைகளையும் அறிந்துகொண்டு அதற்கு மதிப்பளிக்கவேண்டும்” என்று சீனாவுக்கு அறிவுரை வழங்கும் விதத்தில் ஜெய்சங்கர் பேசியுள்ளார்.