ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் கட்சியின் தலைவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஷா ஃபாய்சால் கைது

14-08-2019 05:15 PM

புதுடெல்லி

ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் கட்சியின் தலைவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஷா ஃபாய்சால் இன்று காலை 5.30 மணிக்கு புதுதில்லியில் அமெரிக்காவுக்கு விமானத்தில் ஏறியபோது அவர் கீழே இறக்கப்பட்டு ஸ்ரீநகருக்கு திருப்பி அனுப்பப்பட்டார். ஸ்ரீநகரில் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

இந்த தகவல்களை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபாய்சால் நண்பர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமெரிக்காவின் மசாசுஷெட்ஸ்  நகரில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக் கழகத்துக்கு ஷா ஃபாய்சால் செல்வதற்காக விமானத்தில் ஏற வந்தார். அவர் விமானத்தில் ஏறும்பொழுது தடுத்து நிறுத்தப்பட்டார்.

டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு மற்றொரு விமானத்தில் அவரை அழைத்துச் சென்றனர். ஸ்ரீநகரில் ஷா ஃபாய்சால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார் என அவரது நண்பர் கூறினார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்ட விதி 370, 35 ஏ ஆகியவை ரத்துச்செய்யப்பட்டபொழுது அதை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்தினார் ஷா ஃபாய்சால். அவர் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்த பொழுது எடுக்கப்பட்ட படம் இக்கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளது.

ஷா ஃபாய்சால் கைது பற்றி, டெல்லி விமான நிலைய டெபுடி போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாட்டியா-விடம் இது பற்றி கேட்டபொழுது தனக்கு எந்த தகவலும் வரவில்லை என பதிலளித்தார்.

டெல்லி விமான நிலையத்தில் உள்ள குடியேற்றப் பிரிவு அதிகாரிகளும் ஷா ஃபாய்சால் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறினார்.

விமான நிலைய போலீசார் குடியேற்றப் பிரிவு அதிகாரிகளும் ஷா ஃபாய்சால் கைது பற்றி தங்களுக்குத் தெரியாது என்று மறுத்து இருப்பதால் சிபிஐ, ரா, அல்லது வருமானவரித்துறை அதிகாரிகள் ஷா ஃபாய்சாலை கைது செய்திருக்கக் கூடும் என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.Trending Now: