கிராமசபை கூட்டங்களில் காலநிலை மாற்ற விளைவுகள் குறித்து தீர்மானம்: ராமதாஸ் வலியுறுத்தல்

14-08-2019 03:14 PM

சென்னை,

கிராமசபை கூட்டங்களில் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து விளக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கை:

ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் மனநிலையை தெரியப்படுத்துவதற்கான கருவிகளில் மிகவும் முக்கியமானது கிராமசபைக் கூட்டங்களாகும். ஆண்டுக்கு 4 முறை கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், நாளை நடைபெற இருக்கும் நடப்பாண்டின் மூன்றாவது கிராமசபைக் கூட்டத்தை, உலகத்தை அழிக்கும் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றைய நிலையில் உலகிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஆபத்து காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீய விளைவுகள் ஆகும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு அரிசி, கோதுமை, சோளம், சோயா ஆகிய நான்கு முக்கிய உணவு தானியங்களின் உற்பத்தி மிகப்பெரிய அளவில் குறையும்.

காலநிலை மாற்றத்தின் விளைவாக கடல்நீர்மட்டம் உயருவதால் சிறு தீவுகள் மூழ்கக்கூடும்; கடலோர நகரங்கள் அழியக்கூடும்; விளைநிலங்கள் பாழாகக் கூடும். தொழில்கள், உட்கட்டமைப்புகள், வாழ்வாதாரங்கள் ஆகியவையும் பின்ன டைவை சந்திக்கக் கூடும் காலநிலை வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

இவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உலக அளவில் ஐக்கிய நாடுகள் அவையும், வேறு சில பன்னாட்டு அமைப்புகளும், பல்வேறு நாடுகளின் அரசு களும் மேற்கொண்டு வருகின்றன. காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை தடுப்பதற்கான கடமையும், பொறுப்பும் அரசுகளுக்கும், பன்னாட்டு அமைப்பு களுக்கும் மட்டும் தான் இருப்பதாக நினைக்கக்கூடாது; சர்வதேச அமைப்புகள், அரசுகளுக்கு இணையான கடமை மக்களுக்கும் உள்ளது.

பூமியிலிருந்து வெளியேறும் கரியமில வாயுக்களின் அளவை குறைப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். மின்னியல் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல், பொதுப்போக்குவரத்தை அதிகரித்தல், பயன்படுத்திய பொருட்களை குப்பையில் வீசுவதற்கு மாற்றாக மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், மாமிசம் உண்பதை குறைத்தல் உள்ளிட்டவற்றை கடைபிடிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மக்கள் உதவ முடியும்.

ஆனால், இதுதொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படும் வேகம் போதாது. இந்தப் பணிகளை விரைவு படுத்த போர்க்காலச் சூழலை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத் தான் ஐ.நா. நிலையிலிருந்து கிராம ஊராட்சிகள் வரை அனைத்து நிலைகளிலும் காலநிலை மாற்ற அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.

எனவே, இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கிராமசபைக் கூட்டங்களில், மத்திய, மாநில அரசுகள் காலநிலை மாற்ற அவசர நிலையை பிரகடனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்..

இவ்வாறு ராமதாஸ் தன் அறிக்கையில்  கூறியுள்ளார்.Trending Now: