ஹாங்காங்கில் தணிந்தது தொடர் போராட்டம்: விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் மீண்டும் இயக்கம்

14-08-2019 11:41 AM

ஹாங்காங்,             

ஹாங்காங் விமான நிலைய வளாகத்தில் நடைபெற்று வந்த போராட்டம் சற்று தணிந்த நிலையில், விமான சேவை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக கடந்த 10 வாரங்களாக போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி, போராட்டக்காரர்கள் விக்டோரியா பூங்காவில் அமைதி பேரணி நடத்தினர்.

ஆனால் ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் போலீசாரின் தடையை மீறி அங்கிருந்து வெளியேறி முக்கிய சாலைக்கு சென்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தி வந்தனர். இதன் காரணமாக கடந்த 2 தினங்களாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. போராட்டக்காரர்களுக்கும் கலவர தடுப்பு பிரிவு போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஆனால், இன்று அதிகாலையில் பெரும்பாலான போராட்டக்காரர்கள் விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேறினர். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் விமான சேவை மீண்டும் தொடங்கியது. நள்ளிரவில் இருந்து 12-க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்பட்டு சென்றதாக விமான நிலையத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து புறப்பட இருக்கும் விமானங்களின் அட்டவணைப்பட்டியலும் வெளியிடப்பட்டு இருந்தது.

விமான நிலையத்த்தில் சிறிதளவு போராட்டக்காரர்கள் மட்டுமே இருப்பதாக தெரியவந்துள்ளது. விமான நிலையத்தின் செக் இன் பகுதி வழக்கம் போல் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

சில போராட்டக்காரர்கள் மட்டும் விமான நிலையத்தினுள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்கள் விமான சேவையை தடுக்காத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.