அத்திவரதரை தரிசித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

14-08-2019 11:02 AM

காஞ்சிபுரம்,        

நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதாவுடன் நேற்று நள்ளிரவு காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்தார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதர் பெருவிழா வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது .விழாவின் 44 வது நாளான செவ்வாய்க்கிழமை அத்திவரதர் பச்சை நிறப்பட்டாடையும், சிவப்பு நிற அங்கவஸ்திரமும் அணிந்திருந்தார். அவரது உடல் முழுவதும் புஷ்ப அங்கியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அத்திவரதருக்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மனோரஞ்சிதம், ஏலக்காய், மகிழம்பூ மாலைகளை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் அத்திவரதர்.

பெருமாள் காட்சியளித்துக் கொண்டிருக்கும் வஸந்த மண்டபம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது பக்தர்களை வெகுவாக ஈர்த்தது.

காஞ்சிபுரம் அத்திவரதர் பெருவிழா வைபவம் நிறைவுபெற இன்னும் 2 நாள்கள் மட்டுமே உள்ளநிலையில், பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அலைமோதுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வந்த ரஜினியைக் கண்டு, அங்கு கூடியிருந்த மக்கள் கையசைத்து ஆரவாரம் செய்தனர். அவரை வரவேற்ற அர்ச்சகர்கள், அத்திவரதரின் சிறப்புகளை விளக்கி கூறி சிறப்பு பூஜைகளை செய்தனர். அத்திவரதரை மனைவி லதாவுடன் தரிசித்தார் ரஜினிகாந்த். கோவில் நிர்வாகம் சார்பில் ரஜினிக்கு பூரண கும்ப மரியாதையும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. அவரது சார்பில் சுவாமிக்கு பட்டாடை அணிவிக்கப்பட்டது.

தரிசனம் முடிந்து வெளியே வந்த ரஜினிகாந்த் பக்தர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார். ரஜினிகாந்த் வருகையையொட்டி நள்ளிரவு நேரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. காஞ்சிபுரத்தில் 45வது நாளாக அத்திவரதர் தரிசனம் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தரிசனம் செய்தார். அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

45-வது நாளான இன்று அத்திவரதருக்கு பன்னீர் ரோஜா நிற பட்டால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவே வரிசையில் காத்திருந்த பக்தர்கள் இன்று அதிகாலை நடை திறந்ததும் தரிசனம் செய்தனர். 

அத்திவரதரை இன்று இதுவரை 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தரிசனம் செய்த நிலையில் சுமார் 2 லட்சம் பேர் வரிசையில் காத்திருக்கின்றனர்.

இதனிடையே அத்திவரதர் வைபவம் இன்னும் 2 நாட்கள் மட்டுமே நடைபெறவுள்ளது. வரும் 17-ஆம் தேதி மாலை அத்திவரதரை மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே இன்று அத்திவரதரை தரிசித்துவிட்டு வந்த விமலா என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோயில் வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.Trending Now: