நதிகள் இணைப்புப் பணிகளை தொடர வேண்டாம்:ஆந்திர அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

13-08-2019 07:29 PM

புது டெல்லி

கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணை நதிகள் இணைப்பு திட்டப் பணிகளை தேவையான சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் தொடர வேண்டாம். அதே போல பட்டிசீமா, புருஷோத்தம பட்டினம், சிந்தாலப்புடி மேலேற்று பாசன திட்ட கட்டுமானப் பணிகளைத் தேவையான சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் தொடர வேண்டாம் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

நதிகள் இணைப்பு மற்றும் மேல் ஏற்று பாசன திட்டங்கள் தொடர்பாக சுற்றுச்சூழல் அமைச்சகம் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

நதிகள் இணைப்பு திட்டம் தொடர்பாக நேரில் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று கூட்டு கமிட்டி ஆய்வு நடத்தியது. அதேபோல மேல் ஏற்று பாசன திட்டங்கள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தது. அதன் பிறகு கூட்டு கமிட்டி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

நதிகள் இணைப்பு மற்றும் மேலேற்றுப் பாசன திட்டங்களுக்கான கட்டுமான பணிகள் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை ஒன்றை தயாரிக்க வேண்டும். அந்த திட்ட அறிக்கை கூறும் வகையில் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படவேண்டும். அதன்பிறகுதான் திட்டம் தொடர்பான பணிகளைத் தொடங்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு  கூட்டுக் கமிட்டி தெரிவித்துள்ளது. அந்த உத்தரவை ஆந்திர அரசு மீறக்கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் ஆந்திரப் பிரதேச அரசுக்கு இன்று உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை அமல்படுத்திய பிறகே காவிரி, கோதாவரி, கிருஷ்ணா நதிகள் இணைப்பு பற்றி பேச வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.Trending Now: