ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் மாலை போட்டு வரவேற்காது : பாகிஸ்தான் வருத்தம்

13-08-2019 05:12 PM

இஸ்லாமாபாத்,

ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் தலைவர்களை மாலை போட்டு வரவேற்க யாரும் காத்திருக்க மாட்டார்கள். எனவே காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் ஆதரவளிக்கும் என்ற கனவுலகில் மக்கள் கண்டிப்பாக வாழக்கூடாது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்முத் குரேஷி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை ரத்து செய்யப்பட்டு, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்தது.

இந்தியாவின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்தியத் தூதரையும் வெளியேற்றியது. இந்தியாவுடனான வர்த்தக உறவையும் தற்காலிகமாக ரத்து செய்தது. மேலும், சம்ஜாவுதா எக்ஸ்பிரஸ் ரயில், ஜோத்பூர் கராச்சி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றையும் ரத்து செய்தது பாகிஸ்தான். இறுதியாக டெல்லி, லாகூர் இடையே சென்ற பஸ் போக்குவரத்தையும் நிறுத்தியது.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும்படி ஐ.நா. மற்றும் அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட பல உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கோரியது. ஆனால் ஐநா உட்பட எந்த உலக நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கவில்லை.

பாகிஸ்தான் பெரிதும் நம்பியிருந்த இஸ்லாமிய நாடுகள் மற்றும் சீனா இந்த விவகாரம் பாகிஸ்தான் – இந்தியா இடையேயான இருதரப்பு பிரச்சனை என்று கூறி கைவிரித்துவிட்டன.

மேலும் ரஷ்யா, மாலத்தீவு போன்ற நாடுகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஆதரவு தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் புலம்பல்

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்முத் குரேஷி ஈகைத் திருநாள் கொண்டாட்டத்துக்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முஷாபராபாத் நகருக்கு வந்துள்ளார்.

அங்கு ஷா மஹ்முத் குரேஷி செய்தியாளருக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியதன் விவரம் :

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மக்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் இன்னும் வாழக்கூடாது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் நிலைப்பாட்டுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நம்மை மாலை போட்டு வரவேற்க அங்கு யாரும் இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும்.

ஐநாவின் நிரந்தர உறுப்பு நாடுகளில் எந்த நாடும் இந்தியாவின் நடவடிக்கைக்குத் தடை விதிக்கவில்லை.

இஸ்லாமிய சமூகம் கூட நம்முடைய நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஏனென்றால், இந்தியா மிகப்பெரிய சந்தை கொண்ட நாடு. அங்கு பல இஸ்லாமிய நாடுகள் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதால், அவர்கள் நமக்கு ஆதரவு அளிக்கவில்லை.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அதரவை பெற பாகிஸ்தான் மக்கள் புதிய போராட்டத்தை துவங்க வேண்டும் என ஷா மஹ்முத் குரேஷி தெரிவித்தார்.Trending Now: