கேள்விக்கு பதிலளிக்காத அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி முதல்வருக்கு “மெமோ”: அமைச்சர் அதிரடி

13-08-2019 03:07 PM

கோவை,

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், துறை ரீதியான கேள்விகளுக்கு பதிலளிக்கத் தெரியவில்லை என அங்குள்ள செவிலியர் கல்லூரி பொறுப்பு முதல்வருக்கு மெமோ அளித்தார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீமோக்காக்கல் எனப்படும் தடுப்பூசி போடும் நிகழ்ச்சி, உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி, ரத்தநாள அறுவை சிகிச்சை பிரிவு துவக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் ராசாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கான நிமோனியா காய்ச்சல் தடுப்பூசி திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்  அமைச்சர் விஜயபாஸ்கர்,

நாட்டிலேயே முதல் முறையாக ஒன்றரை கிலோவுக்கும் குறைவான எடை கொண்ட பச்சிளம் குழந்தைகளுக்கு “நீமோகாக்கல்” தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

முன்னதாக செவிலியர் பயிற்சிக் கல்லூரி மூன்றாமாண்டு மாணவிகளிடம் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கலந்துரையாடினார்.

அப்போது பிரசவ வார்டுகளில் நடந்துகொள்ள வேண்டிய விதம், பச்சிளம் குழந்தைகளைக் கையாள வேண்டிய விதம், அம்மா திட்டம் மூலம் விலையில்லா பொருட்கள் என்னென்ன வழங்கப்படுகின்றன, அம்மா பரிசு நல பெட்டகம் உள்ளிட்டவை குறித்து பல்வேறு கேள்விகளை மாணவிகளிடம் அமைச்சர் எழுப்பினார்.

ஒரு சில மாணவிகள் சரியான பதில்களை அளித்தனர். அவர்களுக்கு அமைச்சர் பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தினார். ஆனால் பெரும்பாலான மாணவிகள் அமைச்சரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறியுள்ளனர்.

பொறுப்பு முதல்வருக்கு மெமோ

செவிலியர் கல்லூரி பொறுப்பு முதல்வர் தனலட்சுமியை அழைத்து, அவரிடமும் அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழ்நாடு அரசின் மருத்துவத் திட்டங்கள் குறித்து கேள்வி கேட்டதாகவும் அதற்கு அவருக்கு  பதிலளிக்கத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, உடனடியாக முதல்வர் தனலட்சுமிக்கு அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மெமோ (17ஏ) வழங்கினார்.Trending Now: