44வது நாளாக அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம்

13-08-2019 10:59 AM

காஞ்சிபுரம்,      

அத்திவரதர் வைபவத்தின் 44ம் நாளான இன்று பச்சை மற்றும் ஆரஞ்சு எனப் பல வண்ணப்பட்டு உடுத்தியும், மலர் மாலைகள் அணிந்தும் பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார்.

காஞ்சிபுரம் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 31 நாட்கள் சயன கோலத்திலும், 13 நாட்களாக நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த 43 நாட்களில் இதுவரை 90 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

அத்திவரதர் பெருவிழா தினமும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். கடந்த சனி, ஞாயிறு, பக்ரீத் எனத் தொடர்ந்து விடுமுறையாக வந்ததால் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

அத்திவரதர் தரிசனம் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் 16ம் தேதி இரவுடன் நிறைவுபெறவுள்ளது. ஆகஸ்ட் 17ம் தேதி ஆகம விதிப்படி அத்திவரதருக்கு பூஜைகள் செய்யப்பட்டு அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா நேற்று தெரிவித்தார்.

இதையடுத்து, தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்கவரும் நிலையில், அத்திவரதர் வைபவத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்கக்கோரி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அத்திவரதர் வைபவம் தொடர்பாக மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி ஆதிகேசவலு அமர்வு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.Trending Now: