மோட்டார் வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை காரணமாக எம்எஸ்எம்இ நிறுவனங்கள் பெரும் அவதி

12-08-2019 07:14 PM

கோயம்புத்தூர்

மோட்டார் வாகன உற்பத்தித் துறையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மோட்டார் வாகனங்களுக்கு வேண்டிய பாகங்களை உற்பத்தி செய்யும் குறுந்தொழில், சிறுதொழில், நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

மோட்டார் வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை ஜாப் வொர்க் ஆக செய்து தரும் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மோட்டார் வாகன உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள  குறுந்தொழில் சிறுதொழில் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் வேலை நேரங்களை இப்பொழுது குறைத்துக்  கொண்டுள்ளன. அவை புதிதாக யாரையும் வேலைக்கு எடுப்பதில்லை. ஆனால் சில நிறுவனங்கள் தங்கள் பணியாட்களை வேலை நீக்கம் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.

சிட்கோ தொழிற்பேட்டை

கோவை அருகே குறிச்சி என்ற இடத்தில் தமிழக சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தொழிற்பேட்டை ஒன்று உள்ளது. இந்த தொழிற்பேட்டையில் மொத்தம் 220 தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 40 சதவீதம் மோட்டார் வாகன உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்.

இந்த தொழிற்பேட்டையில் உள்ள தொழில் நிறுவனங்களின் சங்க தலைவராக இருப்பவர் எஸ். சுருளி வேல். அவர் இன்றுள்ள தேக்க நிலை குறித்து கூறியதாவது:

மோட்டார் வாகன உதிரி பாகங்களை செய்து தரும் தொழில் நிறுவனங்கள் இப்பொழுது எந்த வேலையும் தாங்கள் மேற்கொள்வது இல்லை என அறிவிப்பு வெளியிட்டுள்ளன. 1 வார காலம் முதல் 10 நாட்கள் வரை தாங்கள் எந்த மோட்டார் வாகன உற்பத்திப்  பணியையும் மேற்கொள்ளமாட்டோம்  என அறிவித்துள்ளன.

இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் உதிரிபாகங்கள் அவற்றின் கையிருப்பில் ஏராளமாக உள்ளன.

இந்த நிறுவனங்களிடம் உற்பத்திக்கான ஆணைகளை தந்த பெரிய தொழில் நிறுவனங்கள் இப்பொழுது தங்கள் ஆணைப்படி உற்பத்தி செய்யப்பட்ட மோட்டார் வாகன உதிரி பாகங்களை டெலிவரி எடுத்துக்கொள்ள  விரும்பவில்லை என எஸ். சுருளி வேல் கூறினார்.

கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில்கள் சங்க  (கொடிசியா) தலைவர் ராமமூர்த்தி. இந்த தேக்க நிலை பற்றி அவர் கூறியதாவது:

மோட்டார் வாகனத் துறைக்கு தேவையான பாகங்களையும் உதிரி பாகங்களையும் உற்பத்தி செய்யும் வார்ப்பட நிறுவனங்களும் குறுந்தொழில் சிறுதொழில் நடுத்தர தொழில் நிறுவனங்களும் இப்பொழுது தங்கள் உற்பத்தியில் 50 முதல் 60 சதவீதம் குறைப்பு செய்துள்ளன. கோவையில் உள்ள பவுண்டரி நிறுவனங்களின் உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு அல்லது மூன்று மாதம் முன்னதாக மோட்டார் வாகன தொழிலில் தேக்கநிலை உணரப்பட்டது. அந்த பாதிப்பு சென்ற மாதம் மிகவும் கடுமையாக குறுந்தொழில் சிறுதொழில் நடுத்தர தொழில் நிறுவனங்களால் உணரப்பட்டது. வெளி மாநிலங்களிலிருந்து வந்து தமிழகத்தில்  பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் பெரும்பாலும் ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளனர். பேருந்துகள், கார்களுக்கு தேவையான உதிரி பாகங்களை  உற்பத்தி செய்கின்ற நிறுவனங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறமுடியாது,அனைத்து வகையான வர்த்தக வாகனங்களுக்கும் டிராக்டர்களுக்கும் தேவையான உதிரி பாகங்களை உற்பத்தி செய்கின்ற முதல் நிலை அல்லது இரண்டாம் நிலை எம் எஸ் எம் இ உற்பத்தியாளர்களும் வினியோகஸ்தர்களும் கடுமையான நெருக்கடியில் சிக்கி உள்ளனர். இந்த தேக்க நிலையிலிருந்து விடுபட  மோட்டார் வாகன பாகங்களுக்கான ஜி.எஸ்.டி  விகிதம் 18 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும்.

மோட்டார் வாகன பாகங்களை உற்பத்தி செய்யும் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் உற்பத்திச் செலவைக் குறைக்க, அந்நிறுவனங்கள் தேக்க நிலையிலிருந்து விடுபடும்வரை  சிறப்பு சலுகைத் தொகுப்பு ஒன்றை அரசு அறிவிக்க வேண்டும் என கொடிசியா தலைவர் ராமமூர்த்தி வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.