அமெரிக்கா – தலிபான் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு : தலிபான் தகவல்

12-08-2019 06:17 PM

காபுல்,

   தலிபான் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இடையேயான இறுதி கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தலைமையிடம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என தலிபான் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கன் அரசு மற்றும் தலிபான் இடையே கடந்த  18 வருடங்களாக போர் நடந்து வருகிறது. தலிபான்களுக்கு எதிராக ஆப்கன் அரசு படைகள் மற்றும் அமெரிக்க படைகள் போரிட்டு வருகின்றன.
பல வருடங்களாக நடக்கும் போரால் ஆப்கனின் பொருளாதார வளர்ச்சி சீர்குலைந்துள்ளது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த போருக்காக அமெரிக்கா ஒரு லட்சம் கோடி டாலர்கள் வரை செலவு செய்துள்ளது. எனவே ஆப்கன் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கண்டு அங்கிருக்கும் அமெரிக்க படைகளை வெளியேற்ற வேண்டும் என்பதில் அதிபர் டிரம்ப் உறுதியாக உள்ளார்.
அதன் காரணமாக தலிபான் மற்றும் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. கத்தார் நாட்டு தலைநகர் தோஹாவில் இருதரப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என்பது தலிபான்களின் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது. அதுபற்றி இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இருதரப்பினர் இடையே நடந்த 8வது மற்றும் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நேற்று நள்ளிரவு நிறைவடைந்தததாக தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

‘‘பேச்சுவார்த்தை மிகவும் கடினமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இருதரப்பினரும் தங்கள் தலைமையிடம் ஆலோசனை நடத்திய பின் முடிவெடுக்கப்படும்’’ என்று ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை குறித்து காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் எந்த தகவலும் வெளியிடவில்லை.

அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தைக்கான தூதர் ஜால்மே காலிஜாத் நேற்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இந்த வருட பக்ரித் பண்டிகை ஆப்கனில் போர் சூழலில் கொண்டாடப்படும் இறுதி பக்ரித் பண்டிகையாக இருக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

விரைவில் அமெரிக்கா – ஆப்கன் இடையே அமைதி உடன்படிக்கை ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேசமயம் ஆப்கனில் நிரந்தரமாக அமைதி திரும்ப அந்நாட்டு அரசுடனும் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

தலிபான் கைதிகள் விடுதலை

ஆப்கன் அரசு நல்லெண்ண நடவடிக்கையாக 35 தலிபான் கைதிகளை விடுவிக்கும் என ஆப்கன் புலனாய்வு சேவை பிரிவு அறிவித்துள்ளது. தலிபான்களுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஆப்கன் அரசு உறுதியாக உள்ளதற்கான அடையாளமாக கைதிகள் விடுவிக்கப்படுவதாக ஆப்கன் புலனாய்வு பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.