கோதை காட்டிய பாதை!

12-08-2019 03:52 PM

பாற்கடலில் பாம்பணையில் திருமால் பள்ளி கொண்டிருந்தார். அவரது திருவடியில் ஸ்ரீதேவி, பூமிதேவியும் அமர்ந்திருந்தனர்.

பூமியில் தர்மத்தை நிலைநிறுத்த பல அவதாரங்கள் எடுத்த பெருமாள், அர்ச்சாவதாரமாக (வழிபடத்தக்க சிலையாக) பூமிக்கு வர விரும்பி லட்சுமியை உடன் அழைத்தார். ''ராம அவதாரத்தின் போது சீதையாக அவதரித்து, நான் பட்டபாடு போதும் சுவாமி... இப்போது என்னை வேறு எந்த ராவணனிடத்தில் ஒப்படைக்கப் போகிறீரோ?'' என்று கோபித்தாள் ஸ்ரீதேவி. அதன்பின் பெருமாளின் பார்வை பொறுமைமிக்க பூமிதேவியின் பக்கம் திரும்பியது. மறுப்பு சொல்லாமல் பெருமாளுடன் புறப்பட்டாள். அவளே கோதை ஆண்டாளாக ஸ்ரீவில்லிபுத்துாரில் அவதரித்தாள். அந்த கோதை காட்டிய பொறுமை என்னும் பாதையில் நடக்க உறுதி கொள்வோம்.

லாபமோ லாபம்!

மன்னர் வல்லபதேவ பாண்டியன் ஆட்சி புரிந்த காலத்தில், காசி யாத்திரை சென்ற முதிய அந்தணர் ஒருவர் மதுரை நகருக்கு வந்தார். குளிர்  காற்று வீசியதால் அந்தணர் நடுங்கினார். நகர்வலம் வந்த பாண்டியன் அது கண்டு இரங்கி தன் மேலாடையை வழங்கினான். அந்தணர் ''நீர் செய்த தர்மத்தால் உன் வம்சமே நன்மை பெறும். மறுமைக்காக சேர்த்து வைக்கும் புண்ணியம் இதுவே. இது போல் புண்ணியம் பல செய்து முழுமுதல் கடவுளைச் சரணடைந்தால் உனக்கு முக்தி உண்டாகும்'' என்றார்.

அன்றிரவு மன்னனால் துாங்க முடியவில்லை. அந்தணர் குறிப்பிட்ட முழுமுதல் கடவுள் யார் என்பதை அறியும் ஆர்வம் எழுந்தது. நாடறிய சபையில் நிரூபிக்கும் பண்டிதருக்கு பொற்கிழி அளிப்பதாக அறிவித்தான். அந்த போட்டியில் ஸ்ரீவில்லிபுத்துாரைச் சேர்ந்த பெரியாழ்வார் 'திருமாலே முழுமுதற்கடவுள்' என நிறுவி பரிசு பெற்றார். சிறிய தர்மத்தால் கிடைத்த பெரிய லாபமாக திருமாலை வழிபட்ட பாண்டிய மன்னர் மகிழ்ந்தார்.