விழிப்புணர்வு தந்த வெற்றி!

12-08-2019 03:45 PM

லங்காபுரியில் ராவணனை எதிர்த்து ராமரின் வானர சேனைகள் போர் புரிந்த நேரம். ராவணனின் மைந்தன் மேகநாதனுடன் ராமலட்சுமணர்கள் போர் புரிந்து கொண்டிருந்தனர். மேகநாதன் பலம் பொருந்திய வீரன். பல யாகங்கள், வேள்விகள் செய்து பல அரிய அஸ்திரங்களை பெற்றவன். மாயக்கலையில் வல்லவன்.  திடீரென்று மாயமாய் மறைந்து மேகங்களுக்குள்ளிருந்து எதிரியை திகைக்க வைத்து போர் புரிவான். அதனால்தான் அவனை மேகநாதன் என்று குறிப்பிடுவார்கள்.

முதலில் நாகபாணங்களை எய்து ராமலட்சுமணரை நாகபாசத்தால் கட்டுண்டு மயக்கமுறச்செய்தான். கருடனின் வரவு நாகபாணங்களின் சக்தி விலகி ராமலட்சுமணர்கள் மீண்டும் போர்புரியத் துவங்கினார்கள். நேருக்கு நேர் போரிட்டால் ராமலட்சுமணரை வெல்வது கடினம் என்பதை உணர்ந்த மேகநாதன், தன் மாய வேலையைக் காட்டத் துவங்கினான். இதனால் ராமலட்சுமணர்கள் திகைத்து எதிரியின் இலக்கு தெரியாமல் தடுமாறும் பொழுது திடீர் தாக்குதல் நடத்தி அவர்களை திணறடித்தான். ராமருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அப்பொழுது லட்சுமணன் ராமரிடம் ‘‘மேகநாதனை நான் எதிர்கொள்கிறேன். அனுமதி தாருங்கள்’’ என்று அண்ணனிடம் கேட்டான். ‘மாயப்போர் புரிபவனிடம் கவனமாக இருக்க வேண்டும்’ என்று சொல்லி ராமர் லட்சுமணனை அனுமனின் தோள் மீது அமர்ந்து போர் செய்யும்படி கூறினார். மேகநாதன் தன் மாய சக்தியால் மறைந்து வேறிடம் செல்ல, லட்சுமணன் அவன் மறைந்திருக்கும் இடத்தை குறி பார்த்து பாணங்களை எய்து மேகநாதனை சோர்வடையச் செய்தான். இறுதியில் லட்சுமணன் அஸ்திரத்தால் மேகநாதன் உயிரிழந்தான்.

கண்ணுக்கு தெரியாமல் மாயப்போர் புரிந்த மேகநாதனை லட்சுமணனால் எப்படி வீழ்த்த முடிந்தது? இதற்கு லட்சுமணன் செய்த பயிற்சி பதினான்கு ஆண்டுகள்  ஆகும். கைகேயியின் வரத்தால் ராமர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல புறப்பட்டபொழுது அண்ணனுக்கு துணையாக காட்டிற்கு உடன் செல்ல லட்சுமணன் தயாராகி தன் அன்னை சுமத்திரையிடம் சென்று விஷயத்தை கூறினான். சுமத்திரையும் அவனை ஆசீர்வதித்து ‘உன் பிரிவு எனக்கு மனக்கவலையை தந்தாலும் ராமனுக்கு நீ துணையாக செல்வது அவசியம் என்று உணர்கிறேன். ராமனுக்கு துணையாக இருந்து சிறு குறையின்றி பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு. உன் கடமையில் நீ சிறிதளவும் தளரக்கூடாது! கண்ணயராமல் விழிப்புடன் இருந்து பாதுகாத்து ௧௪ ஆண்டு வனவாசம் முடித்த பிறகு அண்ணனை பாதுகாப்பாக அயோத்திக்கு அழைத்து வர வேண்டியது உன் பொறுப்பு. விழிப்புடன் இரு... சென்று வா... மகனே!’ என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தாள் சுமத்திரை.

அன்னையின் ஆணையை ஏற்று லட்சுமணன் ராமர், சீதையை பின்தொடர்ந்து காட்டிற்கு சென்றனர். முதல்  நாள் ஒரு ஆசிரமத்தில் ராமர், சீதை தங்கி இருந்தபொழுது ஆசிரமத்திற்கு வெளியே லட்சுமணன் இரவு நேர பாதுகாப்புக்காக விழித்திருந்து காவல்புரிந்து கொண்டிருந்த நேரம் நித்திராதேவி லட்சுமணனை அரவணைக்க வந்தபொழுது அதை உணர்ந்து கொண்ட லட்சுமணன் நித்திராதேவியிடம் ‘என் கடமையில் குறுக்கிடாதே... என்னை விட்டு விலகியே இரு. என் அன்னையின் ஆணை... கண் துஞ்சாமல் அண்ணனை பாதுகாக்க வேண்டும். என்னை விட்டு நீ விலகிப்போ...’’ என்று கூற நித்திராதேவி...

‘‘உனக்கு உன் கடமையைப் போல்... . என்னையும் என் கடமையைச் செய்ய விடு’’ என்று கூற –

‘‘அதற்கான தருணம் இதுவல்ல – மீண்டும் அயோத்தி வரும் வரை

அயோத்தியில் காத்திரு’’ என்று லட்சுமணன் கூறினான்.

‘அதுவரை என் கடமையைச் செய்யாமல் என்ன செய்வது?’ என்று நித்திரா தேவி கேட்க – ‘‘என்  மனைவி என் அன்னையர்களின் அரவணைப்பில் சுகமாக இருக்கிறாள். அவளிடம் சென்று என் சார்பில் உன் கடமையை செய். அதுதான் உத்தமமான வழி’’ என்று கூறி தன் கண்ணை மூட வந்த நித்திராதேவியை  அயோத்திக்கு செல்ல ஆணையிட்ட பின் – லட்சுமணன், ராமர், சீதையின் பாதுகாப்பிற்காக இரவு – பகல் பாராது கண் விழித்து காவல் புரிந்தான். சீதையை ராவணன் கடத்திச் சென்ற பிறகு மனைவியின் பிரிவால் துயருற்ற அண்ணனுக்கு ஆறுதல் சொல்ல ராமரை கண் விழித்துப் பாதுகாத்து – அவருக்கு குற்றேவல் புரிந்தான். இருவரும் காடு, மலையென அலைந்து திரிந்தனர்.

அனுமன் மூலம் சுக்ரீவன் நட்பை ராமர் பெற்று சீதை இருக்குமிடத்தை அனுமன் மூலம் தெரிந்து கொண்டு வானரப்படைகளுடன் லங்காபுரிக்கு பயணப்பட்டு கடலில் பாலம் அமைத்து  லங்காபுரிக்கு வந்து ராவணனை எதிர்த்து போரிடும் வரை லட்சுமணன் இன்றி ராமர் இல்லை என்பது போல் உடனிருந்து செயல்பட்டான். போர் நடக்கும் வரை 14 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் லட்சுமணன் கண்

துஞ்சாமல் அன்னையின் ஆணைப்படி விழிப்புடன் இருந்த அந்த பயிற்சிதான் லட்சுமணனின் கண்ணுக்கு சிறப்பு சக்தியை கொடுத்தது. சாதாரணக் கண்களுக்கு தெரியாத பொருள் கூட லட்சுமணன் கண்ணுக்கு தெளிவாக தெரியும். தூங்காமல் கண் விழித்து கடமையை செய்த லட்சுமணனின் சக்திவாய்ந்த கண்களுக்கு மாய சக்திகள் பலமிழந்து விடும். அதனால்தான் வெல்ல முடியாத மாய சக்தி நிறைந்த மேகநாதனை லட்சுமணனால் எளிதில் பார்க்க முடிந்தது. ராமரையே மயக்கிய மேநாதனின் மாயக்கலை லட்சுமணன் முன்பாக எடுபடவில்லை. சக்திமிக்க லட்சுமணனின் கண் பார்வையிலிருந்து மேகநாதன் தப்ப முடியாமல் – லட்சுமணனின் சரமாரியான கணைத்தொடுப்பில் சிக்கி மாண்டான்.

இதுதான் லட்சுமணன் மாயப்போர் புரிந்த மேகநாதனை வீழ்த்திய உண்மை சம்பவம்.