பழைய அடிமையின் குரல்!

12-08-2019 03:43 PM

குறைந்தபட்ச ஆசைகளிலே அந்த ஏழையின் உயிர் ஊசலாடுகிறது.

ஒரு நாள் அவன் நினைத்தது நடக்கிறது.

எல்லாம் கிடைக்கிறது.

சிறகுகளை தட்டிவிட்டுக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறான்.

அடுத்து இறைவனின் திருவிளையாடல் ஆரம்பமாகிறது.

அடிமைத்தனத்தில் அஞ்சிக் கிடந்த மனிதன், விடுதலைக்குப் பிறகு திமிர் கொண்டு விடுகிறான்.

ஜனநாயகத்தின் பெயரால் ஒவ்வொரு தனி மனிதனும் சர்வாதிகாரியாகிறான்.

சட்டத்தை அவமதிக்கிறான்.

தர்மத்தை கேலி பேசுகிறான்.

ஊரைச் சூறையாடுகிறான்.

உலகமே தன் கையில் என்று எண்ணத் தலைப்படுகிறான்.

விடுதலையின் சுகத்தை அனுபவிக்க தெரியாத அந்தப் பாவிக்கு, அந்த சுகம் என்னவென்று எப்படிக் காட்டுவது?

மீண்டும் ஒரு முறை அவன் அடிமையானாலொழிய அந்த சுகத்தை அறியமாட்டான்!

ஐயோ!

அடிமைத்தனமா?

மீண்டுமா?

நினைக்கும்போதே என் நெஞ்சு நடுங்குகிறது.

நான் பெற்ற விடுதலையை பேணிக் காக்க மனது துடிக்கிறது!

சமுதாய விரோதிகளை ஒழித்து, அதனை நான் காப்பேன்!

ஜனநாயகம் எனக்கு வழங்கியிருக்கிற நடமாட்ட சுதந்திரத்தை, நான் பாதுகாத்தே தீருவேன்.

அந்த முயற்சியில் நான் அழிந்தாலும் சரி.

அடுத்த தலைமுறை ஜனநாயகத்தில் வாழுமே!

அதுபோதும் எனக்கு!

கவிஞர் கண்ணதாசனின் ‘அலைகள்’ நூலிலிருந்து...