மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 166

12-08-2019 03:35 PM

நாள்தோறும் ஆலயத்திலுள்ள விளக்குகளுக்கு எல்லாம் எண்ணெய் வார்த்து ஏற்றி எரியச் செய்து நம்பிரானை நாவாரத் துதித்து வந்தார். இவ்வாறு திருத்தொண்டு புரிந்து வந்த அவருக்கு செல்வம் குறைந்து வறுமை வந்தடைந்தது.

 அதனால் அவர், அவ்வூரை விட்டுத் தில்லை பதியான சிதம்பர நகருக்குள் சென்றார். அங்கு அம்பலத்தில் திருநடனம் செய்தருளும் நடராஜ பெருமானின் திருவடிகளைப் பேரன்போடு வணங்கினார். பிறகு அவர் சிதம்பரத்திலேயே தங்கியிருந்து, தம்முடைய வீட்டிலுள்ள பொருட்களை எல்லாம் விற்று அங்குள்ள திருப்புலீச்சுரம்  (இது சிதம்பரம் பெரிய கடை வீதியின் மேல்பால் உள்ள சிவாலயம்.) திருக்கோயிலில் விளக்கேற்றும் திருப்பணியைச் செய்து வந்தார். இவ்வாறு செய்து வரும் நாளில், அவர் வீட்டிலுள்ள பொருட்களெல்லாம் தீர்ந்து விட்டன. பிறகு, அவர் அயலாரிடம் சென்று யாசிப்பதற்கு அஞ்சி, தமது உடலின் முயற்சியாலே கணம்புற்களை – அதாவது இது ஒரு வகை புல், வீடு வேய்தலுக்கு பயன்படுவது. இதை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, நெய் வாங்கித் திருவிளக்குகளை ஏற்றி வந்தார். கணம் புல்லறுத்து விளக்கு எரித்ததால் அவருக்கு ‘கணம்புல்லர்’ என்ற பெயர் உண்டாயிற்று.

 ஒரு நாள் கணம்புல்லர் மெய்வருந்த அரிந்து எடுத்து வந்த கணம்புல்லானது, எவ்விடத்திலும் விலை போகவில்லை.  ஆயினும், அவர் தம் திருவிளக்கு பணியைக் கைவிடாமல், அந்தப் புல்லையே கொண்டு வந்து அழகிய திருவிளக்கில் இட்டு எரித்தார். ஆனால், அந்தப் புல் வழக்கம் போல இறைவரது  திருமுன்பு திருவிளக்கு எரிக்கும் முறைப்படியுள்ள முதல் சாமம் வரைக்கும் கூட எரிப்பதற்குப் போதவில்லை. அதனால் கணம்புல்லர் அடுத்த விளக்கிற்குத் தமது தலையிலுள்ள சிகையையே விளக்கில் மடித்து வைத்து பேரன்புப் பெருக்கினால் தம் என்பும் கரைந்துருகும்படி தீ மூட்டி விளக்காக எரித்தார். உடனே தலைத் திருவிளக்கு எரித்த திருத்தொண்டருக்கு சிவபெருமான் திருவருள் புரிந்தார். கணம்புல்ல நாயனார், சிவலோகத்தை அடைந்து, இனிதாக வணங்கி வீற்றிருந்தார். தம்பிரானுக்குத் தலை முடியால் விளக்கெரித்த கணம்புல்லரை வணங்குவோம். அடுத்ததாக காரி நாயனாரின் திருத்தொண்டைப் பார்ப்போம்.

 வேதியர் நிறைந்து வாழும் ‘திருக்கடவூர்’ என்னும் பதியிலே காரியார் என்னும் ஒரு பெரியார் வாழ்ந்து வந்தார். அவர், தம்முடைய தமிழ்ப் புலமையினால் சொற்கள் விளக்கமாகி உள்ளூரை பொருளாகிய வீடு பேற்றின் நிலை வெளித்தோன்றாமல் பொருள் மறைந்து கிடக்கும்படி தமது பெயரால் ‘காரிக் கோவை’ – இது அகப்பொருட்டுறைக் கோவை நூல் ஆகும். இந்நூலை பற்றிய விவரம் அறிதற்கில்லை. இந்த நூலை இவர் இயற்றினார். அதனால் தமிழ் மூவேந்தரிடமும் சென்று மன்னர்களின் நட்பைப் பெற்றார். அவர்கள் மகிழும் வண்ணம் தம் நூலை விரித்து பொருளுக்கேற்ற உரைநயம் பெறக் கருதி பெருஞ்செல்வக் குவியல்களையும் பெற்றார்.

 அவர், மூவேந்தர்களிடம் பெற்று வந்த நிதிக் குவியல்களைக் கொண்டு பிறை சூடிப் பெருமான் இனிதமரும் சிவன் கோயில்கள் பலவற்றைக் கட்டினார். யாவரும் மனம் உவக்கும்படி இன்பமொழிப் பயன் இயம்பி சிவனடியார்களுக்கெல்லாம் பெரும் நிதியங்களை அன்புடன் அளித்து வந்தார். சிவபெருமானின் திருக்கயிலாய மலை எப்பொழுதும் மறவாமலிருந்தார்.

 இவ்வுலகில் அவர் தம் புகழை நிலைநிறுத்தி, இடையறாத அன்பினால் சிவபெருமானுடைய திருவருளைப் பெற்று, மனம் போலவே அமைந்த உடலுடன் கூடி, ஜீவன் முக்தராய் வடகயிலை மலைக்குப் போய் சேர்ந்தார்.

 அடுத்ததாக, மதுரையில் சந்திரகுல மரபில் தோன்றிய நெடுமாற நாயனாரின் திருத்தொண்டை பார்ப்போம்.

 பாண்டிய நாட்டில் மதுரை மாநகரில் ஏழுலகங்களிலும் தமது பெருமை விளங்கும்படி நெடுமாறனார் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் சமண நெறியையே தவநெறியென்று கருதி, சமணர்களது சூழ்ச்சியிலகப்பட்டு உழன்றார். பிறகு திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரின் திருவடிகளை அடைந்து சைவத்தை மேற்கொண்டு, பாண்டிய நாடு முழுவதிலும் சிவமணம் பெருகச் செய்தார். திருவைந்தெழுத்தின் நெறியாகிய சைவ நெறியைக் காத்தார்.

 பாண்டிய நெடுமாறனார் நெல்வேலிப் போர்க்களத்தில் தம்முடன் போர் செய்ய வந்த வடநாட்டுப் பகையரசரோடு, தமது நால்வகைச் சேனைகளையும் அணிவகுத்துச் சென்று போரிட்டார். அதன் பிறகு இருதிறத்துப் படைவீரர்களும் போரில் வெட்டி வீழ்த்திய யானைகளின் உடற்றுண்டங்களும், குதிரைகள் உடல்கள் அறுபட்ட துண்டங்களும், போர் வீரர்களின் மலை போலக் குவிந்த  தலைகளும் ஆகிய இவற்றினின்றும் வரும் ரத்தப்பெருக்குக் கலக்கப்பெற்ற கடலானது, முன்னே உக்கிர குமார பாண்டியன் பெருகி வந்த கடல் சுவர் மேல் வாங்கியது போல, மீளவும்  இவர் வேல் வாங்கும்படி பெருகி நின்றது. குதிரைகளின் கனைப்பு ஒலியும், வீரர்களின் படைக்கலங்களின் ஒலியும், யானைகளின் பிளிற்றொலியும், இசைக்கருவிகளின் ஒலியும்  ஒன்று சேர்ந்து ஊழிக் காலத்து  மேகங்களின் முழக்கமோ என்று நினைத்து, உக்கிரகுமார பாண்டியன் போல, அவற்றைச் சிறையிடுவதற்கு விலங்கை விடுவிக்கும்படி ஒலித்தன. போர்க்களத்தில் வெட்டுண்ட உடல்கள் தோய்ந்து கிடக்கும் குருதி நிறைந்த மடுவில், பூதங்களும் பேய்களும் குளித்து நிணங்களை உண்டு கூத்தாடின. இத்தகைய கொடும்போர் மூளும்படி பொருத போர்க்களத்தில் யானைப் படையுடைய பாண்டிய மன்னனின் சேனைகளிடம் வடபுலத்தரசனுடைய சேனைகள் சிதைந்து தோற்றுப் போயின. அப்போது பாண்டியர் பெருமானாகிய நெடுமாறனார், தமது வேப்ப மாலையுடன் வாகை மாலையையும் சேர்ந்து அணிந்தார்.

 சோழ மன்னரின் திருமகளாராகிய மங்கையர்க்கரசி அம்மையாரை மணந்து இல்லறத்தில்  மகிழ்ந்து வாழ்ந்தார் நெடுமாறனார்.Trending Now: