வேலூர் தேர்தல் முடிவில் முளைத்த வினாக்கள்

09-08-2019 06:21 PM

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில், 38 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18 மாதம் தேர்தல் நடந்தது. பணப்பட்டுவாடா புகார் எதிரொலியாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில், பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நடந்த 38 தொகுதிகளில், தேனி தொகுதியை தவிர மற்ற 37 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்றன. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக சார்பில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வெற்றிபெற்றார்.

வேலூர் மக்களவை தேர்தல்

இந்நிலையில், தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் மொத்தம் 72 சதவீத வாக்குகள் பதிவாகியது.

இந்த தேர்தலில் அதிமுக சார்பில் கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

திமுக வெற்றி

இந்நிலையில், வேலூர் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. துவக்கத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றார். பின்னர், கதிர் ஆனந்தின் கை ஓங்கியது. அதிமுக வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி கர்தி ஆனந்த் முன்னிலை பெற்றார்.

இறுதியில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளுடன், 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் இருந்த ஏ.சி சண்முகம், 4,77,199 வாக்குகளுடன் தோற்கடிக்கப்பட்டார்.

வேலூரில் நாங்களே வெற்றிபெற்றுள்ளதாக எண்ணுகிறோம் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலும், ஆளும் கட்சிக்கு எதிராக, பல சவால்களுக்கு மத்தியில் வெற்றிபெற்றுள்ளதை நினைத்து திமுக பெருமிதம் கொள்கிறது.

இருதரப்பினரும், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்துவரும் நிலையில் வேலூரில் யாருக்கு பின்னடைவு? மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளது யார் என்பதை ஆய்வு செய்யவேண்டியுள்ளது.

6 சட்டமன்ற தொகுதிகள்

வேலூர் மக்களவை தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அவை பின்வருமாறு

  • வேலூர்
  • அணைக்கட்டு
  • கே.வி.குப்பம்
  • ஆம்பூர்
  • வாணியம்பாடி
  • குடியாத்தம்

6 தொகுதிகள் யார் வசம்?

இந்த 6 தொகுதிகளிலும் கடந்த 2016ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அப்போது, வேலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேயன் 88,264 வாக்குகளுடன் வெற்றிபெற்றார்.

அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியை திமுக வேட்பாளர் நந்தகுமார் 77,058 வாக்குகளுடன் கைப்பற்றினார்.

கே.வி.குப்பம் (தனித்தொகுதி) சட்டமன்ற தொகுதியில், அதிமுக வேட்பாளர் லோகநாதன் 75,612 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில், அதிமுக வேட்பாளர் பாலசுப்ரமணி 78,182 வாக்குகளுடன் வெற்றிபெற்றார்.

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் நிலோபர் 69,588 வாக்குகளுடன் வெற்றிபெற்றார்.

குடியாத்தம் (தனித்தொகுதி) சட்டமன்ற தொகுதியில், அதிமுக வேட்பாளர் ஜெயந்தி பத்மநாபன் 94,689 வாக்குகளுடன் வெற்றிபெற்றார்.

இதில் 2 தொகுதிகளை திமுகவும், 4 தொகுதிகளை அதிமுகவும் கைப்பற்றின.

ஜெயலலிதாவுக்குப் பின்...

அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அதிமுக இரண்டு பிரிவுகளாக பிரிந்தன. ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையிலான ஒரு அணியும், சசிகலா தலைமையிலான மற்றொரு அணியும் இருந்தன. சசிகலா சிறைக்குச் செல்வதால், அவரின் அறிவுரையின்படி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைத்தது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியுடன், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்தது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக தொடர்ந்த நிலையில், துணை முதல்வர் பதவி ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து, அதில் இருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 18 பேர் டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக சென்றனர். ஆளும் அரசுக்கு அச்சுறுத்தலாக அவர்கள் இருந்தனர். இதையடுத்து, அந்த 18 எம்எல்ஏக்களையும் சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தார்.

இதில், வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளின் எம்எல்ஏக்களும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

திமுக வசமான தொகுதிகள்

இதையடுத்து, கடந்த மக்களவை தேர்தலுடன், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் விஸ்வநாதன் 94,455 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றிபெற்றார். இதேபோல் குடியாத்தம் தொகுதியையும் திமுக வேட்பாளரான காத்தவராயன் 1,06,137 வாக்குகளைப்பெற்று கைப்பற்றினார். இதனால், வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில், 4 தொகுதிகள் திமுக வசம் வந்தன. அதிமுகவின் எண்ணிக்கை 2 ஆக குறைந்தது.

கள நிலவரம்

இந்நிலையில், தற்போது நடைபெற்று முடிந்துள்ள வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றுள்ளார்.

இந்த தேர்தலில், மக்கள் நீதி மய்யம், தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் போட்டியிடாததால், இது திமுக மற்றும் அதிமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் இடையிலான நேரடி போட்டியாகவே பார்க்கப்பட்டது.

எனினும், கடும் போட்டிக்குப் பின் திமுக வென்றுள்ளது. கடந்த 2004 மற்றும் 2009 மக்களவை தேர்தல்களில் திமுகவின் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர்கள் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்று மக்களவைக்கு தேர்வானார்கள். அதன் பிறகு, 2014 மக்களவை தேர்தலில் அதிமுகவின் வசம் சென்ற அந்த தொகுதியை இந்த தேர்தலில் திமுக கைப்பற்றியுள்ளது.

அதிமுக அரசு கவிழுமா?

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் எடப்பாடி அரசுக்கு, இது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. எனினும், கடுமையான போட்டியை திமுகவுக்கு கொடுத்துள்ளது என்பதில் ஐயமில்லை. பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜகவையும் முன்னிறுத்தாமல் அதிமுக இந்த தேர்தலை சந்தித்ததாலேயே அதற்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாக அரசியல் வல்லுநர்களால் கருதப்படுகிறது.

வேலூர் தொகுதியில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளையும், வேலூர் பாராளுமன்ற தொகுதியையும் திமுக கைப்பற்றியுள்ளதால், அதிமுக வசம் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளான கே.வி.குப்பம் மற்றும் வாணியம்பாடி தொகுதிகளின் எம்எல்ஏக்களையும் ராஜினாமா செய்ய கோருவாரா திமுக தலைவர் ஸ்டாலின்?. இப்படி, தொடர் வெற்றிகளை சந்திக்கும் திமுக, மாநில அதிமுக அரசை கவிழ்க்க ஊக்கம் பெறுமா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை வரும் நாட்களே தீர்மானிக்கும்.Trending Now:
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர் கருத்துக்கள் :

Hari Krishnan 2019-08-21 11:53:18
Super bro keep going

Guna 2019-08-10 17:28:47
Super thambi