துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 41

09-08-2019 03:48 PM

காந்திய தொண்டர் சேலம் சுப்பிரமணியம்

மாணவப் பருவம் முதலே தேச பக்தியில் ஊறித் திளைத்த சுதந்திரப் போராட்ட தியாகி, காந்தியத் தொண்டர் சேலம் ஏ.சுப்பிரமணியம் அவர்கள் பற்றிய விவரங்களை இந்த வாரம் பார்ப்போம்.

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில், 1919–ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் ‘ரெளலட் சட்டம்’ என்கிற அடக்குமுறைச் சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. தேச விடுதலைக்காக குரல் கொடுப்போரைக் கைது செய்து கடும் தண்டனைகளை பெற்றுத்தர வகை செய்கிற இந்த அராஜக சட்டத்தை எதிர்த்து மகாத்மா காந்தி குரல் கொடுத்தார். அப்போது நாடு முழுவதும், இந்த ‘ரெளலட்’ அடக்குமுறைச் சட்டத்திற்கு எதிராக ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. பல இடங்களில் பெரும் அமளி ஏற்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இச்சட்டத்திற்கு எதிரான ஊர்வலங்களும், போராட்டங்களும் நடைபெற்றன. அப்போது சேலம் நகரில் நடைபெற்ற ரெளலட் சட்ட எதிர்ப்பு ஊர்வலம் குறித்து பள்ளிச் சிறுவன் ஒருவன் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து, அந்த ஊர்வலத்தில் திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டான். அந்த சிறுவன்தான் சேலம் ஏ.சுப்பிரமணியம்.

பள்ளிப்பருவத்திலேயே நாட்டுப்பற்றும், தேச பக்தியும் கொண்ட சுப்பிரமணியம், சேலத்தில் நடைபெறுகிற அனைத்துக் கூட்டங்களிலும், முன் வரிசையில் அமர்ந்து, தலைவர்களின் பேச்சைக் கேட்பது, உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் நடத்தும் ஊர்வலம், மற்றும் கூட்டங்களில் பங்கேற்பது என்பதை தமது தலையாய கடமையாக கருதி செயல்பட்டுள்ளார். கூட்டம் தொடங்குவதற்கு முன்பும் கூட்டம் முடிந்த பின்பும் ‘வந்தே மாதரம்’, ‘பாரத்மாதாகி ஜே’ என்று முழக்கமிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்த சுப்பிரமணியம், ஆரம்ப காலத்தில் திலகரின்  தீவிரவாத சுதந்திரப்போரில் நாட்டம் ஏற்பட்டு அத்தகைய உணர்வுள்ள வீரர்களின் ஆலோசனைகளை பெற்று செயல்பட்டார்.

1922–ம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் இந்தியா வருகை தந்தபோது அவரது வருகையை எதிர்த்து ஆங்காங்கே மறியல் போராட்டங்கள் நடந்தன. சென்னையில் ஆந்திரகேசரி டி.பிரகாசம் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சேலம் சுப்பிரமணியமும் கலந்து கொண்டார். அப்போது, மறியலில் ஈடுபட்டவர்களை ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசின் போலீசார் காட்டு மிராண்டித்தனமாக தாக்கி விரட்டி அடித்துள்ளனர். இதில் சுப்பிரமணியத்தின் மண்டை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது. இந்த காயம் ஆற பல நாட்கள் ஆயின. இதன் பிறகு பிரிட்டிஷாரின் மீதான இவரது கோபம் பலமடங்கு தீவிரமானது. வன்முறை வழியே சரியானது, ‘மயிலே  மயிலே இறகு போடு என்றால் போடாது’ ‘அடிமேல் அடி அடித்தால்தான் அம்மியும் அசையும்’ என்ற ரீதியில் தமது சகாக்களோடு சுப்பிரமணியம் பேசி வந்ததுடன், திலகரின் சீடர்களாக தமிழகத்தில் இருந்தவர்களுடன் தொடர்புகொள்ள முயற்சித்தார்.

1927–ம் ஆண்டு காந்திஜி தமிழகம் வந்து, அஹிம்சை வழிப் போராட்டமே தேச விடுதலைக்கு உகந்தது என உரையாற்றியதை தொடர்ந்து, சேலம் சுப்பிரமணியம் உள்ளிட்ட பல இளைஞர்கள் காந்திய அஹிம்சை வழி, அறவழியே சரியான தீர்வு எனக் கருதி மனம் மாறத் தொடங்கினர். 1930–ம் ஆண்டு மகாத்மா காந்தி உப்பு சத்தியாக்கிரகத்தை அறிவித்து சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டிப் பகுதிவரை சத்தியாக்கிரக யாத்திரை நடத்தினார்.

காந்திஜியின் பிரதம தொண்டராக, அவரது மனச்சாட்சியாக விளங்கிய ராஜாஜி தமிழகத்தில் திருச்சியில் தொடங்கி வேதாரண்யம் வரை உப்பு சத்தியாக்கிரக யாத்திரை நடத்தினார்.

அப்போது தலைநகர் சென்னையில் துர்காபாய் தேஷ்முக் தலைமையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை முன்பு உப்புக் காய்ச்சும் போராட்டம் நடத்த காங்கிரஸ் தொண்டர்கள் பலர் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில் தொண்டர்களை வழிநடத்திச் சென்ற சுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தினர். இதனால் 40க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் படுகாயம் அடைந்தனர். தியாகி ஜமதக்கனி நாயக்கர், திருவேங்கட நாயக்கர், சேலம் சுப்பிரமணியம் உள்ளிட்ட ஒரு சிலர் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். உடனே, துர்காபாய் தேஷ்முக், படுகாயமுற்று சுயநினைவு இன்றி கிடந்த தியாகிகளை தனது வேனில் ஏற்றிச் சென்று ராமாராவ் மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.

உடல் நலம் தேறி சேலம் சென்ற சுப்பிரமணியம், மீண்டும் சில மாதங்கள் கழித்து சென்னை வந்து, சூளைப்பகுதியில் நடைபெற்ற மறியலில் கலந்து கொண்டு ஒரு வருடம் சிறைவாசம் அனுபவித்துள்ளார். சேலத்திலும், சென்னையிலும் மதுவிலக்கு பிரச்சாரத்திலும் இவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ஒரு முறை சேலம் புறநகர் பகுதியில் சுப்பிரமணி தனியாக சென்று  கொண்டிருந்தபோது கள்ளுக்கடை முதலாளிகள் ஏவிவிட்ட அடியாட்கள் அவரை கடுமையாக தாக்கி சோளக்காட்டிற்குள் தூக்கி வீசிக் சென்றுவிட்டனர். குற்றுயிரும், குலையுயிருமாக கிடந்த இவரை அந்த வழியாக சென்றவர்கள் காப்பாற்றி மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். ஓரளவு உடல்நலம் தேறிய இவர் மீது பொய் வழக்கு ஒன்றை பதிவு செய்து ஓராண்டு சிறை தண்டனையும் விதித்தனர்.

1940–ம் ஆண்டு காந்திஜி அறிவித்த தனி நபர் சத்தியாக்கிரகத்தில், தமிழ் நாட்டை சேர்ந்த ஏராளமான தியாகிகள் பங்கேற்றுச் சிறை சென்றனர். சேலம் சுப்பிரமணியம், முந்தைய தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் சென்று அங்கு சக்தியா கிரகத்தில் ஈடுபட்டார். இவரைக் கைது செய்து 16 மாத கடுங்காவல் தண்டனை விதித்தனர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்.

‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என முழக்கமிட்டு தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட சுப்பிரமணியம் இறுதிக் காலத்தில் சர்வோதயத் திட்டத்தால் ஈர்க்கப்பட்டு ஏழை – எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்து, சுதந்திரத்தின் எந்தவித பலனையும் அனுபவிக்காமல், இறுதிவரை காந்திய தொண்டனாகவே இருந்து மறைந்துள்ளார். அவரது தியாகத்தைப் போற்றுவோம்!