இது உங்கள் இடம்!

08-08-2019 07:08 PM


விருதுநகரை பின்பற்றுமா?

வாசுதேவநல்லுார் அர்த்தநாரீஸ்வரர் கோயில் தெப்ப திருவிழாவிற்கு ஆண்டுதோறும் அதிக பணம் செலவழித்து நீர் கொண்டு வரப்பட்டு நிரப்பப்படுகிறது. தெப்பத்திற்கு நிரந்தரமாக நீர் வருவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. 1. ஊருக்கு மேற்கே உள்ள ஊருணியிலிருந்து வாய்க்கால் மூலம் கொண்டு வரலாம். 2. விருதுநகர் மாரியம்மன் கோயிலிலுள்ள தெப்பத்திற்கு அக்கோயிலை சுற்றியுள்ள வீடுகளில் உள்ள குழாய்களை இணைத்து மழை நீரை நேரடியாக தெப்பத்தில் விடுகிறார்கள். இதனால் ஆண்டு முழுவதும் தெப்பத்தில் தண்ணீர் உள்ளது. அருகிலுள்ள வீடுகளிலும் போர்வெல்லில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதே போல் வாசுதேவநல்லுாரிலுள்ள நான்கு ரத வீதிகளில் உள்ள வீடுகளை இணைத்து தெப்பத்தில் விழ செய்தால் நிரந்தரமாக நீர் பெருக்கலாம். விருதுநகரை பின்பற்றுமா வாசுதேவநல்லுார்?

– பா. இசக்கிமுத்து, வெள்ளானைக்கோட்டை.

அவர்களும் மனிதர்கள்தானே?

எங்கள் மாதர் சங்கத்திற்கு சமூக ஆர்வலர்கள் வந்து குப்பைகளை வீதியில் கொட்டாமல் சுற்றுப்புற துாய்மையை பற்றி கலந்துரையாடினார்கள். வந்திருந்தவர்களில் ஒரு பெண்மணி பெண்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய விஷயம் ஒன்றை கூறினார்கள். நிறைய இளம் தாய்மார்கள் குழந்தைகளுக்கு போடும் நேப்கின்களை கழற்றி அப்படியே குப்பை தொட்டியில் போட்டு விடுகின்றனர். சிலர் வீதியில் வீசி விடுகின்றனர். இது பெரும் தவறு. இப்படி செய்வதால் பாதிக்கப்படுவது துப்புரவு பணியாளர்களே! அவர்களும் மனிதர்கள் தானே? எனவே ஒரு பேப்பரிலோ, காகிதப் பையிலோ நேப்கினை வைத்து சுருட்டி மடித்து, நுாலால் கட்டிப் போடலாம். அல்லது ரப்பர் பேண்ட் போட்டு விட்டால் பிரியாது. நகரமும் சுத்தமாக இருக்கும். அசுத்தத்தால் வரும் நோய்கள் பரவாது. சற்றே மெனக்கெட்டால் போதும்.

– என். கோமதி, பெருமாள்புரம்.

மழைநீர் சேமிப்பும் அலங்கார தரை கற்களும்!

தற்போது தமிழகத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு பல இடங்களிலும் நிலவி வருகின்றது. மழை நீரை சேமிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயரச் செய்யவும் வேண்டி வீடுகள்தோறும் மழை நீர் சேமிப்பு அமைப்பினை வைக்க வேண்டும் என அரசு கூறி வருவதோடு அதனை செயல்படுத்தவும் தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆனால் தெருக்கள்தோறும் மழைநீர் நிலத்தில் இறங்காவண்ணம் அலங்கார தரை கற்களை பதித்து உள்ளனரே. இப்படி அலங்கார தரை கற்களை பதித்தால் மழைநீர் வீணாகுமே? நிலத்தில் மழைநீர் இறங்க இயலாமல் போய்விடும் என அவர்களுக்கு தோன்றவில்லையா? இத்தகைய கற்களை பதித்து கோடிக்கோடியாக பணத்தை விரயம் பண்ணியதோடு ஒப்பந்தக்காரர்களும் அதிகாரிகளும் பணம் சம்பாதித்தனர். நீர் பூமியில் இறங்காமலும் செய்து விட்டனர். தெருக்களில் போட்ட கற்களை அகற்ற வேண்டும். முன்பு போல் தெருக்களில் மண் இருத்தல் வேண்டும். ஆங்காங்கே மரங்களை நடவேண்டும். ஓடைகளை சீர்படுத்த வேண்டும். குளங்களை ஆழப்படுத்தும் மண்ணை தெருக்களில் கொட்டி சமன் செய்ய வேண்டும். இவ்விதம் செய்தால்தான் நிலத்தடி நீர் உயரும்.

– கே. அனந்தநாராயணன், கன்னியாகுமரி.

பொதுமக்களே உஷார்!

தென் தமிழகத்தில் மாட்டிறைச்சி அதிகமாக விற்பனையாகும் இடம் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் ஆகும். இங்கு விற்பனை யாகும் இறைச்சி கழிவுகளான எலும்பு மற்றும் ஜவ்வு போன்றவற்றை தனியாக விற்பனை செய்கிறார்கள். இந்த எலும்புகள் சூப் மற்றும் உரத்திற்கு பயன்படுகிறது. இதில் அதிர்ச்சியான செய்தி என்னவென்றால் ஜவ்வு என்ற சதைப்பகுதி கழிவுகளை திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்ட சூப் மற்றும் பொறித்த இறைச்சி விற்பனை செய்யும் ரோட்டோர கடைக்காரர்கள் (சில / பல அசைவ ஓட்டல்களும்) கீழே கொட்டப்படக்கூடிய அந்தக் கழிவுகளை விலைகொடுத்து வாங்கி அவற்றைக் கொண்டு சூப் மற்றும் பொரியல் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.

முக்கியமாக மாலை மற்றும் இரவு நேரக்கடைகளில் அதை வாங்கி சாப்பிட்ட பலர் கடுமையான தீராத வயிற்று நோய்களினால் அவதிப்படு கிறார்கள். சிலர் இறந்தும் இருக்கிறார்கள். எனவே சூப் மற்றும் இறைச்சிப் பிரியர்கள் இப்படிப்பட்ட மண்ணில் புதைத்து அழிக்கப்பட வேண்டிய கழிவுகளை கொண்டு தயாரிக்கப்படும் சூப் மற்றும் பொரியல் போன்றவற்றை தவிர்த்திடுங்கள். உடல் நலனை பாதுகாத்துக் கொள்ளுங்கள். இது பற்றி சுகாதார ஆய்வாளர்கள் என்ன செய்கிறார்கள்?

– கே. ராஜா, மேலப்பாளையம்.Trending Now: