பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 11 –8–19

08-08-2019 06:26 PM

ராஜ்­ய­ச­பா­வுக்கு சமீ­பத்­தில் ஆறு பேர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார்­கள்.  தகுதி இல்­லாத பலர் ராஜ்­ய­ச­பா­வுக்கு பல கட்­சி­க­ளால் அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். ஆனால், இந்த முறை நடந்த ராஜ்­ய­சபா தேர்­தல் மூலம் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட வைகோ ராஜ்­ய­ச­பா­வுக்கு போயி­ருப்­பது மகிழ்ச்­சிக்­கு­ரிய விஷ­யம். எனக்கு வைகோ­வோடு பல கருத்­துக்­க­ளில் முரண்­பாடு உண்டு.  ஒரு மனி­த­ரோடு எல்லா விஷ­யங்­க­ளி­லும் உடன்­பட வேண்­டும் என்­பது கட்­டா­யம் இல்லை. அதே சம­யம் நாம் முரண்­ப­டு­கிற மனி­த­ரின் திற­மை­களை, உழைப்பை. நல்ல தன்­மை­களை நாம்  மதிக்­கத் தவ­றக்­கூ­டாது. நமக்கு உடன்­ப­டாத கருத்தை பேசு­கி­றார் என்­ப­தா­லேயே ஒரு­வ­ரின் எல்லா செயல்­பா­டு­க­ளை­யும் நாம் வெறுப்­போடு பார்க்­கக்­கூ­டாது.

 ராஜ்­ய­சபா உறுப்­பி­னர் தேர்வு என்­பது இப்­போது மலி­வா­கப் போய்­விட்­டது.  பார்­லி­மென்ட்­டில் ராஜ்­ய­சபா என்­பது 245 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்­டது.  லோக்­ச­பா­வுக்கு மக்­க­ளின் வாக்­கு­களை பெற்ற யார் வேண்­டு­மா­னா­லும் போய்­வி­ட­லாம். ஆனால் ராஜ்­ய­சபா உரு­வாக்­கப்­பட்­ட­தன் நோக்­கமே அங்கே  கற்­ற­வர்­களை, அறி­வு­ஜீ­வி­களை, எழுத்­தா­ளர்­களை, கலை­ஞர்­களை இடம் பெறச் செய்ய வேண்­டும். அவர்­கள் கருத்­தும் இந்­திய பார்­லி­மென்ட்­டில் ஒலிக்க வேண்­டும் என்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்­டது. முன்பு ராஜ்­ய­ச­பா­வுக்கு நன்­றாக படித்­த­வர்­கள், படிப்­ப­வர்­கள், பல விஷ­யங்­க­ளில் தேசிய, மாநில அக்­கறை உள்­ள­வர்­க­ளைத்­தான் தேர்ந்­தெ­டுத்து அனுப்­பு­வார்­கள்.

 அந்த வகை­யில் இந்த முறை ராஜ்­ய­ச­பா­வுக்கு தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட ஆறு பேரில் முதன்­மை­யா­ன­வர் வைகோ என்­பதை நான் உறு­தி­யா­கச் சொல்­வேன்.   நான் முதன்­மு­த­லாக வைகோ ( அப்­போது அவர் வை. கோபால்­சா­மி­தான்)வைப் பார்த்­தது 1982ம் வரு­டம். அப்­போது திருச்­செந்­தூர் முரு­கன் கோயி­லில் ஒரு வேல் காணா­மல் போனது. அது தொடர்­பாக  அங்கே பணி­யாற்­றிய சுப்­ர­ம­ணிய பிள்ளை மர்­ம­மான முறை­யில் இறந்து போனார். அப்­போது எம்.ஜி. ஆர்., ஆட்சி. திமுக தலை­வர் கரு­ணா­நிதி, மது­ரை­யி­லி­ருந்து திருச்­செந்­தூர் வரை நீதி கேட்டு நடந்தே நெடும்­ப­ய­ணம் போனார்.  ஒரு பகுதி நேர நிரு­ப­ராக நானும் அந்த நடைப் பய­ணத்­தின் செய்­தியை சேக­ரிக்க போனேன். அப்­போது உய­ர­மான ஒரு­வர்  ஒரு சிவப்பு கலர் சட்டை, ஒரு கறுப்பு பேண்­டு­டன், கரு­ணா­நிதி போகிற பாதை­யில் கற்­க­ளை­யும், முற்­க­ளை­யும் அப்­பு­றப்­ப­டுத்­திக் கொண்டே போனார். உடன் வந்த நிரு­பர்­க­ளோடு, ஆங்­கி­லத்­தி­லும், தமி­ழி­லும் சர­ள­மாக உரை­யா­டிக் கொண்டே வந்­தார். நடக்க முடி­யாத நிரு­பர்­க­ளுக்கு வாக­னங்­கள் ஏற்­பாடு செய்து கொடுத்­தார். அது­வ­ரை­யில் அவர் யார் என்­பதே எனக்­குத் தெரி­யாது. பிற­கு­தான் அவர் வை. கோபால்­சாமி என்­பதை தெரிந்து கொண்­டேன். அவர் ஒரு எம்.ஏ. பி.எல்., பட்­ட­தாரி, சொந்த ஊர் நெல்லை மாவட்­டத்­தின் கலிங்­கப்­பட்டி என்­ப­தை­யும் தெரிந்து கொண்­டேன்.

 1983ம் வரு­டம் நான் ஆனந்த விக­டன் குழு­மத்­தின் ஜூனி­யர் விக­டன் பத்­தி­ரிகை துவக்­கப்­பட்­ட­ போது அதன் முதல் நிரு­ப­ராக சேர்ந்­தேன். அப்­போது நான் ஆனந்த விக­டன் பத்­தி­ரி­கை­யில் ‘சாண்ட் விச்’ என்று ஒரு பகு­தியை எழுதி வந்­தேன். அதில் அர­சி­யல்­வா­தி­க­ளின் இன்­னொரு பகுதி – அதா­வது அவர்­க­ளு­டைய இலக்­கிய, சரித்­திர, இசை, விளை­யாட்டு ஆர்­வங்­க­ளைத் தெரிந்து கொண்டு எழு­தி­னேன். அந்­தப் பகு­திக்­கா­கத்­தான் நான் வை. கோபால்­சா­மியை  அண்ணா நக­ரி­லி­ருந்த அவர் இல்­லத்­தில் சந்­தித்­தேன். அந்த சந்­திப்­பைத் தொடர்ந்து, ஆனந்த விக­ட­னில் அவ­ரது பேட்டி இரண்டு பக்­கங்­கள் வெளி­வந்­தது. அப்­போதே  அவ­ரு­டைய பல்­வேறு ஆர்­வங்­கள், கடு­மை­யான உழைப்பு, ஆழ்ந்த படிப்பு இவை­யெல்­லாம் என்­னைக் கவர்ந்­தன.

 1986ம் ஆண்டு. அப்­போது நல்ல குளிர் காலம்.  பார்­லி­மென்ட் கூட்­டத் தொடர் நடந்து கொண்­டி­ருந்­தது.  அப்­போது நான் டில்­லிக்கு சென்­றி­ருந்­தேன். பார்­லி­மென்ட்­டின் மத்­திய மண்­ட­பத்­தில் என்னை வைகோ சந்­தித்­தார். அப்­போது காலை பதி­னோரு மணி இருக்­கும். என்­னைப் பார்த்து நலம் விசா­ரித்­த­வர், நான் எங்கே தங்கி இருக்­கி­றேன் என்­பதை விசா­ரித்­துத் தெரிந்து கொண்­டார். மாலை ஆறு மணி அள­வில் நான் தங்­கி­யி­ருந்த ஓட்­ட­லுக்கே வந்­து­விட்­டார்.  நான் டில்­லி­யில் இருக்­கும்­போது நீங்­கள் ஓட்­ட­லில் தங்­க­லாமா  என்று வற்­பு­றுத்தி தன்னை தன் இல்­லத்­திற்கே அழைத்­துச் சென்­றார். `நீங்­கள் என்­னைப் பற்றி ஒரு வரி கூட எழுத வேண்­டாம். ஆனால் என்­னு­டன் தங்­குங்­கள்’– இது­தான் அவ­ரது அன்பு வேண்­டு­கோள்.

 அங்கே இருந்த சில நாட்­க­ளில் அவ­ரு­டன் பார்­லி­மென்ட்­டிற்கு சென்­றேன். அப்­போது ராஜீவ் காந்­தி­தான் பிர­த­மர். இலங்கை விவ­கா­ரம் குறித்து பார்­லி­மென்ட்­டில் விவா­தம் வந்­தது. வைகோ பேச எழுந்த போது, பிர­த­மர் ராஜீவ் காந்தி, அவையை விட்டு வெளியே கிளம்­பி­னார். அப்­போது இரண்டு முறை வைகோ மரி­யா­தை­யாக ‘மிஸ்­டர் பிரைம் மினிஸ்­டர்’  என்­ற­ழைத்­தார். ஆனால் காதில் போட்­டுக் கொள்­ளா­மல் கிளம்­பி­ய­போது,  மிக­வும் உரத்த குர­லில் ` மிஸ்­டர் ராஜீவ் காந்தி’ என்று முழங்­கி­னார். ராஜீவ் காந்தி உட்­பட, ராஜ்­ய­சபா  உறுப்­பி­னர்­களே திகைத்­துப் போனார்­கள். கார­ணம் ஒரு பார­தப் பிர­த­மரை எந்த உறுப்­பி­னர்­க­ளும் அவை­யில் பெயர் சொல்லி அழைப்­பது கிடை­யாது. ராஜீவ் காந்தி இவர் செய்த கர்­ஜ­னை­யில் இருக்­கை­யில் வந்து அமர்ந்து இவர் பேச்­சைக் கேட்­கத் தொடங்­கி­னார்.

 இந்த நிகழ்­வுக்கு முதல் நாள் இரவு. நானும் வைகோ­வும் வெளியே இரவு   உணவை முடித்­து­விட்டு, அவர் வீட்­டுக்கு வந்­தோம். எனக்­காக அங்கே இருந்த கடைசி அறையை ஒதுக்­கிக் கொடுத்­தார். நாளை பார்­லி­மென்ட், அதற்­காக நான் தயார் செய்ய வேண்­டும்  என்­றார். அங்கே முன்னே ஒரு அறை. அது சிறிய நூல­கம் மாதிரி இருக்­கும். கண்­ணாடி போட்ட கதவு. விடி­காலை நான் எழுந்த போது அந்த அறை­யின் விளக்­கு­கள் எரிந்து கொண்­டி­ருந்­தன.  அங்கே போய் அந்த கண்­ணாடி வழி­யாக எட்­டிப் பார்த்­தேன். தரை­யில் அமர்ந்­த­படி, தன்­னைச் சுற்­றி­லும்  புத்­த­கங்­கள் வைத்­த­படி, மடி­யில் ஒரு தலை­ய­ணையை வைத்­த­படி குறிப்­புக்­கள் எடுத்­துக் கொண்­டி­ருந்­தார் வைகோ.

 அவர் பார்­லி­மென்ட்­டில் பேசு­வ­தற்­காக எடுத்­துக்­கொள்­ளும் கடின உழைப்பு கண்டு வியந்து போனேன். அவர் என்­னைப் பற்றி எது­வும் எழுத வேண்­டாம் என்று சொன்­னா­லும், நான் திரும்பி வந்து, ஆனந்த விக­ட­னில் ` ராஜ்ய சபா டைகர்’ என்ற தலைப்­பில் ஒரு கட்­டுரை எழு­தி­னேன்.

 1989ம் ஆண்டு அவர் வீட்­டிற்கு என்னை ஒரு மதிய விருந்­திற்கு அழைத்­தி­ருந்­தார். மறு­நாள் தான் வெளி­நாடு போகப் போவ­தா­கத்­தான் என்­னி­டம் சொன்­னார். ஒரு பார்­லி­மென்ட் உறுப்­பி­னர் வெளி­நா­டு­க­ளுகு இந்­திய பிர­தி­நி­தி­யாக போவது என்­பது வியப்­பான விஷ­ய­மில்­லை­தான். ஆனால் அவர் பேசும் போது அவர் குரல் உணர்ச்­சி­வ­ய­மாக இருந்­தது. ஆனா­லும் பய­ணம் குறித்து அவர் ஒன்­றும் சொல்­ல­வில்லை. ஆனால் எனக்கு உரித்­தான சந்­தே­கத்­தில் லேசாக அவர் பய­ணம் குறித்து விசா­ரிக்­கத் தொடங்­கி­னேன். அவர் புலி­கள் தலை­வர் பிர­பா­க­ரனை சந்­திக்க பட­கில் ரக­சி­ய­மாக பய­ணம் செய்­கி­றார் என்­பதை உறுதி செய்து கொண்­டேன். அதை ஜூனி­யர் விக­ட­னின் அட்­டை­யில் ஒரு தக­வ­லாக வெளி­யிட்­டேன். தமிழ்­நாட்­டில் ஒரு பிர­ள­யமே நடந்­தது. வைகோ அங்கே இருக்­கும் போது இந்த செய்­தியை பார்த்­து­விட்டு திமு­க­வின் பொதுச் செய­லா­ளர் அன்­ப­ழ­கன், பார்­லி­மென்ட் உறுப்­பி­னர் வைகோ­வின் இலங்கை பய­ணத்­திற்­கும் திமு­க­விற்­கும் எந்­தத் தொடர்­பும் இல்லை என்று அறி­வா­ல­யத்­தில் செய்­தி­யா­ளர்­களை சந்­தித்து அறிக்­கையே வெளி­யிட்­டார்.

  வைகோ­வின் இலங்கை பய­ணத்தை முதன்­மு­த­லாக நாட்­டுக்கு ஜூனி­யர் விக­டன்­தான் தெரி­வித்­தது.  வைகோ 1978ம் வரு­டம் ராஜ்ய சபா உறுப்­பி­ன­ரா­னார்.  பதி­னெட்டு ஆண்­டு­கள் அவர் அங்கே உறுப்­பி­ன­ராக இருந்து அவர் பேசிய உரை­கள், 1978ம் ஆண்­டி­லி­ருந்து 1988ம் ஆண்டு வரை அவர் ஆற்­றிய உரை­கள் தொகுக்­கப்­பட்டு ` நாடா­ளு­மன்­றத்­தில் நமது குரல்,’ ரத்­தம் கசி­யும் இத­யத்­தில் குரல்’ ஆகிய இரண்டு நூல்­கள் வெளி­யா­கின. 13வது பார்­லி­மென்ட் லோக்­ச­பா­வில் அவர் ஆற்­றிய உரை­கள் ` வைகோ­வின் சங்­க­நா­தம்’ என்ற தலைப்­பில் தமி­ழி­லும்,  ‘VAIKO’S CLARION CALL’ என்று ஆங்­கி­லத்­தி­லும் தொகுக்­கப்­பட்டு 1999ம் ஆண்டு நூல்­க­ளாக வெளி­யா­கின. 1990 களுக்­குப் பிறகு பார்­லி­மென்ட்­டுக்கு என தனி­யாக தொலைக்­காட்­சியே தொடங்­கப்­பட்­டு­விட்­டது. அனைத்து உரை­க­ளும், நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பா­கின்­றன.   1998 முதல் 2002 வரை­யி­லும் பார்­லி­மென்ட்­டில் வைகோ ஆற்­றிய உரை­கள், ஒளிப்­ப­டங்­க­ளா­கவே பார்க்­கக் கூடிய வாய்ப்­பு­கள்  உள்­ளன. ஆனால், அதற்கு முந்­தைய கால­கட்­டத்­தில் அவர் பேசிய உரை­களை புத்­த­கம் வாயி­லா­கத்­தான் அறிய முடி­யும்.

 ராஜ்­ய­ச­பா­வில்  நேதா­ஜி­யின் நெருங்­கிய சகா எச். வி காமத்,  இந்­திய கம்­யூ­னிஸ்ட் இயக்­கத்­தைச் சேர்ந்த டாங்கே, புபேஷ் குப்தா, ஹீரேன் முகர்ஜி, இந்­தி­ர­ஜித் குப்தா,  சோம்­நாத் சாட்­டர்ஜி,  நம்­மு­டைய தமி­ழ­கத்­தைச் சேர்ந்த பி. ராம­மூர்த்தி.  அம்­பேத்­கர், ராம் மனோ­கர் லோகியா, மது லிமயே, மது தண்­ட­வதே, கிரு­ப­ளானி, மினு மசானி, ஜார்ஜ் பெர்­னாண்­டஸ், இந்­தி­ரா­வின் கண­வர் பெரோஸ் காந்தி போன்­ற­வர்­கள் அரு­மை­யான பார்­லி­மென்ட் உறுப்­பி­னர்­கள், அந்த வரி­சை­யில் வைகோ­வும் நிச்­ச­யம் இடம்­பெ­று­வார் என்­ப­தில் சந்­தே­க­மில்லை.Trending Now: