கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 191

05-08-2019 03:28 PM

ஜெயிலுக்கு போய் வந்த சிரேஷ்டர் – 1

சில நாட்­க­ளுக்கு முன்­னால் பத்­தி­ரி­கை­யில் வந்த ஒரு செய்தி. திருட்­டுக் குற்­றத்­திற்­காக  புழல் சிறை­யில் இருந்த சென்­னை­வாசி ஒரு­வர், பிணை­யில் வெளியே வந்­தார். ஆனால் வீடு திரும்­பி­ய­வ­ருக்கு சரி­யான மரி­யாதை இல்லை. ஜெயி­லுக்­குப் போய் வந்த சிரேஷ்ட(கன­வான்)ரைப் பார்த்து, சோம்­பேறி, தண்­டச்­சோறு, கள­வாணி என்­றெல்­லாம் ஏசி­னார்­கள். இந்த வச­வு­க­ளைக் கேட்­டுக்­கொண்டு இருப்­ப­தற்கு அவர் என்ன மானம் கெட்­ட­வரா என்ன?!

திருட்­டுத்­தொ­ழி­லின் நெளிவு சுளி­வு­களை தெரிந்து வைத்­தி­ருந்­த­வர் வெளியே வந்­தார். சி.சி.டிவி கேமி­ராக்­கள் எங்­கெல்­லாம் பொருத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன என்று பார்ப்­ப­தில் அவர் கில்­லாடி. அவ­ரு­டைய முகம் கேமி­ராக்­க­ளில் நன்­றா­கத் தெரி­கி­ற­வாறு அப்­ப­டி­யும் இப்­ப­டி­யும் முகத்­தைக் காட்­டி­னார். முகம் நிச்­ச­ய­மா­கப் பதி­வா­கி­யி­ருக்­கும் என்ற உறு­தி­யு­டன் ஒரு மோட்­டார் சைக்­கிளை திருட தொடங்­கி­னார்! இந்த வகை­யில் திருடி விட்டு அவர் காத்­துக்­கொண்­டி­ருந்­தார். காவல் துறை­யி­னர் வந்து  அவ­ரைப் பிடித்­துச் சென்­றார்­கள். அவர்­க­ளைத்­தான் அவர் எதிர்­பார்த்­துக்­கொண்­டி­ருந்­தார்!

சில திரு­டர்­கள் திருந்­தவே மாட்­டார்­கள். அவர்­கள் சும்மா இருந்­தா­லும் கை அரிக்க ஆரம்­பித்­து­வி­டும்.  பிறர் பொருள் மீது கையை வைத்­துக் கள­வா­டி­ய­தும் அரிப்பு தற்­ச­ம­யத்­திற்கு நின்­று­வி­டும்! அந்த மாதி­ரி­தான் இந்த ஆளும் என்று காவல் அதி­கா­ரி­கள் நினைத்­தார்­கள்.

ஆனால் ஜாமி­னில் வெளியே வந்­த­வு­டன் உடனே உள்ளே திரும்­பிய இந்த நப­ரின் கதை வேறு­வி­த­மாக இருந்­தது. அவ­ருக்கு வெளியே இருப்­ப­தை­விட உள்ளே இருப்­பது பிடித்­தி­ருந்­தது. சொந்த வீட்­டை­விட மாமி­யார் வீடு­தான் அவ­ருக்கு ஒத்­து­வந்­தது.

மூன்று வேளை சாப்­பாடு, இருப்­ப­தற்கு அறை (அதற்­குப் பெயர் சிறை என்­றி­ருந்­தால் என்ன கெட்­டுப் போச்­சாம்), அதை­யெல்­லாம் தாண்­டித்  தன்­னைப்­போ­லவே தொழில்­பற்று உள்ள நண்­பர்­கள்....சிறை­வா­சத்­தின் மீது இந்த திரு­ட­ருக்கு ஒரு­வி­தப் பாசம் இருப்­பதை சிறை அதி­கா­ரி­கள் கண்­ட­னர். இதை சிறை நிர்­வா­கத்­தின் வெற்றி என்று சொல்­வதா, தண்­டனை முறை­யில் தோல்வி என்று கொள்­வதா புரி­ய­வில்லை....

ஏதோ பிக்­னிக் செல்­வ­து­போன்ற உணர்­வு­டன் சிறைக்­குக் கைதி­கள் வந்­து­கொண்­டி­ருந்­தால் குற்­றங்­களை எப்­ப­டித் தடுப்­பது?

உண்மை நிகழ்ச்­சி­யில் நாம் கண்ட சிறைப்­ப­ற­வை­யின் கதை போலவே, சரிதா, சிவ­கு­மார், பூர்­ணம் விஸ்­வ­நா­தன் நடித்த ‘ஆணி­வேர்’ (1981) படத்­தில் ஒரு காட்சி.

கைதி­கள் பலர் ஒரு சிறை­யில் இருக்­கி­றார்­கள். அப்­போது இரண்டு கைதி­கள் அடுத்த நாள் விடு­தலை அடை­வது தொடர்­பாக, நாச்­சி­முத்து என்­ப­வர் (வி.கோபா­ல­கி­ருஷ்­ணன்),  கூட்­டத்­தில் பேசு­வ­து­போல் பேசு­கி­றார்: ‘‘நண்­பர்­களே...பல வரு­ஷங்­களா நாமெல்­லாம் அண்­ணன் தம்பி போல் பழ­கு­றோம். ஒரே மாதிரி சோறு, ஒரே மாதிரி துணி­மணி,  ஒரே மாதிரி இருக்­கிற இடம். நம்­மள்ள ரெண்டு பேரு நம்மை விட்டு இன்­னிக்­கிப் பிரி­ய­றாங்­கங்­கிற போது,  ஒரு பக்­கம் சந்­தோ­ஷமா இருந்­தா­லும், ஒரு பக்­கம் மன­சுக்கு ரொம்ப கஷ்­ட­மாத்­தான் இருக்கு!’’  

ஏதோ அலு­வ­ல­கப் பிரிவு உப­சார விழா­வில் பேசு­வ­து­போல் பேசும் நாச்­சி­முத்து, ‘அங்­கப்­பனை  சிறப்­புரை ஆற்­றும்­படி கேட்­டுக்­கி­றேன்’ என்று முடிக்­கி­றார்!

அங்­கப்­பன் (சிரிப்பு நடி­கர், காமெடி டிராக் எழுத்­தா­ளர் ஏ. வீரப்­பன்), கட்­சிப்­பேச்­சுப் பாணி­யிலே பேசும் போது, ‘‘இங்கு மணி­ய­டித்­தால் சோறு, முடி­வ­ளர்ந்­தால் மொட்டை என்று சுக­போ­க­மாக இருந்­து­விட்டு, நாளை வெளி­யில் சென்று அரி­சிக்­கும் பருப்­புக்­கும் ஆளாய் பறக்­கப்­போ­கி­றார்­கள் என்று நினைக்­கும் போது, பரி­தா­ப­மாக இருக்­கி­றது’’ என்று கூறி, விடு­தலை ஆகப்­போ­கும் கைதி­க­ளைப் பார்த்­துப் வருத்­தப்­ப­டு­கி­றார்! இதன் பிறகு, கைதி­கள் எல்­லாம் ஆடிப்­பா­டிக் கொண்­டா­டும் பாட­லாக,

‘‘மணி­ய­டிச்சா சோறு, இது மாமி­யாரு வீடு

களிக்­கேத்த கீரைக்­கொ­ழம்பு’’  நிகழ்த்­தப்­ப­டு­கி­றது.

சிறை வாழ்க்கை, குடும்­பத்­தி­லி­ருந்து பிரி­வை­யும் அத­னால் வரும் சோகங்­க­ளை­யும் ஏற்­ப­டுத்­து­கி­றது என்­பது ஷண்­மு­கப்­பி­ரி­யன் கதை,வச­னம் எழு­திய ‘ஆணி­வேர்’ படத்­தின் திரைக்­க­தை­யில் சுட்­டப்­பட்­டா­லும், சிறை­யில் நடக்­கும் காமெடி காட்­சி­க­ளும் பாட­லும் மன­தில் இடம் பிடிக்­கின்­றன.

ஆனால் ஜெயி­லுக்­குப் போவது ஒன்­றும் ஒரு தேன் நில­வுப் பய­ணம் அல்ல என்று காட்டி, அதன் கருமை படிந்த மறு­பக்­கத்தை, ‘மகா­நதி’ (1994) ஓர­ள­வுக்கு சித்­த­ரி­கி­றது. அதன் நாய­கன் கிருஷ்­ண­சாமி, செய்­யாத குற்­றத்­திற்­காக சிறை செல்­கி­றான். சிறை­யில் அவன் காணும் அநி­யா­யங்­களை அவன் தட்­டிக்­கேட்­கும் போது, துலுக்­கா­ணம் என்ற கைதி­யு­டன் கடு­மை­யான மோதல் ஏற்­ப­டு­கி­றது. மற்ற கைதி­களை அடக்­கி­வைத்து, சிறை­யில் நடக்­கும் கஞ்சா, சிக­ரெட் இத்­யாதி வியா­பா­ரங்­க­ளுக்­குப் பயன்­பட்ட துலுக்­கா­ணம் அடி­வாங்­கி­ய­வு­டன், கிருஷ்­ண­சாமி அந்த பிசி­னெ­சுக்­குத் தலைமை ஏற்­பான் என்று சிறைக் காவ­லர் கரு­து­கி­றார்!  சிறை­க­ளில் சில காவ­லர்­க­ளின் உத­வி­யு­டன் சட்­ட­வி­ரோ­த­மாக நடக்­கும் பரி­வர்த்­த­னை­களை இந்­தத் திருப்­பம் காட்­டு­கி­றது.

மலை­யா­ளத்­தில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய ‘பீமேல் 22 கோட்­ட­யம்’ என்ற படத்­தின் தமிழ்  படைப்­பாக நடிகை ஸ்ரீப்­ரியா இயக்­கிய படம், ‘மாலினி 22 பாளை­யங்­கோட்டை’ (2014).   இந்த பட­மும் சிறை­க­ளில் நில­வும் சில கொடு­மை­யான நிலை­க­ளைக் காட்­டு­கி­றது. ஆனால், தனக்கு வெளியே இழைக்­கப்­பட்ட கொடு­மை­க­ளுக்­காக வஞ்­சம் தீர்க்­கும் வழி­யும் வகை­யும் இந்த பட  நாய­கிக்கு சிறை­யில்­தான் கிட்­டு­கின்­றன. சிறை­யில் குற்­றம் இழைத்­த­வர்­கள் மட்­டும் அல்ல, சில பல குற்­றங்­க­ளைச் செய்­த­வர்­க­ளுக்­குத் தண்­ட­னை­கள் கொடுப்­ப­வர்­க­ளும் இருப்­பார்­கள் போலும் !

இதை­யெல்­லாம் நினைத்து பயந்­து­தானோ என்­னவோ, சிறை­வா­சத்­திற்­கான பூரண தகு­தி­கள் பெற்­றி­ருந்த ஓட்­டல் அதி­பர் ராஜ­கோ­பால், பதி­னெட்டு ஆண்­டு­கள் சிறை­வா­சத்­தைத் தவிர்க்க விடா­மு­யற்சி செய்­தார்! இத்­த­னைக்­கும் செல்­வர்­க­ளுக்கு செல் வாசம் சொர்க்க வாசம்....ஏனென்­றால்  குளு­குளு ஏ.சி. அறை முதற்­கொண்டு எல்லா வச­தி­க­ளை­யும் உள்­ளேயே பணம் கொடுத்­துப் பெற்­றுக்­கொள்­ள­லாம் என்ற அனு­பவ உண்­மை­களை மறந்து, ‘மயிலே மயிலே  வா வா’ என்று கூறிக் கொண்­டி­ருந்­த­வர்,  ‘ஜெயிலே ஜெயிலே போ போ’ என்று சட்­டத்­து­டன் சடு­குடு ஆட்­டம் ஆடிக்­கொண்­டி­ருந்­தார். கடை­சி­யில் இந்த ஜுலை 2019ல், சுப்­ரீம் கோர்ட் ஆயுள் தண்­ட­னையை உறு­திப்­ப­டுத்­தி­யது.

 பொது­வா­கப் பிர­மு­கர்­க­ளுக்­கும் பணக்­கா­ரர்­க­ளுக்­கும் ஜெயி­லுக்­குப் போகும் தறு­வா­யில் ஆஸ்­பத்­தி­ரிக்­குப் போக­வேண்­டிய நோய்­கள் தலை­தூக்­கு­வது வழக்­கம். ஆனால் ராஜ­கோ­பா­லுக்கு அது­போல் இல்லை. உண்­மை­யா­கவே நோய்­வாய்ப்­பட்டு உல­கத்­தை­விட்டே போய்­விட்­டார் ! சுப்­ரீம் கோர்ட்­டின் தீர்ப்பை கடைசி நிமி­டத்­தில் தன்­னு­டைய உயி­ரைக் கொடுத்து நிறுத்­தி­விட்­டார்!

இதன் ஒரு வித­மான தலை­கீழ் நிலை ‘அன்னை இல்­லம்’ (1963) படத்­தில் வரு­கி­றது. சிவா­ஜி­யின் அப்­பா­வாக வரும் ரங்­கா­ரா­வுக்கு படத்­தின் முடி­வில்  தூக்கு தண்­டனை நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டிய தரு­ணம் வரு­கி­றது. அவ­ரு­டைய கதை ‘குளோஸ்’ என்று நினைக்­கிற நொடி­யில், விடு­த­லைப் பெற்று வெளியே வரு­கி­றார். நெடு­நாள்  துய­ரங்­கள் தீர்ந்­து­போ­கின்­றன. குடும்­பம் ஒன்­றா­கி­றது. ஏனென்­றால், படக்­க­தைப்­படி அவர்  நிர­ப­ராதி.

கே. ராம்­நாத் அதிக எதிர்­பார்ப்­பு­டன் தயா­ரித்து இயக்­கிய ‘விடு­தலை’ (1954) என்­கிற படத்­தில், தன்­னு­டைய தம்பி செய்த கொலைக் குற்­றத்தை மறைத்து, தன்­னு­டைய வேலைக்­கா­ர­னைக் குற்­ற­வாளி ஆக்கி அவனை சிறைக்கு அனுப்­பு­கி­றார் ஒரு பிர­பல வக்­கீல்  (நாகையா). ஆனால் கடை­சி­யில் அவரே சிறை­யில் அடைக்­கப்­ப­டும் நிலை வரு­கி­றது. வேலைக்­கா­ரன் இருக்­கும் அதே சிறை­யில் அவ­னுக்கு அடுத்த அறை­யில் அவர் அடைக்­கப்­ப­டு­கி­றார்! குற்­றா­வா­ளிக்கு நிச்­ச­யம் தண்­ட­னைக் கிடைக்­கும் என்று காட்­டிய இந்த காட்­சியை மிக உருக்­க­மாக எடுத்­தி­ருந்­தார் ராம்­நாத்.

ஆனால் என்ன பிர­யோ­ஜ­னம்...பட­மும் தோல்வி அடைந்­தது.... படத்­தோல்­வியை சமா­ளிக்க ராம்­நாத் தத்­த­ளித்­துக் கொண்­டி­ருந்­த­போது, அவ­ரும் அகால மர­ணம் அடைந்­தார். இவை போன்ற நிலை­க­ளைக் குறித்­துத்­தான், நல்­ல­வர்­கள் துன்­பப்­ப­டு­வ­தும் தீய­வர்­கள் நன்­றாக இருப்­ப­தும், இப்­படி ஏன் நடக்­கி­றது என்ற கேள்­வியை மக்­கள் மன­திலே எழுப்­பும் என்று எழு­தி­வைத்­தார் திரு­வள்­ளு­வர் (‘அவ்­விய நெஞ்­சத்­தான் ஆக்­க­மும் செவ்­வி­யான் கேடும் நினைக்­கப்­ப­டும்’).

ராம்­நாத்  தூக்­கி­விட்ட பல நபர்­க­ளில் ஜெமினி கணே­ச­னும் ஒரு­வர். ஜெமினி நடித்த ‘கண­வனே கண்­கண்ட தெய்­வம்’ (1955) படத்­தில், அவர் சிறை­யில் மாட்­டிக்­கொள்­கி­றார். அவ­ரு­டன் காமெடி நடி­கர்  பிரண்ட் ராம­சா­மி­யும் இருக்­கி­றார். தப்­பிப்­பது எப்­படி என்று யோசிக்­கும்­போது, சன்­னி­யா­சம் பெரிதா சம்­சா­ரம் பெரிதா என்­கிற சண்டை, சிறைக் காவ­லர்­களை இரு அணி­க­ளா­கப் பிரித்­தி­ருப்­பது தெரி­கி­றது.

‘‘காஷா­யம் கட்­டிக் கிட்டு

ஈசன் பேரைச் சொல்­லிட்டு

கையிலே யோக தண்­டம் தூக்­குத்  தூக்கு’’ என்று சன்­னி­யா­சக் கட்­சிக்­கா­ரர் பாட,

‘‘சம்­சா­ரம் தானே இன்­பம்

தர்ம சாஸ்­தி­ரம் சொல்­லும்

சங்­கதி தெரி­யாதோ அண்ணே அண்ணே’’ என்று சம்­சா­ரக் கட்­சிக்­கா­ர­ரான இன்­னொரு சிறைக்­கா­வ­லாளி பதில் கொடுக்­கி­றார்.

இந்த சங்­கீத வாத-­வி­வா­தத்­திற்கு இடையே,  ஒரு திருப்­பத்­தில் சன்­னி­யா­சக் கட்­சிக்­கா­ரர் வாய­டைத்து நிற்­கி­றார். அந்த நேரம் பார்த்து, சிறைக்­க­த­வுக்கு உள்­ளி­ருந்து ஒரு குரல் வரு­கி­றது. பிரண்ட் ராம­சாமி !

‘‘பொண்­டாட்டி ரெண்டு கட்டி

திண்­டா­டித் தெரு­வில் நின்னு

பண்­டா­ரம் ஆனான்டா சுப்­பனே’’ என்று அவ­ரு­டைய பாட்­டுக் குரல் உள்­ளி­ருந்து வெளிப்­ப­டும் போது, ‘ஆமான்டா அப்­பனே’ என்று கூறும் சன்­னி­யா­சக் கட்­சி­யின் தலை­வ­ரான காவ­லர், ‘‘அவனை இங்கே கூட்டி வா, அவன் நம்ம கட்சி’’ என்று சிறைக்­க­த­வைத் திறந்­து­வி­டச்­செய்­கி­றார்!

கதா­நா­ய­க­னும் அவ­னு­டைய தோழ­னான பிரண்­டட ராம­சா­மி­யும் சிறை­யி­லி­ருந்து தப்ப இது வழி­வ­குக்­கி­றது. மேற்­படி சிறைப்­பா­டல், பிரண்ட் ராம­சாமி தன் குர­லி­லேயே பாடிய கடை­சிப் பாட­லாக அமைந்­தது.    நாட்­டுப்­புற மணம் கம­ழும் ஒரு அழ­கான பாட­லில் ராம­சா­மி­யின் பிரத்­யே­க­மான குர­லும் இணை­வதை இன்­றும் நாம் கேட்டு ரசிக்க முடி­கி­றது.

சிறைக்­கா­வ­லர்­கள் தங்­கள் வேலை­யில் கோட்டை விட்­டு­வி­டக்­கூ­டாது, கட­மை­யில் தூங்­கி­வி­டக்­கூ­டாது என்று எம்.ஜி.ஆரும், ‘தூங்­காதே தம்பி தூங்­கதோ’ என்று பாடி­னார். எம்.ஜி.ஆரை சிக­ரத்­திற்­குத் தூக்­கி­விட்ட ‘நாடோடி மன்­ன’­னில் அமைந்த சிறைக்­காட்­சி­யில் அவர் பாடும் பாடல் இது.  எம்.ஜி.ஆரின் சிறைக்­காட்­சி­களை நாம் தூங்­கி­வி­டா­மல் கவ­னித்­தால், அவற்­றுக்கு ஒரு நீண்ட தொடர்ச்­சி­யி­ருப்­ப­தைக் காண­லாம்!

(தொட­ரும்)Trending Now: