மசோதா சட்டமாகும் மாயம்: மோடி மேஜிக்– சந்தானம்

05-08-2019 02:24 PM

17வது நாடா­ளு­மன்­றத்­தின் முதல் கூட்­டத்­தொ­டர் நடை­பெற்று வரு­கி­றது ஜூன் 17ஆம் தேதி துவங்­கிய கூட்­டத் தொடர் முத­லில் ஜூலை 26 ஆம் தேதி­யோடு முடி­வ­டை­யும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. பின்­னர் அந்த அறி­விப்பை அடித்து நீட்டி ஆகஸ்ட் 7ம் தேதி வரை கொண்­டு­வந்­து­விட்­டார்­கள். இப்­பொ­ழுது ஆகஸ்ட் 7ந்தேதி­யும் நாடா­ளு­மன்ற கூட்­டத்­தொ­டர் நிறை­வ­டை­யாது. இன்­னும் 2 வாரங்­கள் நீடிக்­கப்­பட வாய்ப்பு இருக்­கி­றது என்று ஆளுங்­கட்சி அமைச்­சர்­க­ளும் எம்­பிக்­க­ளும் குரல் கொடுத்து வரு­கி­றார்­கள்.

16ஆவது நாடா­ளு­மன்ற கூட்­டத்­தொ­ட­ரின் கடைசி நாளன்று மோடி தான் மீண்­டும் இந்­தி­யா­வின் பிர­த­மர் என்று தலை­யில் அட்­சதை தூவி ஆசீர்­வா­தம் செய்த முலா­யம் சிங், எதற்­காக இப்­படி கூட்­டத்­தொ­டரை நீட்­டித்­துக்­கொண்டே போகி­றீர்­கள்? உருப்­ப­டி­யாக ஒரு கார­ணம் சொல்ல உங்­க­ளுக்கு துப்பு உண்டா என்று கோபப்­பட்டு கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

அதற்கு அரசு தரப்­பில் நாடா­ளு­மன்ற விவ­கார அமைச்­ச­ரும் சரி மற்ற அமைச்­சர்­க­ளும் சரி பதில் சொல்ல வழி இல்­லா­மல் விழித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.

நாடா­ளு­மன்­றத்­திற்கு உள்­ளே­யும் வெளி­யே­யும் மசோதா மழை பொழி­கி­றது அந்த மசோ­தாக்­க­ளைப் பார்த்து படிக்­கக்­கூட நேரம் இல்­லா­மல் அவ­ச­ரம் அவ­ச­ர­மாக நிறை­வேற்­றிக் கொண்டே போகி­றது ஆளுங்­கட்சி என்று எதிர்க்­கட்­சி­கள் குற்­றம் சாட்டி வந்­துள்­ள­னர்.

இதே குற்­றச்­சாட்டு மக்­க­ள­வை­யில் ஆகஸ்ட் முதல் தேதி­யும் எழுப்­பப்­பட்­டது. மசோ­தாக்­களை அலு­வல் ஆய்­வுக் குழு­வில் ஆலோ­சித்த பிற­கு­தான் நிறை­வேற்­று­வ­தற்­கான நாள் நிர்­ண­யிக்­கப்­ப­டு­கி­றது என்று மத்­திய நாடா­ளு­மன்ற விவ­கார அமைச்­சர் பிர­க­லாத் ஜோஷி­யும் மக்­க­ளவை சபா­நா­ய­கர் ஓம் பிர்­லா­வும் கூறி­யுள்­ள­னர்.

மசோ­தாக்­களை அலு­வல் ஆய்­வுக் குழு­வில் ஆய்வு செய்­வ­தில்லை. விவா­தம் எனத் தேதி மட்­டும்­தான் நிர்­ண­யிக்­கி­றார்­கள். இது கூடத் தெரி­ய­வில்­லையா என்று கன்­னத்­தில் இடிக்­காத குறை­யாக எதிர்க்­கட்சி எம்­பிக்­கள் பதி­ல­ளித்­தி­ருக்­கி­றார்­கள்.

மக்­க­ள­வை­யில் திமுக உறுப்­பி­னர் கனி­மொழி  புதி­தாக குற்­றச்­சாட்டு ஒன்றை வெளி­யிட்­டி­ருக்­கி­றார்.

நாளை விவா­தத்­துக்கு எடுத்­துக் கொள்­ளப்­ப­டும் பொருள்­கள் என்ன என்று மக்­க­ளவை அலு­வ­ல­கம் பட்­டி­யல் ஒன்றை முதல்­நாளே வெளி­யி­டு­கி­றது. அந்­தப் பட்­டி­யலை கையில் வாங்­கிக்­கொண்டு எம்­பிக்­கள் அதற்கு ஏற்ப தங்­கள் செயல் திட்­டத்தை வகுத்­துக் கொள்­கி­றார்­கள். ஆனால், ஏற்­க­னவே அறி­வித்த விவா­தத் திட்­டத்தை திருத்தி புது திட்­டத்தை ஆளுங்­கட்சி நள்­ளி­ர­வில் வெளி­யி­டு­கி­றது.

ஏற்­க­னவே இருக்­கிற சட்­டங்­க­ளுக்கு திருத்த மசோ­தாக்­களை ஆளுங்­கட்சி குவிக்­கி­றது. அத்­தோடு விடா­மல் ஏற்­க­னவே வெளி­யி­டப்­பட்ட அலு­வல் திட்­டத்­திற்கு நள்­ளி­ர­வில் திருத்­தம் செய்து அதி­லும் புதுச் சாதனை படைக்­கி­றார்­கள் என்­பது கனி­மொழி வெளி­யிட்ட குற்­றச்­சாட்டு.

மக்­க­ள­வை­யி­லும் மாநி­லங்­க­ள­வை­யி­லும் எத்­தனை மசோ­தாக்­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டன?  எத்­தனை மசோ­தாக்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன? என்ற புள்ளி விவ­ரங்­களை மக்­க­ளவை செய­ல­க­மும் மாநி­லங்­க­ளவை செய­ல­க­மும் இணைந்து புள்­ளி­வி­வ­ர­மாக பட்­டி­ய­லிட்டு வழங்­கி­யி­ருக்­கின்­றன.

 அதன்­படி ஜூலை 26ந்தேதி வரை மொத்­தம் 30 மசோ­தாக்­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்த மசோ­தாக்­க­ளில் மக்­க­ள­வை­யில் 20 மசோ­தாக்­கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. இரண்டு அவை­க­ளி­லும் 14 மசோ­தாக்­கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.

14, 15, 16 ஆகிய முந்­திய மூன்று நாடா­ளு­மன்­றங்­க­ளி­லும் துவக்க கூட்­டத்­தில் சட்ட மசோ­தாக்­கள் எது­வும் தாக்­கல் செய்­யப்­ப­ட­வில்லை. ஆனால் 17வது நாடா­ளு­மன்­றத்­தில் துவக்க கூட்­டத் தொட­ரி­லேயே 30 மசோ­தாக்­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டி­ருப்­பது ஒரு பெரிய சாத­னை­யா­கக் கரு­தப்­ப­டு­கி­றது

14வது நாடா­ளு­மன்­றத்­தின் பட்­ஜெட் கூட்­டத்­தொ­ட­ரில் 6 மசோ­தாக்­கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.

15வது நாடா­ளு­மன்­றத்­தின் பட்­ஜெட் கூட்­டத்­தொ­ட­ரில் 8 மசோ­தாக்­கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன .

16ஆவது நாடா­ளு­மன்­றத்­தின் வர­வு-­செ­ல­வுத்­திட்ட கூட்­டத் தொட­ரில் மொத்­தம் 12 மசோ­தாக்­கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.

இந்த அடிப்­ப­டை­யில் பார்க்­கும் பொழுது 17வது நாடா­ளு­மன்­றத்­தில் இப்­பொ­ழுது ஜூலை 26ந்தேதி வரை 14 மசோ­தாக்­கள் 2 அவை­க­ளி­லும் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளதே பெரிய சாத­னை­யா­கக் கரு­த­லாம்.

ஆகஸ்ட் 9ஆம் தேதிக்­குள் நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்ட எல்லா மசோ­தாக்­க­ளும் நிறை­வேற்­றப்­ப­டா­விட்­டால் மேலும் 2 வாரங்­க­ளுக்கு நாடா­ளு­மன்­றத்தை நீடிப்­பது குறித்து பரி­சீ­லிக்க வேண்­டி­யி­ருக்­கும் என்று ஆளும் பார­திய ஜனதா கட்­சி­யின் தலைமை யோசித்து வரு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.

வரவு செல­வுத் திட்ட விவா­தத்­தின் போது ரயில்­க­ளுக்­கான ஒதுக்­கீடு பற்றி இரவு 11:50 மணி வரை விவா­தம் நடந்­த­தாக அறி­விக்­கப்­பட்­டது அன்றே ஒதுக்­கீடு பற்றி முடிவு செய்த பிற­கு­தான் மக்­க­ளவை கலைந்­த­தாக செய்தி வெளி­யி­டப்­பட்­டது.

இப்­படி புதிய சாத­னை­களை நாடா­ளு­மன்ற கூட்­டத்­தொ­டரை நீடிப்­ப­தி­லும் இர­வில் கூட்­டம் நடத்­து­வ­தி­லும் பார­திய ஜனதா கட்சி தொடர்ந்து சாதனை படைத்து வரு­கி­றது.

ஆனால், மசோ­தாக்­கள் நிறை­வே­றும் பொழுது அதன் பயன் மக்­க­ளுக்கு சாத­க­மாக வந்­தால் பர­வா­யில்லை. ஆனால் மக்­க­ளின் உரி­மை­க­ளைப் பறிப்­ப­தாக இருந்­தால் அது பெரி­தும் கவலை தரும் விஷ­ய­மாக உள்­ளது என்று எதிர்க்­கட்­சி­கள் குற்­றம் சாட்­டு­கின்­றன,

தங்­கள் கருத்­துக்கு ஆதா­ர­மாக எதிர்க்­கட்­சி­கள் தக­வல் உரிமை சட்­டத்­திற்கு அரசு கொண்டு வந்து நிறை­வேற்­றிய திருத்­தங்­க­ளைச் சுட்­டிக் காட்­டு­கின்­றன.

தக­வல் உரிமை சட்­டத்­தின் கீழ் அதன் ஆணை­ய­ராக செயல்­ப­டு­கி­ற­வர் இந்­தி­யத் தேர்­தல் கமி­ஷ­னின் தேர்­தல் கமி­ஷ­ன­ருக்கு இணை­யான சட்ட அந்­தஸ்து உடை­ய­வர் என்று ஆர்­டிஐ சட்­டம் குறிப்­பி­டு­கி­றது. அது பெரிய முரண்­பாடு என வரிந்து கட்­டிக்­கொண்டு பார­திய ஜனதா அரசு திருத்­தங்­க­ளைக் கொண்டு வந்து நிறை­வேற்றி இருக்­கி­றது.

தக­வல் உரிமை சட்­டத்­தின் கீழ் நிய­மிக்­கப்­ப­டும் ஆணை­ய­ருக்கு தேர்­தல் ஆணை­யர், உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளுக்கு இணை­யான சட்ட அந்­தஸ்து வழங்­கக் கூடாது என வேறு யாரும் கோர­வில்லை. அர­சாங்­கமே வரிந்து கட்­டிக் கொண்டு களத்­தில் இறங்கி புதிய திருத்த மசோ­தாவை தாக்­கல் செய்­துள்­ளது.

அது மட்­டு­மல்ல தக­வல் உரிமை சட்­டத்­தின் கீழ் தேசிய அள­வி­லும் மாநில அள­வி­லும் நிய­மிக்­கப்­ப­டும் ஆணை­யர்­கள் எத்­தனை ஆண்டு காலம் பத­வி­யில் இருக்க வேண்­டும்? அவர்­க­ளுக்கு ஊதி­யம் என்ன? அவர்­க­ளு­டைய அந்­தஸ்து என்ன? ஆகி­ய­வற்றை தீர்­மா­னிக்­கும் பொறுப்பை மத்­திய அரசு தானே எடுத்­துக் கொள்­கி­றது.

இது தக­வல் உரி­மைச் சட்­டத்­தின் கீழ் வழங்­கப்­பட்­டுள்ள பொறுப்­பு­களை, அதி­கா­ரங்­களை மத்­திய அரசு நிரா­க­ரிக்­கும் செய­லா­கும். அரசு நிறை­வேற்­றி­யது சட்ட திருத்­தம் அல்ல, சட்ட நிரா­க­ரிப்பு.

ஆர்­டிஐ சட்ட திருத்­தம் மூலம் நிய­மன உரி­மையை தன் கையில் எடுத்­துக் கொள்­கி­றது மத்­திய அரசு. தக­வல் ஆணை­யர்­கள் அனை­வ­ரை­யும் தனது கட்­டுப்­பாட்­டிற்­குள் கொண்­டு­வர மத்­திய அரசு மேற்­கொள்­ளும் முயற்­சி­தான் இது.

இது கூட்­டாட்சி முறை­யி­லான சர்­வா­தி­கா­ரம் என அறி­ஞர்­கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர்.

நீட் தேர்வு முறையை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு மருத்­துவ கல்­லூரி மாண­வர்­களை தேர்வு செய்­வ­தும், முது­நிலை பட்­டப் படிப்­பு­க­ளுக்­கான மாண­வர்­களை தேர்வு செய்­வ­தும் புதிய தேர்­வு­களை அறி­மு­கம் செய்­வ­தும் வேண்­டாத வேலை.

நீட் தேர்வை எதிர்த்து தாக்­கல் செய்­யப்­பட்ட பல வழக்­கு­கள் இன்­னும் நிலு­வை­யில் உள்­ளன. இந்த நிலை­யில் நீட் தேர்வை அதி­கா­ரப்­பூர்­வ­மா­ன­தாக மாற்­ற­வும் இந்­திய மருத்­து­வர் கமி­ஷனை மாற்­றி­விட்டு மத்­திய அர­சின் அதி­கா­ரத்­திற்­குட்­பட்ட நிய­மன உறுப்­பி­னர்­கள் பெரு­ம­ளவு இடம்­பெ­றும் புதிய கமி­ஷனை நிய­மிப்­ப­தற்­கும் இந்­திய மருத்­து­வக் கவுன்­சில் சட்­டத் திருத்­தத்தை மத்­திய அரசு கொண்டு வந்து மக்­க­ள­வை­யில் நிறை­வேற்றி உள்­ளது.

இதற்கு மருத்­துவ கல்­லூரி மாண­வர்­க­ளும் மருத்­து­வர்­க­ளும் மருத்­துவ அறி­ஞர்­க­ளும் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர்.

அகில இந்­திய அள­வில் கால­வ­ரம்­பற்ற போராட்­டத்தை துவக்­கப் போவ­தாக எய்ம்ஸ் மருத்­து­வ­மனை மருத்­து­வர்­கள் அறி­வித்­துள்­ள­னர்.

சமீ­பத்­தில் மேற்­கு­வங்­கத்­தில் மருத்­து­வர்­கள் போராட்­டத்­தைத் துவக்­கிய போது அதனை அகில இந்­திய போராட்­ட­மாக மாற்ற பல அர­சி­யல் கார­ணங்­கள் அன்று களத்­தில் இருந்­தன.

அப்­பொ­ழுது குடு­வை­யில் அடை­பட்­டி­ருந்த பூதத்தை திறந்­து­விட்­டார்­கள் .இப்­பொ­ழுது அந்த பூதம் டெல்­லி­யி­லும் தமி­ழ­கத்­தி­லும் உத்­த­ரப் பிர­தே­சத்­தி­லும் மேற்கு வங்­கா­ளத்­தி­லும் வேலை நிறுத்­த­மாக மிரட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றது.

பழைய அனு­ப­வம் துணிச்­ச­லைத் தரு­கி­றது.

இப்­படி ஒன்­றன்­பின் ஒன்­றாக விளை­வு­கள் தோன்­று­வதை ஆய்வு செய்­யா­மல் மசோ­தாக்­களை வரி­சை­யாக நிறை­வேற்­றும் பொழுது பல பிரச்­ச­னை­க­ளுக்கு தீர்வு கிடைப்­ப­தில்லை.

அதற்கு மாறாக புது பிரச்­ச­னை­கள் தோன்­று­கின்­றன.

தொழில் நிறு­வ­னங்­கள் திவால் சட்­டம் கொண்­டு­வந்து 1.12.2016ல்தான் அம­லுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது.

அந்த சட்­டத்­துக்கு அதற்­குள் திருத்­தங்­கள் கொண்­டு­வ­ரப்­பட்டு அது­வும் நடப்பு நாடா­ளு­மன்ற கூட்­டத் தொட­ரி­லேயே நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

இது எந்த அள­வுக்கு அவ­சர குடுக்­கை­யாக மத்­திய அரசு செயல்­ப­டு­கி­றது என்­பதை காட்­டு­கின்­றது.

மசோ­தக்­கள் சட்­ட­மா­கும் பொழுது அதன் பயன்­பாடு குறித்து எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் எல்­லோ­ரும் கவலை தெரி­வித்­தி­ருக்­கி­றார்­கள். மாநி­லங்­க­ள­வை­யில் பெரும்­பான்மை ஆத­ரவு இல்­லாத பொழு­தும் கூட மசோதா ஒன்றை சட்­ட­மாக சட்­ட­மாக நிறை­வேற்­று­கின்ற கலையை பார­திய ஜனதா கட்­சி­யின் தலைமை பெற்­றுள்­ளது. இதை மோடி-­அ­மித்ஷா மேஜிக் என்று அர­சி­யல் நிபு­ணர்­கள் வர்­ணிக்­கி­றார்­கள். தனது பலத்தை பெருக்க முடி­யா­விட்­டா­லும் எதி­ரி­யின் பலத்தை கரைத்து குறைப்­பது வெற்றி தரும்.

கர்­நா­டக மாநி­லத்­தின் ஆட்சி அமைக்க முடி­யாத நிலை­யில்­இ­ருந்த பொழுது  பார­தீய ஜன­தா­வின் பலம் 105 எம்­எல்­ஏக்­கள்­தான். இப்­பொ­ழு­தும் அதே 105 எம்­எல்­ஏக்­க­ளு­டன் தான் பார­திய ஜனதா கட்சி உள்­ளது. ஆனால் இப்­பொ­ழுது அது ஆளுங்­கட்சி.

கர்­நா­டக மாநி­லத்­தில் எந்த மேஜிக் வித்­தையை பார­திய ஜனதா கட்சி பயன்­ப­டுத்­தி­யதோ  அதே மேஜிக் வித்­தையை மாநி­லங்­க­ள­வை­யி­லும் மக்­க­ள­வை­யி­லும் வெற்­றி­க­ர­மாக பார­திய ஜனதா கட்சி பயன்­ப­டுத்­து­கி­றது. நாளை எந்த கட்­சி­யில் எத்­தனை உறுப்­பி­னர்­கள் அவைக்கு வர மாட்­டார்­கள் என்ற கணக்கு பாஜக கையில் உள்­ளது. அதன் அடிப்­ப­டை­யில் தங்­க­ளு­டைய பலம் என்ன? எதிர்க்­கட்­சி­கள் பலம் என்ன? எந்த மசோ­தாவை நிறை­வேற்ற வேண்­டும் என்­ப­தற்கு இர­வி­லும் கூட திட்­ட­மி­டு­கி­றார்­கள்.

பார­திய ஜனதா கட்­சி­யில் இரு அவை­க­ளி­லும் உள்ள கொற­டாக்­கள் 24 மணி நேர­மும் விழிப்­பு­டன் செயல்­ப­டு­கி­றார்­கள்.

அத­னால் எந்த பார­திய ஜனதா எம்­பி­யும் அவைக்கு வரா­மல் தப்ப முடி­வ­தில்லை.

அதே­நே­ரம் எதிர்க்­கட்­சி­கள் அதே கட்­டுப்­பாட்­டு­ட­னும் ஒழுக்­கத்­து­ட­னும் செயல்­ப­டு­வது இல்லை. அத­னால் 15 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் முத்­த­லாக் மசோ­தாவை சட்­ட­மாக்கி கிரீ­டம் சூட்டி கொண்­டுள்­ளது பார­திய ஜனதா. மசோதா சட்­ட­மாக நிறை­வேற்­றப்­பட்ட நாளில் வெளி­ந­டப்பு தவிர அவைக்கு வராத எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்கை 20. இவர்­கள் பகு­ஜன் சமா­ஜம், சமாஜ்­வாதி கட்சி, மற்ற உதி­ரிக் கட்­சி­க­ளைச் சேர்ந்­த­வர்­கள்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக வெற்றி பெற்று வரு­வது மட்­டும் போதாது. கட்­டுப்­பாட்­டோடு எல்லா நாட்­க­ளி­லும் எல்லா கூட்­டங்­க­ளில் கலந்து கொள்ள வேண்­டும் என்ற அடிப்­ப­டைக் கருத்­தைக் கூட எதிர்க்­கட்­சி­கள் உணர்ந்து செயல்­ப­டு­வது இல்லை. அத­னால் 15 வாக்கு வித்­தி­யா­சத்­தில் நான்கு ஐந்து ஆண்­டு­கள் போராடி நிறை­வேற்ற முடி­யாத மசோ­தாக்­களை மிக­வும் சுல­ப­மாக பாஜக நிறை­வேற்ற முடி­கி­றது. இந்த கட்­டுப்­பாட்டை தாங்­க­ளும் உரு­வாக்கி

கொள்­ளா­த­ வரை எதிர்க்­கட்­சி­­களுக்கு வெற்றி காத்­துக் கொண்­டி­ருக்­காது.               ***