ரேஷன் பொருட்களுக்கு பதிலாக பணம் : இரு மாநிலங்களில் சோதனை திட்டம் அமல்படுத்த அரசு முடிவு

03-08-2019 08:19 PM

     கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ரேஷன் பொருட்களுக்கு பதிலாக பணத்தை மானியமாக வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தவுள்ளது. இந்த திட்டத்தை உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் இரு தொகுதிகளில் சோதனை முறையில் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருப்பது உணவுபொருட்களுக்கான பொது விநியோக திட்டம். இந்த திட்டத்தின் கீழ் மிகவும் குறைந்த விலையில் தங்கள் அன்றாட தேவைக்கான அரிசி, பருப்பு, சக்கரை போன்றவற்றை மக்கள் ரேஷன் கடைகளில் இருந்து பெற்று வருகிறார்கள். தமிழகம் போன்ற மாநிலங்களில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.

ரேஷன் விநியோகம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது ரேஷன் ஊழல்களும். உச்ச நீதிமன்றம் ரேஷன் விநியோகத்தில் ஊழலை ஒழிக்க கணினி வழி விநியோகம் தேவை எனக்கூறியது

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு பொதுவிநியோகத்துறையில் நடக்கும் ஊழல்களை தடுப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியது.

அதன் ஒரு பகுதியாக மத்திய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் பொருட்களுக்கு பதிலாக அதற்கான பணத்தை மக்களின் வங்கி கணக்கில் மானியமாக செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

நேரடி மானிய பரிமாற்றம் 

தற்போதுள்ள நடைமுறையின் படி மக்கள் நேரடியாக ரேஷன் கடைகளுக்கு சென்று குடும்ப அட்டையை காட்டி அரிசி பணத்தைச் செலுத்தி தங்களுக்கு தேவையான பொருட்களை மானிய விலையில் வாங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்திய நேரடி மானிய பரிமாற்றம் (Direct Benefit Transfers) திட்டத்தின் கீழ் முதலில் ரேஷன் பொருட்களுக்கான பணத்தை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் அரசு ரொக்கமாக செலுத்திவிடும்.

மக்கள் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு கடைகளில் சந்தை விலையில் அரிசியை வாங்கி கொள்ளலாம்.

முதல்கட்டமாக கடந்த 2015ம் ஆண்டு யூனியன் பிரதேசங்களான சண்டிகர், புதுசேரியில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன் பின் யூனியன் பிரதேசமான நாகர் ஹவேலியில் 2016ம் ஆண்டு நேரடி மானிய பரிமாற்றம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

அதை தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தின் நாக்ரி மாவட்டத்தில் இந்த திட்டம் சோதனை ஓட்டமாக அமல்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் அரசு அளிக்கும் மானியத்தை ஒருவர் பயன்படுத்த தவறினால் அவருக்கு அடுத்த மாதத்திற்கான மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படாது. தொடர்ந்து பயன்படுத்த தவறினால் அவருக்கு வழங்கப்பட்ட ரேஷன் அட்டையே ரத்து செய்யப்படும்.

மக்கள் சந்தித்த பிரச்சனைகள் 

மத்திய அரசின் நேரடி மானிய பரிமாற்றம் திட்டத்தின் கீழ் ஏழை மக்கள் பல பிரச்சனைகளை சந்தித்தனர். அதன் விவரம் பின்வருமாறு

  • மக்களுக்கு உரிய நேரத்தில் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை.
  • ஒரு குடும்பத்தில் பல வங்கி கணக்குகள் இருப்பதால் எந்த வங்கி கணக்கிற்கு பணம் செல்கிறது என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நிலவியது.
  • பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது தொடர்பான எஸ்.எம்.எஸ் செய்திகள் சரியாக மக்களுக்கு அனுப்பப்படவில்லை.
  • எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டாலும் படிப்பறிவில்லாத மக்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் பணம் வந்துவிட்டதா என்பதை தெரிந்துகொள்ள பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள வங்கிகளுக்கு பலமுறை சென்று விசாரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் தினக்கூலி வேலைக்கு செல்லும் ஏழை மக்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
  • வங்கிகளில் கடன் பாக்கி வைத்திருந்தவர்களின் கணக்கில் செலுத்தப்பட்ட மானிய தொகையை வங்கிகள் எடுத்து கொண்டன. அதனால் பலருக்கு ரேஷன் பொருட்கள் வாங்க பணம் கிடைத்தும் அதை பயன்படுத்த முடியவில்லை.
  • சிலருக்கு ஏர்டெல் மணி போன்ற டிஜிட்டல் வழியில் பணம் வந்ததால் அதை எப்படி வங்கி கணக்கில் மாற்றி பணம் எடுப்பது என்று தெரியாமல் தவித்தனர்.
  • மானியமாக கிடைக்கும் பணத்தில் உயர்ரக அரிசி வாங்க வழி இருந்தும் ரேஷன் கடையில் தரம் குறைந்த அரிசியை தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
  • மக்களுக்கு மானியம் கிடைப்பதில் ஏற்படும் கால தாமதம் காரணமாக பலருக்கு முதல் மாத ரேஷன் பொருட்களை அடுத்த மாதம் வரை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் ரேஷன் ஊழியர்களும் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
  • உரிய நேரத்தில் பணம் கிடைக்காமல் ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலையில் பலருக்கு அவர்களின் மானியம் ரத்து செய்யப்படும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
  • மோசமான இணைய சேவை கொண்ட பகுதிகளில் ரேஷன் டீலர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளால் தங்கள் பணிகளை செய்ய முடியாமல் அவதிக்கு ஆளானார்கள்.

மத்திய அரசின் நேரடி மானிய பரிமாற்றம் திட்டம் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்ட புதுசேரி, சண்டிகர், நாகர் ஹவேலியிலும் மக்கள் இதே சிக்கல்களை சந்தித்தனர்.அதனால் இத்திட்டங்கள் கைவிடப்பட்டன,

மக்கள் எதிர்ப்பு

மத்திய அரசின் நேரடி மானிய பரிமாற்றம் திட்டத்தின் கீழ் உள்ள நடைமுறை சிக்கல்களால் ஜார்கண்ட் மக்கள் கடும் எரிச்சலடைந்தனர்.

பலருக்கு ரேஷனில் உணவு பொருட்கள் வாங்க முடியாமல் தங்களிடம் இருக்கும் பொருட்களை விற்று சாப்பிடும் சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக வறுமையின் பிடியில் இருந்த பழங்குடி மக்கள் இந்த திட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ஜார்கண்ட்டில் 20க்கும் மேற்பட்டோர் போதிய உணவு கிடைக்காமல் பட்டினியால் உயிரிழந்ததாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். 

அதன் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜார்கண்ட் மாநிலம் நாக்ரி தொகுதியில் மக்கள் நேரடி மானிய பரிமாற்றம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.  மீண்டும் பழைய நடைமுறையை அமல்படுத்த வலியுறுத்தினர்.

நாக்ரி தொகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு எங்களுக்கு தேவை ரேஷன் பொருட்கள், நேரடி மானியம் அல்ல என்று முழக்கமிட்டனர்.

பெண்கள், ஆண்கள் என அனைவரும் நாக்ரி தொகுதியில் இருந்து ஆளுநர் மாளிகை வரை 8 கிலோமீட்டர் தொலைவுக்கு பேரணியாக சென்றனர். தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆளுநரிடம் அளித்தனர்.

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜார்கண்ட் விகாஸ் மோர்சா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய 5 எதிர்க்கட்சிகளின் கூட்டணி இந்த போராட்டத்தை முன்னிருந்து நடத்தியது. பல சமூக நல அமைப்புகளும் போராட்டத்தில் கலந்து கொண்டன.

மக்களின் தொடர் போராட்டம் காரணமாக நேரடி மானிய பரிமாற்றம் திட்டத்தை ரத்து செய்ய ஜார்கண்ட் அரசு மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கான புதிய திட்டம்

இந்தப்பின்னணியில் அங்கன்வாடி மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களுக்கு பதிலாக அதற்கான பணத்தை ரொக்கமாக வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த முடிவு செய்துள்ளது. ரேஷன் பொருள்களுக்கு முழுக்க பணம் கொடுக்க முடியவில்லையா? முடிகிற அளவுக்கு பொருளவிநியோகத்தைக குறைக்கலாம் என்பது தான் மத்திய ரேஷன் துறை அமைச்சர் பாஸ்வானின் விருப்பமும் கூட.

ராஜஸ்தான் ஜெய்பூர் மாவட்டத்தில் உள்ள கிஷான்காஞ் தொகுதி மற்றும் உத்தரபிரதேசம் லக்னோ மாவட்டத்தில் உள்ள சின்ஹாத் தொகுதி ஆகிய இரண்டு பகுதிகளிலும் இந்த புதிய திட்டம் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 8 ரூபாய். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.9.50 என்ற வகையில் அங்கன்வாடிகள் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் மானியமாக வழங்கப்படும்.

மத்திய அரசின் போஷான் அபியான் என்ற தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை பரிந்துரைத்துள்ளது.

நிதி ஆயோக் பரிந்துரையின் பேரில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான இந்த திட்டத்தை அடுத்த சில ஆண்டுகளுக்கு சோதனை ஓட்டமாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முதல்கட்டமாக ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தின் இரு தொகுதிகள் தேர்வாகியுள்ளன.

இந்த சோதனை முயற்சிகள் மூலமாக ஏழை மக்களுக்கு ரேஷன் பொருட்களுக்கு பதிலாக ரொக்க பணம் கொடுப்பது நடைமுறையில் சாத்தியமாகுமா என்பதை கண்டறிய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பயனாளிகளின் வசதியில் கவனம் தேவை

நாட்டில் ஊழலை தடுக்க வேண்டும். மக்கள் மத்தியில் ரொக்கம் இல்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நோக்கத்தில் எந்த தவறும் இல்லை.

அதற்காக நடைமுறை சிக்கல்கள் நிறைந்த திட்டங்களை உரிய ஆய்வுகள் மேற்கொள்ளாமல் அதற்கான தீர்வுகளை கண்டறிந்து செயல்படுத்தாமல் அமல்படுத்த முயற்சிப்பது மிக பெரிய முட்டாள்தனம்.

அரசு தன் செலவை மிச்சப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் திட்டத்தின் பயனாளிகளுக்கு எது வசதி என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

மக்களுக்கு எந்தவித சிக்கல்களும் ஏற்படாத வகையில் பல சோதனை முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மக்கள் தன்னிச்சையாக ஒரு நலதிட்டத்தை ஏற்றுக்கொண்டால் அரசின் செலவுகள் தானாக குறையும்.

எனவே அவசரகதியில் திட்டங்களை அமல்படுத்தாமல் பல கட்ட ஆய்வுகள் மற்றும் சோதனை முயற்சிகள் மூலமாக நடைமுறை சிக்கல்களுக்கான உரிய தீர்வுளை அரசு கண்டறிய வேண்டும்.

அதன்பின் மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு திட்டங்களை மாற்றி அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு இனி இந்த அணுகுமுறையை கடைப்பிடிக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

பாஜக ஆளும் உத்தரபிரதேசம் வேண்டுமானால் அரிசிக்குப பதில் பணம் எனும் திட்டத்தை ஏற்றுக்கொள்ளலாம்.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் ஒப்புக் கொள்ளுமா என்பது வலுவான கேள்விதான்?

 

 Trending Now:
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :