சோன்பத்ரா கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பிரியங்கா காந்தியுடன் சந்திப்பு

20-07-2019 02:21 PM

லக்னோ

உத்தரபிரதேசத்தில் சோன்பத்ரா கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பிரியங்கா காந்தியை விருந்தினர் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தனர்.

உத்தரபிரதேசம் சோன்பத்ரா மாவட்டம் யூம்பா கிராமத்தில் சமீபத்தில் இரு பிரிவினருக்கிடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆதரவு கூற காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச மாநில கிழக்குப்பகுதி பொறுப்பாளரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா நேற்று காணச்சென்றார்.

தொடர் தர்ணா

நாராயண்பூர் எனும் பகுதியில் பிரியங்கா காந்தியின் காரை தடுத்து நிறுத்திய போலீசார், அவருக்கு ஊருக்குள் நுழைய அனுமதி மறுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தொண்டர்களுடன் சாலையிலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களின் துயரத்தைக் கேட்டு ஆறுதல் கூறாமல் நான் திரும்பி போகப்போவதில்லை என பிரியங்கா காந்தி உறுதியாகக் கூறினார். அவரைக் கைது செய்த போலீசார் அவரை அருகில் உள்ள மீர்ஜாபூர் மாவட்டத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர்.

அங்கும் அவர் தர்ணாவில் ஈடுபட்டார். இரவிலும் தர்ணா போராட்டம் தொடர்ந்தது. இதற்கிடையில், பிரியங்கா அடைக்கப்பட்ட விருந்தினர் மாளிகையில், மின்சாரமும் தண்ணீரும் துண்டிக்கப்பட்டன. இது, ஆளும் அரசின் பழிவாங்கும் செயல் என்றும் காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். சமூக வலைதளங்களில் பாஜக அரசை விமர்சனம் செய்து பலரும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

திட்டவட்டம்

இரவு முழுவதும் தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியை, சில உத்தரபிரதேச போலீஸ் உயரதிகாரிகள் நேரில் சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.

எனினும், பிரியங்கா காந்தி தன் நிலைப்பாட்டில் இருந்து சற்றும் மாறவில்லை. இன்று காலை வரை அதே விருந்தினர் மாளிகையில் உள்ளார். இதற்கிடையே, தன் தர்ணா போராட்டம் தொடர்பாக பிரியங்கா காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

”உத்தரப்பிரதேச அரசு, வாரணாசி ஏ.டி.ஜி ப்ரிஷ் புஷன், வாரணாசி கமிஷனர் தீபக் அகர்வால், மிஸாபூர் டி.ஐ.ஜி ஆகியோரை அனுப்பிவைத்து, மக்களை சந்திக்காமல் இந்த இடத்தைவிட்டு செல்லுமாறு கூறச் சொல்லியுள்ளது. அவர்கள், கடந்த 1 மணி நேரமாக இங்கு முகாமிட்டுள்ளனர்.

 என்னை ஏன் போலீசார் கைது செய்தார்கள் என இன்னும் அவர்கள் எனக்கு விளக்கவில்லை. மேலும், கைது தொடர்பான எந்த ஆவணங்களையும் என்னிடம் தரவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

”என் கைது, சட்டத்துக்கு புறம்பானது என எனது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். நான் உப்பா கிராமத்துக்குச் சென்று துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினரை பார்க்க முடியாது என அதிகாரிகள் மூலம் எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான் எந்த சட்டவிதிகளையும் மீற இங்கு வரவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களை மட்டுமே பார்க்க வந்துள்ளேன் என முன்னரே அவர்களிடம் தெரிவித்துவிட்டேன். அந்தக் குடும்பங்களைப் பார்க்காமல் நான் இங்கிருந்து செல்லப்போவதில்லை” என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இன்று காலையும் யூம்பா கிராமத்துக்குச் செல்ல பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நேரில் சந்திப்பு

கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 12 உறவினர்கள் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை சந்தித்தனர். குழந்தைகளுடன் சுனார் விருந்தினர் மாளிகைக்கு வந்தது பிரியங்கா காந்தியை சந்தித்தனர் , தங்கள் கவலைகளை தெரிவித்து அழுதனர். அவர்களது கண்ணீரை துடைத்த பிரியங்கா காந்தி, நீண்ட தூரம் நடந்து வந்திருந்த அவர்கள் குடிக்க தண்ணீர் கொடுத்தார்

அவர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி,

”நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். உங்கள் குரலாக நாங்கள் என்றும் ஒலிப்போம்” என்று வாக்குறுதி அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி,

”நான் அவர்களை சந்திக்க வந்தேன். ஆனால், அவர்கள் என்னை சந்திக்க இங்கு வந்துள்ளனர். தங்கள் கிராமத்தில் காத்திருந்த அவர்கள், என்னைப் போலீசார் தடுத்த செய்தியை அறிந்து சந்திக்க வந்துள்ளனர். என்னைச் சந்திக்க அவர்களுக்கு நிர்வாகம் அனுமதி மறுக்கின்றது. இது ஏன் என்று எனக்கு புரியவே இல்லை” என்று பிரியங்கா கூறினார்.

”மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக எம்பி, எம்எல்ஏ என யாரும் இதுவரை உப்பா கிராமத்திறகுச் செல்லவில்லை  துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட கிராம மக்களின் உறவினர்களைப் போய்  பார்க்கவில்லை. அவர்களின் நிலைமை என்ன என்பது குறித்து கேட்டறியவில்லை.

யூம்பா கிராமத்து மக்களுடன் நாங்கள் இருப்போம் என்பதை வெளிப்படுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். அவர்களை யோகி ஆதித்யநாத் அரசு ஒடுக்க நினைக்கிறது. நாங்கள் அந்த மக்களின் குரலாக என்றும் ஒலிப்போம்” என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

பின்னர் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பி.எல்.பூனியா,

”இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை பிரதமர் நரேந்திர மோடி வந்து சந்தித்திருக்கவேண்டும். பாஜக சார்பில் யாரும் இதுவரை அவர்களை சந்திக்கவே இல்லை. அவர்களை சந்திக்க வந்த பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். ஆதித்யநாத் அரசாங்கம், அதன் தோல்விகளை மறைக்க முயற்சித்து வருகின்றது” என்று சாடினார்.