கர்நாடகாவில் ஜனநாயக படுகொலை: மக்களவையில் காங்கிரஸ் குற்றச்சாட்டு

19-07-2019 03:45 PM

புதுடில்லி

கர்நாடகாவில் நிலவும் அரசியல் பிரச்சனையை மக்களவையில் எழுப்பிய காங்கிரஸ், கர்நாடகாவில் ஜனநாயக படுகொலை நடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டியது.

மக்களவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அவை கூடியதும், கர்நாடகா பிரச்சனையை முன்வைத்து காங்கிரஸ் எம்பிக்கள் முழக்கமிட்டனர். தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து வந்து அவை நடுவில் நின்றுகொண்டு கோஷங்களை எழுப்பினர்.

திமுக எம்பிக்களும் அவர்களுடன் இணைந்துகொண்டு அவையில் பதாதைகளை ஏந்திக்கொண்டு அமளியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, சபாநாயகர் ஓம் பிர்லா இந்த பிரச்சனை குறித்து பேசலாம் என்று அனுமதி வழங்கினார். அதன் பிறகே காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் இருக்கைகளுக்குத் திரும்பினார்கள்.

இதில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சனையை முன்வைத்தார்.

“எந்த மாநிலங்களில் என்கெல்லாம் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆட்சி புரிகிறதோ, அங்கெல்லாம் அரசை கவிழ்க்க பாஜக முயற்சி செய்து வருகிறது” என்று குற்றஞ்சாட்டினார்.

கர்நாடகாவில் நடைபெறும் சம்பவங்களை எல்லாம் பார்த்தால், சட்டமன்றத்தின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அங்கு, ஜனநாயக படுகொலை அரங்கேற்றப்பட்டு வருகிறது” என்று சாடினார்.

பின்னர் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா,

”இந்த பிரச்சனையை அவையில் எழுப்பலாம். ஆனால், எந்தவொரு மாநில சட்டசபை குறித்தோ, அரசியலமைப்பு பதவியில் உள்ள தனி நபர் குறித்தோ இங்கு பேசக்கூடாது” என்று கூறினார்.