கிராமப்புற வங்கிகளைத் தனியாரிடம் கொடுக்கும் திட்டமில்லை: எம்.பி. ரவிக்குமாருக்கு மத்திய அரசு பதில்

16-07-2019 05:06 PM

புதுடில்லி

கிராமப்புற வங்கிகளை தனியாரிடம் கொடுக்கும் திட்டமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.  எம்.பி. ரவிக்குமாருக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

கிராமப்புற வங்கிகளை பலப்படுத்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் என்ன என மக்களவையில் விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் பதில் அளித்துள்ளார்.

வினா: 

அ) பிராந்திய கிராமப்புற வங்கிகளை ( RRBs) தனியார்மயமாக்கும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா?

ஆ) அவ்வாறெனில் விவரங்களைத் தரவும்

இ) இல்லாவிடில் நாட்டில் அந்த வங்கிகளை பலப்படுத்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் என்ன?

விடை :

அ) பிராந்திய கிராமப்புற வங்கிகளைத் தனியார் மயமாக்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை

ஆ) மாநிலத்துக்குள்ளிருக்கும் கிராமப்புற வங்கிகள் அனைத்தையும் இணைத்து அதன்மூலம் அவற்றின் செலவைக்குறைக்கவும், தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்திக்கொள்ளவும் வழிசெய்யப்பட்டுள்ளது

இ) அவற்றுக்கு மத்திய அரசு நிதி அளித்து ( recapitalisation) அவற்றின் மூலதனத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

ஈ) நபார்டு வங்கி மூலம் உரிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

உ) கிராமப்புற வங்கிகளின் செயல்பாடுகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து அவற்றுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க தேசிய அளவிலான கூட்டங்களை நபார்டு வங்கியும், மாநில அளவிலான கூட்டங்களை அதிகாரம்பெற்ற குழுவும் ( Empowered Committee) நடத்துகின்றன.

இவ்வாறு அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் பதிலளித்துள்ளார். அந்த பதிலின் நகல் கீழே தரப்பட்டுள்ளது.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார்மயம் என்ற அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள நிலையில் பிராந்திய ஊரக வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் அச்சத்தில் இருந்தனர். அமைச்சரின் இந்தப் பதில் அவர்களுக்கு சற்றே நிம்மதியளித்திருக்கிறது.