மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் கோஷம்; அவை ஒத்திவைப்பு

16-07-2019 01:07 PM

புதுடெல்லி

அஞ்சல் துறை ஊழியர் போட்டித் தேர்வுக்கான தேர்வு மொழிகளின் பட்டியலில் இருந்து தமிழ் விலக்கப்பட்டுள்ளது. தமிழ் தேர்வு மொழியாக இல்லாத நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14-7-2019) நடந்த தேர்வை ரத்து செய்துவிட்டு புதிதாக தமிழ்மொழியையும் தேர்வு மொழிகளின் பட்டியலில் சேர்த்து தேர்வு நடத்த வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்கள் இன்று கோஷமிட்டனர்.

அதிமுக எம்பிக்கள் தங்கள் கோஷத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் குரல் மிக அதிகமாக ஒலிக்கிறது என்ன மைத்திரேயனிடம் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

அதற்கு பதிலளித்த மைத்திரேயன் தமிழ்நாடு பற்றி எரிகிறது நீங்கள் கோஷத்தின் ஒலியைக் குறைக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதிமுக எம்பிக்கள் கோஷத்தையும் ஒலியையும் குறைக்கமாட்டார்கள் என மைத்திரேயன் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து கோஷமிட்டதால் மாநிலங்களவை 12:21 வரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, மாநிலங்களவை அலுவல்கள் செவ்வாய் அன்று துவங்கியது. அவையில் தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்களை அமைச்சர்கள் தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து அதிமுக எம்பிக்கள் அவையின் மையப்பகுதியில் கூடிநின்று முழக்கமிடத் தொடங்கினார்கள்.

அஞ்சல் துறை போட்டித் தேர்வு மொழிகளின் பட்டியலில் தமிழும் ஏற்கனவே சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது தேர்வு மொழிகளின் பட்டியலில் இருந்து தமிழ் விலக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி, தேர்வு மொழியாக இல்லாத நிலையில் கடந்த பதினைந்தாம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இது தமிழகத்திற்கு இழைக்கப்படும் பெரிய அநீதியாகும், இந்த அநீதியை சீர்செய்ய ஏற்கனவே கடந்த 15ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும். அதன்பிறகு தமிழ் மொழி தேர்வு மொழிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டு, புதிய தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். இதுதான் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை சீர் செய்வதற்கான நேரிய நடைமுறையாகும் என்று மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் கூறினார்.

இந்த பிரச்சனையை முன்னரே அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் திங்களன்று எழுப்பினார். இரண்டாம் நாளாக இன்று அதிமுக எம்பிக்கள் முதலில் நடந்த தேர்வை ரத்துச் செய்யுங்கள் என்று கோஷமிட்டனர்.

அப்பொழுது அவைத்தலைவர் வெங்கையா நாயுடு சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு நான் உத்தரவு போட முடியாது, அதேபோல புதிதாக தேர்வு மொழிகளில் தமிழ் மொழியைச் சேர்த்து அதன் பிறகு மற்றொரு தேர்வு நடத்துங்கள் என்றும் உத்தரவும் போட முடியாது, என்று வெங்கையா நாயுடு விளக்கமளித்தார்.

இதனை அதிமுக எம்பிக்கள் ஏற்கவில்லை.

அதிமுக எம்பிக்கள் கோஷம் போடுவது மாநிலங்களவை நேரலை ஒளிபரப்பில் அப்படியே ஒளிபரப்பாகும் காரணத்தினால் காமிரா பதிவை நேரலையாக அனுப்ப வேண்டாம், கேமிராவை நிறுத்துங்கள் என்று வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்தும் அதிமுக எம்பிக்கள் கோஷமிடுவதைக் கைவிடவில்லை. அதன் காரணமாக அவை 12 மணி வரை ஒத்திவைப்பதாக வெங்கையா நாயுடு அறிவித்து விட்டு அவையில் இருந்து வெளியேறினார்.

மீண்டும் கோஷம்

12 மணிக்கு மீண்டும் மாநிலங்களவை கூடியது. அப்பொழுது அஞ்சல் துறை இணை அமைச்சர் முரளிதரன் எழுந்து அரசு சார்பில் விளக்கம் அளித்தார் நாளை மத்திய அமைச்சர் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த பிரச்சனை குறித்து விளக்கம் அளிப்பார். அதனால் அதிமுக எம்பிக்கள் இப்பொழுது கோஷம் எழுப்புவதைக் கைவிட்டுவிட்டு அவை நடவடிக்கைகள் இடம் பெற உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஆனால், அதிமுக எம்பிக்கள் அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. அதைத் தொடர்ந்து அவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.