அள்ளி தருவாள் ஐஸ்வர்ய லட்சுமி!

15-07-2019 04:16 PM

தொழிலில் அமோக லாபம் அடைய விரும்புபவர்கள் திருச்சி மாவட்டம் வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோயிலில் உள்ள ஐஸ்வர்ய மகாலட்சுமியை தரிசித்து வரலாம்.

தானே உயர்ந்தவன் என்ற ஆணவத்துடன் தன் மருமகனான சிவனை அழைக்காமல் யாகம் நடத்தினான் தட்சன். அவனது மகள் தாட்சாயிணி கணவரின் கட்டளையை மீறி தந்தையிடம் நியாயம் கேட்டு அவமானத்திற்கு ஆளானாள். மனைவி மீது கோபம் கொண்ட சிவன் சபிக்க, பூலோகத்தில் பர்வதராஜனுக்கு ‘பார்வதி’ என்ற பெயரில் பிறந்தாள். பர்வதமலையில் தவம் செய்தாள். சிவனும் கைலாயத்தில் தவத்தில் ஆழ்ந்தார். சிவனும், சக்தியும் பிரிந்ததால் உலகில் உயிர்கள் செயலற்று போகும் என்பதால் தேவர்கள் மன்மதனின் உதவியை நாடினர். தவத்தை கலைக்க அம்பு தொடுத்த மன்மதனை எரித்துப் பொசுக்கினார் சிவன். அவன் எய்த பாணம் திசை மாறி பார்வதியின் மீது விழ, அவளின் தவம் கலைந்தது. தன் அவதார நோக்கத்தை உணர்ந்தவளாக 'சிவகாம சுந்தரி'யாக மாறி சிவனுடன் இணைந்தாள். இறைவன் 'காமேஸ்வரர்' என்னும் திருநாமம் பெற்றார். மன்மதனை எழுப்பி ரதியின் கண்ணுக்கு மட்டும் தெரியும்படி செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இக்கோயில் எழுந்தது.

திருக்காமேஸ்வரர் சன்னிதியில் உள்ள சிவபோக சக்கரம் போகரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இங்குள்ள சுரங்கத்தில் சிவலிங்க வடிவில் போகர் காட்சி தருகிறார். இங்குள்ள பைரவரை ‘ஞானபைரவர்’ என அழைக்கின்றனர். மாணவர்கள், ஞாயிற்றுக்கிழமை 4.30  –- 6.00 மணிக்குள் (ராகு காலம்) 16 மிளகுகளை ஒரே முடிச்சாக தீபம் ஏற்றி செவ்வரளி மாலை அணிவித்து வழிபட்டால் கல்வியில் வளர்ச்சி உண்டாகும்.

சிவனின் தரிசனம் வேண்டி, மகாலட்சுமி இங்கு தவம் செய்தாள். ஆனால், இறைவன் அவளுக்குக் காட்சி தரவில்லை. எனவே, தன்னை ஒரு வில்வ மரமாக மாற்றிக் கொண்டு வில்வ இலைகளை மழையாகப் பொழிந்து பூஜித்தாள். அதன்பின் சிவன் மனமிரங்கி காட்சி தந்தார். வில்வ மரமாகத் தோன்றி, தன்னை அர்ச்சித்த காரணத்தால், ஐஸ்வர்ய மகுடத்தை லட்சுமிக்கு அளித்து செல்வத்துக்கு அதிபதி ஆக்கினார். இத்தலத்தில் தங்கி, பக்தர்களுக்கு அவரவர் பாவ புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை அருள உத்தரவிட்டார். அவளே இங்கு ஐஸ்வர்ய லட்சுமியாக அருள் தருகிறாள்.

ஜாதகத்தில் சுக்கிரபலம் இல்லாதவர்கள் மனக்குழப்பம், பொருளாதார வீழ்ச்சி, திருமணத் தடை நீங்க வழிபடுகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் 16 தீபங்கள் ஏற்றி, 16 செந்தாமரை மலர்கள் சாத்தி, 16 முறை சுற்றி வர கிரகதோஷம் விலகும்.

இருப்பிடம்: திருச்சி - – சேலம் செல்லும் வழியில் 32 கி.மீ. துாரம். (முசிறியில் இருந்து 8 கி.மீ.,)

விசேஷ நாட்கள்: பிரதோஷம், மகாசிவராத்திரி, ஆடி வெள்ளி, தை வெள்ளி.

நேரம்: காலை 9.00 -– 11.00 மணி; மாலை 6.00 -– 07.30 மணி.Trending Now: