உலக யுனிவர்சியேட் தடகள போட்டியில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை

10-07-2019 07:39 PM

நபோலி,

  உலக யுனிவர்சியேட் தடகள போட்டியில் இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த் தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

இத்தாலியின் நபோலி நகரில் உலக யுனிவர்சியேட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், 100 மீட்டர் தடகள போட்டியில் மொத்தம் 8 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் இந்தியாவை சேர்ந்த தேசிய சாதனை படைத்த தடகள வீராங்கனையான டூட்டி சந்த் கலந்து கொண்டு 4வது வரிசையில் இருந்து தனது ஓட்டத்தினை தொடங்கினார்.

அவர் 11.32 வினாடிகளில் பந்தய இலக்கை எட்டி பிடித்து முதலாவது வீராங்கனையாக வந்து தங்க பதக்கம் தட்டி சென்றார்.

அவரை தொடர்ந்து சுவிட்சர்லாந்து வீராங்கனை டெல் போன்டி (11.33 வினாடிகள்) 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கமும், ஜெர்மனி வீராங்கனை லிசா கிவா யீ (11.39 வினாடிகள்) 3வது இடம் பிடித்து வெண்கல பதக்கமும் வென்றனர்.

ஒடிசாவை சேர்ந்த சந்த் இதற்கு முன் 11.24 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்து தேசிய சாதனையையும் படைத்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் பந்தயத்தில் தலா ஒரு வெள்ளி பதக்கம் வென்றார்.

உலக அளவில் நடைபெறும் போட்டி ஒன்றில் தங்க பதக்கம் பெறும் 2வது வீராங்கனை என்ற வரலாற்றை சந்த் படைத்துள்ளார்.

ஜனாதிபதி வாழ்த்து

உலக யுனிவர்சியேட் போட்டியில் இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த் தங்கம் வென்றதற்கு வாழ்த்துக்கள். இந்த போட்டியில்  இது இந்தியாவின் முதல் தங்க பதக்கமாகும். நம் நாட்டிற்கு மகத்தான பெருமைக்குரிய தருணமாகும். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் ஒலிம்பிக்கில் புகழை அடையலாம் என்று டுவிட்டரில் ராம் நாத் கோவிந்த் பதிவிட்டிருந்தார். 

உலக யுனிவர்சியேட் போட்டியில் இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த் தங்கம் வென்றதற்கு பிரதமர் மோடி டுவிட்டரில்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.Trending Now: