கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 187

08-07-2019 04:25 PM டி.எம்.எஸ். வளர்த்த இசை சூழல் !

டி.எம். சவுந்­த­ர­ரா­ஜ­னின் தந்தை மீனாட்சி அய்­யங்­கார்,  தான் பணி­யாற்­றிய வர­த­ரா­ஜப் பெரு­மாள் கோயி­லில் பூஜை, அழைப்­ப­வர்­க­ளுக்­குப் புரோ­கி­தம் என்­ப­தோடு தனது சேவையை நிறுத்­திக் கொள்­ள­வில்லை. பஜனை செய்­வ­தி­லும் ஈடு­பட்­டார். பஜனை சம்­பி­ர­தா­யம் இறைப்­பெ­யர்­களை இனி­மை­யான எளிய சங்­கீ­தத்­து­டன் இணைத்து அற்­பு­த­மான ஒரு கூட்டு வழி­பாட்டு முறையை வகுத்­தி­ருந்­தது. இந்த  பஜனை முறை­களை மீனாட்சி அய்­யங்­கார் அறிந்­தி­ருந்­தார்.  வர­த­ராஜ பெரு­மாள் கோயில் மண்­ட­பத்­தில் சுரு­திப் பெட்டி, மிரு­தங்­கம், வய­லி­னு­டன் அவர் குரலை உயர்த்தி பஜனை பாடத்­தொ­டங்­கும்­போது ‘கணீர்’ என்ற நாதம் ஆட்­கொண்­டு­வி­டும். ‘குரு சர­ணம் பஜரே’ என்று தொடங்கி, பல­வித கீர்த்­த­னங்­க­ளைப் பாடி ஆரத்­தி­யில் முடிப்­பார்­கள்.

மீனாட்சி அய்­யங்­கார் அத்­து­ட­னும் விடு­வ­தில்லை. பல கீர்த்­த­னை­க­ளைப் பாடி கதை சொல்­லும் கதா­கா­லட்­சே­பக்­கா­ரர்­க­ளு­டன் உட்­கார்ந்து அவர்­க­ளுக்­குப் பின்­பாட்டு பாடு­வார். வர­த­ரா­ஜப் பெரு­மாள் கோயி­லில் மீனாட்சி அய்­யங்­கார் இப்­ப­டிப் பாடி வந்த பஜ­னைப் பாட்டு,  பயம் இல்­லா­மல் கோஷ்­டி­யில் பாடும் பழக்­கத்தை சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு ஏற்­ப­டுத்­தி­யது.

வர­த­ராஜ பெரு­மாள் கோயில் இருந்த தெருவை ஒட்டி மற­வர் சாவடி இருந்­தது. கோயி­லில் சாமி கும்­பிட்டு, அப்­பா­வைப் பார்த்­து­விட்டு,  மற­வர் சாவ­டி­யில்  நடக்­கும் தெருக்­கூத்­தைப் பார்க்க சவுந்­த­ர­ரா­ஜன் ஓட்­டம் பிடிப்­பார்.

தெரு­விலே ஒரு சின்ன மேடை இருக்­கும். இரண்டு பக்­கம் திரை ஒன்­றைப் பிடித்­தி­ருப்­பா ர்­கள். நடி­கர்­கள், சாரா­யம், கள் ஆகி­ய­வற்­றைக் குடித்­து­விட்டு நிற்­பார்­கள். தீவட்­டி­க­ளின் வெளிச்­சம்­தான்.  ‘கட்­ட­பொம்­மன்’ நாட­கம். டோலக்/ நகரா  ‘படார் படார்’ என்று இடி­போல் ஒலிக்க, கட்­ட­பொம்­ம­னாக நடிப்­ப­வர் பாடிக்­கொண்டு மேடையை வலம் வரு­வார். பீடி பிடித்­துக்­கொ ண்டு மக்­கள் கூட்­டம் சுற்றி நிற்­கும்.

‘வாராண்டா வாராண்டா வெள்­ளைக்­கா­ரன்’..... என்ற கட்­ட­பொம்­மன் பாட்­டைப் பலர் கோரஸ் பாடிக் கொண்­டி­ருப்­பார்­கள். அதற்­குள்ளே கட்­ட­பொம்­மன் ‘சோடா’ என்று கேட்­பார். சோடா உடைத்­துக் கொடுப்­பார்­கள். ‘என்­னடா மாலை­யைப் போடாம இருக்­கீங்க?’ என்று வெள்­ளைக்­கா­ரர்­களை மிரட்­டிய தோர­ணை­யில் கூத்­தைப் பார்க்க வந்­த­வர்­க­ளைக் கட்­ட­பொம்­மன் மிரட்­டு­வார்! பீடி மாலை­யைக் கொண்­டு­வந்து போடு­வார்­கள்!

சிறு­வன் சவுந்­த­ர­ரா­ஜன் மெய்­ம­றந்து பார்த்­துக்­கொண்டு நிற்­பார். ஆனால் கூத்­தை­யும் நாட­கத்­தை­யும் சவுந்­த­ர­ரா­ஜன் அவ்­வ­ள­வாக விரும்­ப­வில்லை. பேசும் படம் புதி­தாக வந்து நாட­கத்­தின் மவுசை மெல்­லக் குறைத்­துக் கொண்­டி­ருந்த காலத்­தில் அவர் வளர்ந்­தது ஒரு கார­ண­மாக இருக்­க­லாம். இன்­னொரு கார­ண­மும் இருந்­தது. நாட­கக்­கா­ரர்­க­ளின்  சங்­கத்­திற்­கெல்­லாம் போய் அவர்­க­ளின் பழக்­க­வ­ழக்­கங்­க­ளைப் பார்க்க நேர்ந்த போது அவை மரி­யா­தைக்கு உரி­ய­வை­யாக சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு  பட­வில்லை. நாட­கக்­கா­ரர்­க­ளின் பேச்சு அவ­ருக்­குப் கொச்­சை­யா­கப் பட்­டது. அவர்­கள் கள்­ளும் சாரா­ய­மும் குடித்­தி­ருப்­பார்­கள். பீடி பிடிப்­பார்­கள். சவுந்­த­ர­ரா­ஜன் அவர்­க­ளைக் கவு­ர­வ­மா­ன­வர்­க­ளாக நினைக்­க­வில்லை. (அக­வு­ர­வ­மான விஷ­யங்­களை சில சினி­மாக்­கா­ரர்­க­ளும் மற்­ற­வர்­க­ளும் திரை­ம­றை­வில் முடித்­துக் கொள்­வார்­கள்!)

புனித மேரி பள்­ளி­யில் மூன்­றாண்­டு­கள் படித்­த­பின், சவு­ராஷ்­டிரா உயர்­நி­லைப்­பள்­ளி­யில் சவுந்­த­ர­ரா­ஜ­னின் படிப்பு தொடர்ந்­தது. அந்­தப் பள்­ளி­யில் படித்­துத் தேறி­னால், சவு­ராஷ்­டி­ரர்­கள் நடத்­தும் நிறு­வ­னங்­க­ளில் வேலை கிடைக்­கும் என்ற எதிர்­பார்ப்­பு­தான் பள்ளி மாற்­றத்­திற்­கான கார­ண­மாக இருந்­தது. இதற்­குத் துணை­போக,  சவுந்­த­ர­ரா­ஜன் எடுத்­துக்­கொண்ட சிறப்­புப் பாடம் - வணி­கக் கணக்கு (புக்–­கீப்­பிங்).

இந்த  கால­கட்­டத்­தில், நாடெங்­கும் ஒலித்­துக் கொண்­டி­ருந்த  தியா­க­ராஜ பாக­வ­த­ரின் திரைப் பாடல்­கள் சவுந்­த­ர­ரா­ஜனை மிக­வும் கவர்ந்­தன. பாக­வ­த­ரின் பாடல்­க­ளைப் பாட­வேண்­டும் போல் இருந்­தது சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு. ஏனோ தெரி­ய­வில்லை, திரை­யில் மற்­ற­வர்­கள் பாடிய பாடல்­களை விட, பாக­வ­த­ரின்  பாடல்­கள் சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு எளி­தாக வச­மா­கின. அவ­ரு­டைய குரல்­வாகு பாக­வ­த­ரின் குரல் வாகு­டன் ஒத்­துப்­போ­னது.

‘பவ­ளக்­கொடி’ படத்­தின் வாயி­லாக 1934ல் திரை உல­குக்கு அறி­மு­க­மான பாக­வ­தர், ‘நவீன சாரங்­க­த­ரா’­வில், ‘சிவ­பெ­ரு­மான் கிருபை வேண்­டும்’ என்று பாடி­னார்!  ‘‘அவ­லப் பிறப்­பொ­ழிய வேண்­டும், அதற்கு வித்­தாம் , அவ­மாயை அக­ல­வேண்­டும்!’’, என்று இந்த பாட­லில் பாக­வ­தர் பாடு­வ­தைக் கேட்ட சவுந்­த­ர­ரா­ஜ­னின் மதி­ம­யங்­கி­யது! அதைப் பாடிப் பாடிப் பார்த்து, அனு­ப­வத்­தில்  கிடைத்த ஆனந்­தம் அலா­தி­யா­னது! ‘அம்­பி­கா­பதி’, ‘சிந்­தா­மணி’, ‘திரு­நீ­ல­கண்­டர்’, ‘அசோக்­கு­மார்’, ‘சிவ­கவி’ என்று  வரி­சை­யாக வந்த வெற்­றிப்­ப­டங்­க­ளைப் பார்ப்­ப­தும் அவற்­றின் பாடல்­களை   உருப்­போ­டு­வ­தும் சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு வாடிக்­கை­யாகி விட்­டது.

‘ராதே உனக்­குக் கோபம் ஆகா­தடி’ என்ற  பாக­வ­த­ரின் ‘சிந்­தா­ம­ணி’ப் பாடலை பாடிக்­கொண்டு சைக்­கிளை மிதிக்­கும் போது தென்­றல் தொடர்ந்து தவழ்ந்து வரு­வ­து­போல் தோன்­றும் சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு. நூறு  பக்­திப் பாடல்­க­ளைத் தொடர்ந்து பாடி­னால் அம­ரா­வ­தியை கரம் பிடிக்­க­லாம் என்று ராஜ­ச­பை­யில் சவாலை ஏற்­றுப் பாடிக்­கொண்­டி­ருப்­பான் அம்­பி­கா­பதி. எண்­ணிக்கை தவறி, ஒரே­வொரு பாட்­டில் தன் இலக்கை இழந்து, அம­ரா­வ­தி­யின் அழகை,

‘‘சற்றே சரிந்த குழலே துவள

குழை ஊச­லாட, நட­ன­சிங்­கார

நடை­யு­டை­யா­ளின் தலை­ய­லங்­கா­ரம் புறப்­பட்­டதே’’ என்று வர்­ணித்து, உருக்­கத்­தின் உச்­சிக்கு பாக­வ­தர் செல்­லும் போது, இளம் சவுந்­த­ர­ரா­ஜ­னின் மனம், இசைக்­கும் இள­மைக்­கும் பொது­வான ஒரு துடிப்­பில் துள்­ளும். (பின்­னா­ளில், தானே வெற்­றிப் பாடல்­கள் பாடிய சிவாஜி நடித்த ‘அம்­பி­கா­பதி’ படம் கூட, சவுந்­த­ர­ரா­ஜனை அந்த அள­வுக்­குக் கவ­ர­வில்லை!)

சவு­ராஷ்­டிரா பள்­ளி­யில் நாலா­வது பாரத்­தில் சேரும் போது சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு வயது பதி­னாறு இருக்­கும். பள்­ளிப் படிப்பு இரண்டு, மூன்று ஆண்­டு­கள் தாம­த­மா­கத்­தான் சென்­று­கொண்­டி­ருந்­தது. பள்­ளி­யில் சேர்ந்­த­வு­டனே, பிரார்த்­த­னைப் பாடல்­களை தினம் பாடு­வது சவுந்­த­ர­ரா­ஜ­னின் வேலை ஆனது.   பாக­வ­தர் பாடல்­கள்­தான் அத்­துப்­படி ஆயிற்றே. பிரார்த்­தனை கீதம் பாடும் கட­மையை இல­கு­வா­கச் செய்ய முடிந்­தது. ‘சிவ­பெ­ரு­மான் கிருபை வேண்­டும்’ ஒரு நாள். இன்­னொரு நாள் ‘சிந்­தா­ம­ணி’­யி­லி­ருந்து ‘ஞானக்­கண் ஒன்று இருந்­தி­டும் போதி­னிலே’. ஒரு நாள், ‘திரு­நீ­ல­கண்­ட’­ரி­லி­ருந்து ‘தீன­க­ரு­ணா­க­ரனே நட­ராஜா’ (அ) ‘சிதம்­ப­ர­நாதா திரு­வ­ருள் தா தா’ (அ) ‘ஒரு நாள் ஒரு பொழு­தா­கி­னும்’. இன்­னொரு நாள் ‘அசோக்­கு­மா­ரி’­லி­ருந்து ‘சத்­வ­கு­ண­போ­தன்’ அல்­லது ‘பூமி­யில் மானிட ஜன்­மம்’. உல­கமே போற்­றும் பாக­வ­த­ரின் பாடல்­க­ளைப் பையன்­க­ளின் முன் பாடும் போதும், சிலர் பாராட்­டும் போதும் சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு ஒரு இனம் தெரி­யாத இன்­ப­மும் பெரு­மை­யும் ஏற்­பட்­டுக் கொண்­டி­ருந்­தன.

சவு­ராஷ்­டிரா பள்­ளி­யில் சவுந்­த­ர­ரா­ஜ­னின் நடிப்பு ஆர்­வம் தொடர்ந்­தது. ஒவ்­வொரு வரு­ட­மும் கால் பரீட்சை, அரை பரீ0ட்சை, முழு பரீட்சை வரு­வ­தற்கு முன் நாட­கம் போடு­வ­தில் சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு ஈடு­பாடு இருந்­தது. பள்­ளி­யில் சங்­கீத வாத்­தி­யா­ராக இருந்த சாரங்­க­பாணி, பாக­வ­தர் பாடல்­க­ளுக்கு இசை­ய­மைத்­தார். சவு­ராஷ்­டிரா உயர்­நி­லைப்­பள்­ளி­யில் இசை­யும் சொல்­லிக் கொடுக்­கப்­பட்­டது. சரளி வரிசை, ஜண்டை வரிசை, கீதங்­கள் என்று இசைக்­க­லை­யின் அரிச்­சு­வ­டி­க­ளு­டன் பள்­ளி­யி­லேயே சவுந்­த­ர­ரா­ஜ­னுக்­குப் பரிச்­ச­யம் ஏற்­பட்­டது.  

சவுந்­த­ர­ரா­ஜ­னின் அண்­ணன் சீனி­வா­ச­னுக்­குத் திரு­ம­ண­மாகி மாட்­டுப்­பெண் வீட்­டுக்கு வந்­தி­ருந்­தாள். பல­வித மனக்­கி­லே­சங்­க­ளால் அம்­மா­வுக்கு ஒரு­வி­த­மான மன­பே­தம் ஏற்­பட்­டு­விட்­டது. பள்­ளி­யில் ‘உத்­தம நண்­பன்’ நாட­கத்­தில் சவுந்­த­ர­ரா­ஜன் நடிக்­கும் போது அம்­மா­வும் நாட­கம் பார்க்க வந்­தி­ருந்­தாள். சவுந்­த­ர­ரா­ஜன் கைது செய்­யப்­ப­டு­வ­து­போல் ஒரு காட்சி வரும். ‘என் புள்­ளையை ஒண்­ணும் பண்­ணா­தீங்க...என் புள்­ளையை விட்­டு­டுங்க’ என்று அம்மா எழுந்து கத்த ஆரம்­பித்­து­விட்­டாள்.

வீட்­டில் உள்­ள­வர்­கள் அம்­மா­வி­டம் அனு­ச­ர­ணை­யாக நடந்­து­கொள்­ள­வில்லை என்று சவுந்­த­ர­ரா­ஜ­னுக்­குத் தோன்­றும். ஒரு குடம் எடுத்­துக்­கொண்டு ‘நான் கன்­னி­டா’­என்று சொல்­லிக்­கொண்டு அம்மா வீட்டை வளைய வரு­வாள். பெரிய பெரிய ஏப்­பம் விட்­டுக்­கொண்டு வீட்டு வாச­லில் இருக்­கும் குழாய் அரு­கில் செல்­லு­வாள். ‘கன்னி வர்­றாடா’ என்று எல்­லோ­ரும் வில­கி­வி­டு­வார்­கள்.  இத்­த­னைக்­கும் அம்மா இனி­மை­யா­கப் பாடு­வாள். ‘வேலவா நீ வர­வேண்­டும்’ என்று அவள் பாடும் போது கேட்­ப­தற்கு சுக­மாக இருக்­கும்.

பள்­ளி­யில் சவுந்­த­ர­ரா­ஜன் நாட­கங்­க­ளில் நடிக்­கும் போது,  ஒரு சவு­ராஷ்­டிர இளை­ஞர் மிக ஆர்­வ­மாக ரசித்­துக்­கொண்­டி­ருப்­பார். அந்த இளை­ஞ­ரின் பெயர் பாப்ஜி ஜனார்த்­தன். ஒரு பிர­பல சாயக் கம்­பெனி முத­லா­ளி­யின் மகன். சவுந்­த­ர­ரா­ஜனை விட வய­தில் ஆறு- ஏழு ஆண்­டு­கள் மூத்­த­வர்.

பாப்ஜி ஜனார்த்­த­னுக்கு சங்­கீ­தத்­தில் அதிக நாட்­டம் இருந்­தது. பிர­பல மிரு­தங்க வித்­வான் பழநி சுப்­ர­ம­ணிய பிள்­ளை­யி­டம் மிரு­தங்­கம் கற்று வந்­தார். சுப்­ர­ம­ணிய பிள்ளை மதுரை வரும் போது ஜனார்த்­தன் வீட்­டில் ஓரிரு வாரங்­கள் தங்கி அவ­ருக்கு சொல்­லிக்­கொ­டுப்­பார் . திருச்­சி­யி­லி­ருந்த சுப்­ர­ம­ணிய பிள்ளை வீட்­டிற்கு  ஜனார்த்­தன் சென்று,  சில நாட்­கள் தங்கி, மிரு­தங்­கம் பயின்­ற­தும் உண்டு. இசை­யி­லும் கலை­க­ளி­லும் பரம ரசி­க­ராக இருந்த பாப்ஜி ஜனார்த்­தன் சவுந்­த­ர­ரா­ஜ­னி­டம் நட்­பு­டன் பழக ஆரம்­பித்­தார். சவுந்­த­ர­ரா­ஜ­னைப் பாடச் சொல்லி அந்­தப் பாட்­டி­லி­ருந்த நன்மை, தீமை­களை விளக்­கு­வார்.

ஒவ்­வொரு ஞாயி­றும் தன் காரில் சவுந்­த­ர­ரா­ஜ­னின் ஓட்டு வீட்­டுக்கு வந்­து­வி­டு­வார் ஜனார்த்­தன். சங்­கீத சம்­ரட்­சண சபா, மதுரை தமிழ் இசை  சங்­கம் போன்ற இடங்­க­ளில் அரி­யக்­குடி ராமா­னுஜ அய்­யங்­கார், ஜி.என்.பால­சுப்­ர­ம­ணி­யன், செம்­மங்­குடி ஸ்ரீநி­வாச அய்­யர் போன்ற வித்­வான்­க­ளின் கச்­சே­ரி­கள் நடக்­கும். அவற்­றுக்கு சவுந்­த­ர­ரா­ஜனை அழைத்­துச் செல்­வார் ஜனார்த்­தன்.  கச்­சேரி முடிந்த பிறகு ஜனார்த்­தன் வீட்­டில் டிப­னுக்கு இடை­யில் வித்­வான்­கள் பாடி­ய­தைப் பற்றி விவா­தம் தொடங்­கும். இவற்­றால் சவுந்­த­ர­ரா­ஜ­னின் இசை ஞானம் வளர்ந்­தது.  

ராகங்­க­ளைப் பற்றி விவா­திக்­கத் தொடங்­கு­வார் ஜனார்த்­தன். கல்­யா­ணி­யிலே என்ன கீர்த்­த­னை­கள் இருக்கு தெரி­யுமா உனக்கு என்று தொடங்­கி­னால் ‘ஏதா­வு­னரா’, ‘எந்­துகோ நீ மனசு’, ‘நிதி­சால சுகமா’ என்று அடுக்­கு­வார் ஜனார்த்­தன்.  பாக­வ­தர் பாடல்­க­ளைக் கேட்டு அவற்றை அப்­ப­டியே பாடு­வ­தில் மட்­டும் கவ­னம் செலுத்தி வந்த சவுந்­த­ர­ரா­ஜ­னுக்­குப் பிர­மிப்­பாக இருக்­கும்.  பாக­வ­தர் பாடிய ‘மாநில வாழ்வு பெரும் ஆனந்­தம்’  கல்­யாணி ராகத்­தில் அமைந்­தி­ருக்­கிற முறை­யைக் கவ­னித்­தாயா என்று ஆரம்­பிப்­பார் ஜனார்த்­தன்.  சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு கல்­யாணி ராகத்­தின் நெளிவு சுளி­வு­கள்  இன்­னும் தெளி­வாக விளங்க ஆரம்­பிக்­கும்!  ‘தட்ச யக்­ஞ’த்­தில் சிவ­பெ­ரு­மா­ னாக வரும் வி.ஏ.செல்­லப்பா பாடி­னாரே, ‘தனி­யாய் எனை விடுத்­தாய்’ என்ற பாட­லும் கல்­யாணி ராகம்­தான் என்­பது பெரிய கண்­டு­பி­டிப்­பாக இருந்­தது.   கல்­யா­ணி­யிலே வேறென்ன பாடல் இருக்கு? பாக­வ­தர் நடித்த  ‘அம்­பி­கா­ப­தி’­யில் சோழன் சபை­யில் கச்­சேரி செய்­யும்­போது  ஹொன்­னப்ப பாக­வ­தர் பாடு­வாரே... ‘உனை­யல்­லால் கதி யார்’’... அப்­ப­டியே கல்­யா­ணி­

யில் அமைஞ்­சி­ருக்கே – நண்­பன் பாபு ஜனார்த்­தன் வாயி­லாக சவுந்­த­ர­ரா­ஜ­னின் இசை அறிவு செழுமை அடைந்­தது.

(தொட­ரும்)Trending Now: