சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 399– எஸ்.கணேஷ்

03-07-2019 03:53 PM

நடி­கர்­கள் : விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, எஸ்.ஜே.சூர்யா (கவுர­வத்­தோற்­றம்), இலி­யானா டிகு­ரூஸ், சத்­ய­ராஜ், சத்­யன், அனுயா, அஜய் ரத்­னம் மற்­றும் பலர்.

இசை : ஹாரிஸ் ஜெய­ராஜ், ஒளிப்­ப­திவு : மனோஜ் பர­ம­ஹம்சா, எடிட்­டிங் : ஆண்­டனி, தயா­ரிப்பு :     ஜெமினி பிலிம் சர்க்­யூட், கதை, திரைக்­கதை : ராஜ்­கு­மார் ஹிரானி, இயக்­கம் : ஷங்­கர்.

சென்­னை­யில் புகழ்­பெற்ற ஐடி­யல் இன்­ஜி­னி­ய­ரிங் காலே­ஜில் முத­லா­மாண்டு மாண­வர்­க­ளாக சேரு­கி­றார்­கள் வெங்­கட் ரா­ம­கி­ருஷ்­ணன் (ஸ்ரீகாந்த்), சேவற்­கொடி செந்­தில்(ஜீவா), பஞ்­ச­வன் பாரி­வேந்­தன் (விஜய்). அந்த கல்­லூ­ரி­யின் முதல்­வ­ரான வைரஸ் என்­ற­ழைக்­கப்­ப­டும் விரு­மாண்டி சந்­த­னம் (சத்­ய­ராஜ்) மிக­வும் கண்­டிப்­பா­ன­வர். முதல் நா­ளி­லேயே சிக்­க­லான கேள்­விக்கு பதி­ல­ளித்து அவ­ரது பேனாவை பரி­சாக பெறு­கி­றான் பாரி. ஹாஸ்­ட­லில் ஒரே ரூமில் தங்­கும் மூவ­ரும் தங்­க­ளது லட்­சி­யத்­தினை பகிர்ந்து கொள்­கி­றார்­கள். வைல்ட்லைப் போட்­டோ­கி­ரா­ப­ராக ஆசைப்­ப­டும் வெங்­கட் தனது உற­வு­க­ளுக்­காக தந்­தை­யின் வற்­பு­றுத்­த­லால் இன்­ஜி­னி­ய­ரிங் படிக்­கி­றார். வறு­மை­யான குடும்­பத்­தைச் சேர்ந்த செந்­தில் இன்­ஜி­னி­ய­ராகி பணம் சேர்த்து தனது அக்­கா­விற்கு திரு­ம­ணம் செய்து வைக்­க­வேண்­டிய நெருக்­க­டி­யில் இருக்­கி­றார். தனது ஆர்­வத்­திற்­காக மட்­டுமே படிக்­கும் பாரி, ஆர்­வ­முள்ள துறையை தேர்ந்­தெ­டுக்­கு­மாறு நண்பர்­ளுக்­கும் அறி­வு­றுத்­து­கி­றான்.

பாடங்­கள் அனைத்­தை­யும் மனப்­பா­டம் செய்து மார்க் வாங்­கும் மாண­வன் ஸ்ரீவத்­ஸ­னும் (சத்­யன்), முதல்­வர் வைர­ஸும், மார்க்­குக்­காக இல்­லா­மல் புரிந்து படிக்­கும் பாரி­யின் கல்­வி­மு­றை­யால் எரிச்­ச­லா­கி­றார்­கள். விருந்து சாப்­பாட்­டிற்­காக அழையா விருந்­தா­ளி­யாக நண்பர்கள் மூவ­ரும் வைரஸ் மகள் ஸ்வேதா­வின் (அனுயா) திரு­ம­ணத்­திற்கு செல்­கி­றார்­கள். அங்கு சந்­திக்­கும் ரியா­விற்கு (இலி­யானா டிகு­ரூஸ்) அவ­ரின் எதிர்­கால மாப்­பிள்ளை மனதை விட்டு பணத்தை மதிப்­ப­வன் என்று புரிய வைக்­கி­றான் பாரி. வைர­ஸின் இளை­ய­ம­க­ளான ரியா வைர­ஸி­டம் இவர்­களை மாட்­டி­விட எரிச்­ச­லா­கும் வைரஸ் நண்பர்களை பிரிக்க நினைக்­கி­றார். நண்பனை பிரிய வெங்­கட் மறுக்க, சம்­ம­திக்­கும் செந்­தில் பாரி­யி­ட­மி­ருந்து வில­கு­கி­றான். செந்­தி­லின் தந்­தைக்கு உடல்­ந­லம் சரி­யில்­லாத நேரத்­தில் சம­யோ­சி­த­மாக செயல்­பட்டு பாரி அவ­ரது உயிரை காப்­பாற்ற மருத்­துவ மாண­வி­யான ரியா பாரியை விரும்­பத்­தொ­டங்­கு­கி­றாள்.

முதல் வரு­டத்­தில் முதல் மாண­வ­னாக பாரி தேர்ச்­சி­ய­டைய மற்ற இரு­வ­ரும் கடைசி இடத்­தில் இருக்­கி­றார்­கள். மற்ற மாண­வர்­களை தேர்வு நேரத்­தில் திசை திருப்­பும் ஸ்ரீவத்­ஸனை, கல்­லூரி விழா­வில் விருந்­தி­னர் முன்­னி­லை­யில் தவ­றாக பேச­வைத்து அடி­வாங்க வைக்­கி­றான் பாரி. இத­னால் கோப­ம­டை­யும் ஸ்ரீவத்­ஸன் பத்து வரு­டங்­கள் கழித்து பாரியை விட தான் வாழ்­வில் ஒரு­படி முன்னே இருப்­பேன் என்று சப­தம் செய்­கி­றான். கல்­லூ­ரி­யின் கடைசி வரு­டத்­தில், போதை­யில் இருக்­கும் நண்பர்கள் ரியா­வி­டம் காதலை சொல்ல பாரியை தூண்­டு­கி­றார்­கள். இர­வில் வைரஸ் வீட்­டிற்கு போய் திரும்­பும் நண்பர்க­ளில் செந்­திலை வைரஸ் பார்த்து விடு­கி­றார். அடுத்த நாள், பாரியை மாட்­டி­விட வேண்­டும் இல்­லை­யென்­றால் கல்­லூ­ரி­யி­லி­ருந்து வெளி­யேற்­று­வ­தாக செந்­திலை மிரட்­டு­கி­றார். நண்ப­னுக்கு துரோ­கம் செய்ய விரும்­பா­மல் மாடி­யி­லி­ருந்து கீழே குதிக்­கும் செந்­தில் கோமா­வுக்கு செல்­கி­றான்.

செந்­தி­லோடு துணை­யா­யி­ருந்து நினை­வுக்கு கொண்டு வரும் நண்பர்கள் அவ­னுக்கு தைரி­யம் அளித்து கேம்­பஸ் இண்­டர்­வி­யூ­வில் கலந்து கொள்ள வைக்­கி­றார்­கள். செந்­தி­லின் தன்­னம்­பிக்­கை­யான பதி­லால் கவ­ரப்­ப­டும் நிறு­வ­னத்­தார் தேர்­வில் தேறி­ய­தும் வேலை­ய­ளிப்­ப­தாக உறு­தி­ய­ளிக்­கி­றார்­கள். பாரி­யின் முயற்­சி­யால் வெங்­கட்­டின் மனம் கவர்ந்த வைல்ட் லைப் போட்­டோ­கி­ரா­ப­ரி­ட­மி­ருந்து அழைப்­புக் கடி­தம் வரு­கி­றது. மனம் மா­றும் வெங்­கட்­டின் தந்­தை­யும் சம்­ம­தம் தெரி­விக்­கி­றார். தேர்­வில் செந்­தில் தோற்­ப­தற்­காக வைரஸ் கடி­ன­மான கேள்­வித்­தாளை உரு­வாக்­கு­கி­றார். ரியா­வின் உத­வி­யு­டன் வைர­ஸின் ஆபீசி­லி­ருந்து கேள்­வித்­தாளை பாரி­யும், வெங்­கட்­டும் திரு­டு­கி­றார்­கள். உண்மை தெரிந்து வைரஸ் மூவ­ரை­யும் டிஸ்­மிஸ் செய்து வெளி­யே­றச் சொல்­கி­றார்.

கோப­ம­டை­யும் ரியா தனது தந்­தை­யு­டன் சண்­டை­யி­டு­கி­றார். உங்­க­ளது வற்­பு­றுத்­த­லால் ஐடி­யல் காலே­ஜில் சேர முயன்று தோற்­றுப்­போ­ன­தால், எழுத்­தா­ளா­னாக நினைத்த தனது சகோ­த­ரன் தற்­கொலை செய்து கொண்­ட­தாக குற்­றம் சாட்­டி­விட்டு கிளம்­பு­கி­றாள். கர்ப்­பி­ணி­யான ஸ்வேதா பிர­சவ வேத­னை­யில் துடிக்க, கடு­மை­யான மழை­யால் வாக­னம் எது­வும் கிடைக்­கா­மல் வைரஸ் தவிக்­கி­றார். ஹாஸ்­ட­லி­லி­ருந்து வெளி­யே­றும் நண்பர்கள், பாரி கண்­டு­பி­டித்த இன்­வெண்­டர் மற்­றும் இருக்­கும் உப­க­ர­ணங்­க­ளைக் கொண்டு பிர­ச­வத்­திற்கு தயார் செய்­கி­றார்­கள். வீடியோ காலிங் மூலம் ரியா­வின் உத­வி­யு­டன் பாரி பிர­ச­வம் பார்க்­கி­றான். தனது மக­ளை­யும் குழந்­தை­யை­யும் காப்­பாற்­றிய பாரி­யை­யும், நண்பர்க­ளை­யும் மன்­னிக்­கும் வைரஸ் அனை­வ­ரை­யும் தேர்­வெ­ழுத அனு­ம­திக்­கி­றார். பட்­ட­ம­ளிப்பு விழா­வில் அனை­வ­ரும் மகிழ்ச்­சி­யோடு பங்­கேற்ற பின் பாரி மாய­மா­கி­றான்.

பத்து வரு­டங்­க­ளுக்­குப் பிறகு, புகழ்­பெற்ற வைல்டு லைப் போட்­டோ­கி­ரா­ப­ராக இருக்­கும் வெங்­கட், சாப்ட்­வேர் இன்­ஜி­னி­ய­ராக வச­தி­யாக வாழும் செந்­திலை பாரியை பார்ப்­ப­தற்­காக ஊட்­டிக்கு அழைக்­கி­றான். ஊட்­டி­யில் சந்­திக்­கும் ஸ்ரீவத்­ஸன் சயிண்­டிஸ்ட் கொசக்ஸி பசப்­பு­கழை தேடும்­போது பாரியை அங்கு பார்த்­த­தாக சொல்­கி­றான். பாரி­யின் வீட்­டில் உண்­மை­யான பஞ்­ச­வன் பாரி­வேந்­தனை (எஸ்.ஜே.சூர்யா) பார்த்து அதிச்­சி­ய­டை­கி­றார்­கள். அவர்­கள் வீட்­டில் சிறு­வ­னாக வேலை செய்த படிப்­பில் ஆர்­வம் உள்ள பப்­புவை, தனது தந்தை (அஜய் ரத்­னம்) பாரி­யாக படிக்க வைத்த கதையை உண்­மை­யான பாரி சொல்­கி­றார். தனது பட்­டத்­தை­யெல்­லாம் பாரி­யி­டம் ஒப்­ப­டைத்து விட்டு தனுஷ்­கோ­டி­யில் பப்பு பள்ளி நடத்­து­வ­தாக கூறு­கி­றான். பத்து வரு­டங்­க­ளாக பாரிக்­காக காத்­தி­ருந்து வைர­ஸின் விருப்­பப்­படி திரு­ம­ணம் செய்ய இருந்த ரியா­வை­யும் அழைத்­துக்­கொண்டு நண்பர்கள் தனுஷ்­கோடி செல்­கி­றார்­கள்.

சிறு­வர்­க­ளுக்கு பிடித்­த­படி செயல்­முறை கல்­வியை வழங்­கும் பள்­ளி­யில், பாரியை சந்­திக்­கும் நண்பர்க­ளும், காதலி ரியா­வும் மகிழ்ச்­சி­ய­டை­கி­றார்­கள். சொந்த நிறு­வ­னத்தை நடத்­தும் செல்­வந்­த­ரான தன்­னி­டம், பள்ளி ஆசி­ரி­ய­ராக இருக்­கும் பாரி தோற்­று­விட்­ட­தாக கூறி ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்து வாங்­கு­கி­றான் ஸ்ரீவத்­ஸன். ’கொசக்ஸி பசப்­பு­கழ்’ என்ற கையெ­ழுத்தை பார்த்து அதிர்ச்­சி­யா­கும் ஸ்ரீவத்­ஸன், தான் தேடிய புகழ்­பெற்ற சயிண்­டிஸ்ட் மற்­றும் பிசி­னஸ்­மேன் ’பாரி’­­தான் எனத் தெரிந்து தோல்­வியை ஒப்­புக்­கொள்ள, நண்பர்கள் பெரு­மை­ய­டை­கி­றார்­கள்.
Trending Now: