40 ஆண்டுகளுக்குப் பின் நீரில் இருந்து எழுந்தருளும் அத்திவரதர்!

02-07-2019 03:48 PM

தொண்டை மண்டலமான காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். ஸ்ரீரங்கம், திருப்பதி ஆகிய தலங்களுக்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த தலமான இது, 31வது திவ்ய தேசமாகும்.

வரலாறு

கிபி 1053 இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் விரிவாக்கப்பட்டதாக கல்வெட்டுகள் மூலம் அறியபடுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் இக்கோவிலை விரிவுபடுத்தினர். பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர்.

கல்யாண மண்டபத்தில் 8 வரிசைகளில், வரிசைக்கு 12 தூண்களாக 96 சிற்பக்கலை மிக்க தூண்கள் உள்ளன. தூண்களில் யாளி, போர்க்குதிரை மீது வீரர்கள் என பல சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குள் உள்ள சிறிய நான்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கப்படுகிறது.

இதன் 4 மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள், சிற்பக்கலையின் விந்தையாகும். அனைவரையும் வியக்கவைக்கும் வகையில் அமைந்துள்ளன.

கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்துள்ளது.

கற்சங்கிலி
கலைநயமிக்க மண்டபம்

மூலவராகிய தேவராஜப் பெருமாள், வேழமலை (அத்திகிரி) மீது நின்ற திருக்கோலத்தில் மேற்கே பார்த்தபடி நாற்கரத்துடன் அருள்பாலிக்கிறார். பெருமாளை காண்பதற்கு இருபத்திநான்கு படி ஏறிச்செல்லவேண்டும்.

மூலவரை நோக்கியபடி தென்மேற்கே பெருந்தேவி தாயாருக்கு தனி சன்னதியும், திருக்குளத்தின் எதிரே சக்கரத்தாழ்வார் சன்னிதியும் உள்ளன. கோயில் வெளி பிரகாரத்தில் கிருஷ்ணன், ராமர், வராகபெருமாள், ஆண்டாள், ஆழ்வார்கள்,களியமானிக்க பெருமாள், ஆச்சார்யர்கள் சன்னதிகளும் மற்றும் நம்மாழ்வார் சன்னதிகளும் உள்ளன.

தங்க வெள்ளி பல்லிகள்
வரதராஜ பெருமாள் சன்னதிக்கு செல்லும் வழியில் தங்கம் மற்றும் வெள்ளியிலான பல்லிகள் சிறப்புவாய்ந்ததாகும். இதன் வரலாறு என்னவென்று பார்ப்போமா?
ஸ்ருங்கிபேரர் என்ற முனிவருக்கு ஹேமன், சுக்லன் என்று 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் கெளதம முனிவரிடம் வித்தை பயின்றனர். இவர்கள் இருவரும் விஷ்ணு பூஜைக்குப் பழங்கள், மலர்கள், தீர்த்தம் கொடுக்கும் பணியினை மேற்கொண்டிருந்தனர்.
ஒருநாள் அவர்கள் கொண்டுவந்த தீர்த்தத்தை மூடாமல் வைக்க, அதில் ஒரு பல்லி விழுந்துவிட்டது. இதை அறியாத இவர்கள் அத்தீர்த்தத்தை அப்படியே கொண்டுவந்து கெளதம முனிவரிடம் கொடுக்க, முனிவர் அதை பெற்றுக்கொண்டபோது அதிலிருந்த பல்லி வெளியில் தாவி ஓடியது.
அதைக்கண்டு கடும் கோபமுற்ற கெளதம முனிவர் அவர்கள் இருவரையும் நோக்கி பல்லியாகக்கடவது என்று சாபமளித்தார். இதனால் கவலையடைந்த ஹேமன், சுக்லன் இருவரம் முனிவரின் பாதங்களில் விழுந்து வணங்கி, தங்களை மன்னித்து, பாவ விமோசனமும் கூற வேண்டும் என வேண்டினர்.
உடனே முனிவர் சாந்தமடைந்து, இந்திரன் யானை வடிவம் கொண்டு (கஜேந்திரனாக) வரதராஜ பெருமாளை தரிசிக்க சந்நிதியில் நுழையும்போது சாபம் அகலும் என்று கூறினார்.
அதன்பின் ஹேமன், சுக்லன் இருவரும் இத்தலத்திற்கு வந்து மூலவர் அறையின் வெளிப்பிரகாரத்தில், மூலவரின் வடகிழக்கே பல்லியாக வந்து அமர்ந்தனர். குறிப்பிட்ட காலம் நெருங்கியதும் இந்திரன், கஜேந்திரன் யானை வடிவில் இத்தலத்தில் நுழைந்தவுடன் இவர்களின் சாபம் அகன்றது.
இந்த பல்லிகளை தங்கம் மற்றும் வெள்ளியில் இன்றளவும் நாம் வரதராஜப் பெருமாள் சன்னதிக்கு அருகில் தரிசிக்கமுடியும். இதைத்தொட்டு வணங்குபவர்களுக்கு பல்லி விழுவதால் ஏற்படக்கூடிய சகல தோஷங்களும் பாவங்களும் நீங்கி ஐஸ்வரியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.


ஆதிவரதர் தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளின் ஆதி மூர்த்தம்தான் அத்தி வரதர். தற்போது நாம் கருவறையில் தரிசிப்பது வரதராஜப் பெருமாள் என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் அவர் வரதராஜ பெருமாள் அல்ல என்பதுதான் ஐதீகம். அவர், பழைய சீவரம் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட தேவராஜப் பெருமாள் என்பதே உண்மை என பக்தர்கள் நம்புகிறார்கள்.

வரதராஜப்பெருமாள், பெருந்தேவி தாயார் (மூலவர்)

இந்தக் கோயிலின் ஆதி மூர்த்தியான அத்தி வரதர் பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்டவர். அவர், கோவில் திருக்குளத்தில் வாசம் செய்வதுடன், 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.

ஆதிவரதர் நீருக்குள் சென்றது ஏன்?

ஆதியில் சிருஷ்டியை மேற்கொண்ட பிரம்மதேவர், தனது பணி நல்லபடி  நடைபெற காஞ்சிபுரத்தில் அஸ்வமேத யாகம் செய்தார். தன்னை அழைக்காமல் யாகம் செய்த பிரம்மதேவரிடம் கோபம் கொண்ட சரஸ்வதி தேவி, யாகத்துக்கு வரவில்லை. சரஸ்வதி தேவி இல்லாமல் பிரம்மதேவரால் யாகத்தைப் பூர்த்தி செய்ய முடியாது.

எனவே, பிரம்ம தேவர் சரஸ்வதி தேவிக்குப் பதிலாக காயத்ரி, சாவித்திரி ஆகியோரின் துணையுடன் யாகத்தைத் தொடங்கினார். சினம்கொண்ட சரஸ்வதி தேவி, பிரம்மதேவரின் யாகசாலையை அழிக்க வேகவதி ஆறாக மாறி வெள்ளப்பெருக்கெடுத்து வந்தாள்.

பிரம்மரின் யாகத்தைக் காக்க எண்ணிய திருமால், நதிக்கு நடுவில் சயனக் கோலம் கொண்டார். இதனால், சரஸ்வதி தேவி தன் பாதையை மாற்றிக்கொண்டாள். பிரம்மதேவரின் யாகமும் நிறைவு பெற்றது.

தனக்காக வந்து யாகத்தைக் காத்த பெருமாளின் கருணையை எண்ணி நெகிழ்ந்த பிரம்மதேவர், பெருமாளைப் வணங்கினார். தேவர்களும் பெருமாளை வணங்கி வரங்களைக் கேட்டனர். அவர்கள் விரும்பிய எல்லா வரங்களையும் கொடுத்ததால், பெருமாள், வரதர் என்ற திருப்பெயர் கொண்டார்.

ஒரு சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் தேவர்கள் அனைவருக்கும் சங்கு, சக்கரம், கதை தாங்கிய திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தந்தார்.

அதே நாளில் பிரம்ம தேவர், தனக்கு தரிசனம் தந்த பெருமாளின் திருவடிவத்தை அத்தி மரத்தில் வடித்து வழிபட்டார். இப்படித்தான் அத்தி வரதர் மண்ணுலகில் எழுந்தருளினார்.

பிரம்மதேவரால் உருவான அத்திமர வரதராஜரை தேவலோக யானையான ஐராவதம் தனது முதுகில் சுமந்தது. பின்னர் ஐராவதம் சிறு குன்றாக உருமாறி அத்தி (யானை)கிரி, வேழமலை என்று பெயர்பெற்றது.

பின்னர், ஒருமுறை பிரம்மதேவர் அத்தி வரதரை முன்னிருத்தி ஒரு யாகம் செய்தார்.

யாகத் தீயின் காரணமாக அத்தி வரதர் உஷ்ணமானதை கண்டு பிரம்மதேவர் பதறிப்போனார். வேறெந்த வடிவத்திலும் பெருமாளை உருவாக்க முடியாத சூழலில், பிரம்மா திருமாலை வேண்டினார்.

அவருடைய ஆலோசனையின்படி, அத்திவரதரை, கோயிலிலுள்ள நூற்றுக்கால் மண்டபத்துக்கு வடக்கிலுள்ள திருக்குளத்தின் தென் திசையிலுள்ள நீராழி மண்டபத்துக்குக் கீழுள்ள மற்றொரு மண்டபத்தில் வெள்ளிப் பேழையில் சயனக் கோலத்தில் வைத்தார்.

யாகத்தீயில் உஷ்ணமான பெருமான், கலியுகம் முழுக்க இந்த அமிர்தசரஸ் எனும் ஆனந்த புஷ்கரணி திருக்குளத்தில் குளிர்ந்த நிலையில் இருப்பார் என்றும், இதனால் எந்தக் காலத்திலும் இந்தத் திருக்குளம் வற்றாது என்றும் பிரம்மதேவருக்குச் சொல்லப்பட்டது. அத்தி வரதர் திருக்குளத்துக்கு அடியே சென்றதும், பழைய சீவரம் என்ற ஊரில் இருந்த தேவராஜப் பெருமாள் அத்திகிரிக்கு அருள வந்தார்.

40 ஆண்டுகளுக்குப் பின் எழுந்தருளிய அத்திவரதர்

பிரம்மதேவருக்குப் பெருமாள் கட்டளையிட்டபடி, 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்து நீரை இறைத்துவிட்டு பெருமாள் மேலே கொண்டுவரப்படுவார். சயன மற்றும் நின்ற கோலமாக 48 நாள்கள் பக்தர்களுக்கு வரதர் சேவை சாதிப்பார்.

சயன நிலையில் அத்திவரதர் (ஆதி வரதர்)

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாள்கள் மட்டுமே இவரைத் தரிசிக்க முடியும் என்பதால் அப்போது பக்தர்கள் கூட்டம் அலைமோதும். வாழ்வில் ஒருமுறையேனும் இவரை தரிசிப்பது மோட்சத்தை அளிக்கும் என்பார்கள். இரண்டாவது முறை யாரேனும் தரிசித்தால் வைகுந்த பதவி பெறுவார்கள் என்பதும் ஐதீகம்.

மூன்று முறை தரிசித்த மகா பாக்கியவான்களும் சிலருண்டு. 1937 மற்றும் 1979ம் ஆண்டுகளில் வெளியான அத்திவரதரை, 40 ஆண்டுகளுக்குப் பின், கடந்த ஜூன் 28ம் தேதி அதிகாலை திருக்குளத்திலிருந்து வெளியே எடுக்கும் பணி 12.30க்கு தொடங்கப்பட்டது. அதிகாலை 2.30 மணியளவில் அத்தி வரதர் திருக்குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டார்.

அத்தி வரதருடன் 16 நாக சிலைகள் இருந்தன. வேத மந்திரங்கள் முழங்க அத்தி வரதர் குளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டு, வசந்த மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதிகாலை 3.10 மணியளவில் வசந்த மண்டபத்தில் சயன கோலத்தில் சேவை சாதித்தார். அப்போது நீரில் மூழக்கி இருந்த அத்திவரதரின் திருமேனியில் வளர்ந்து படிந்து இருந்த பாசி எனப்படும் பச்சையம் அனைவருக்கும் பிரசாதமாக தரப்பட்டது.

வரதன் திருமேனியில் இருந்த காரணத்தால் துர்நாற்றம் எதும் இன்றி மிகுந்த வாசனையுடன் இருந்தது என பச்சையம் வாங்கும் வாய்ப்புக் கிடைத்தவர்கள் கூறினார்கள்.

இந்நிலையில், இன்று காலை 6 மணி முதல் வசந்த மண்டபத்தில் இருந்தபடி பக்தர்களுக்கு ஆதி அத்தி வரதர் காட்சியளிக்க தொடங்கினார். 1979ம் ஆண்டு இந்த நிகழ்வின்போது 20 லட்சம் பக்தர்கள் வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த முறை 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வசந்த மண்டபத்தில் இருக்கும் ஆதி அத்தி வரதர் முதல் 24 நாட்கள் சயன (படுத்த) நிலையிலும், அடுத்த 24 நாட்கள் நின்ற நிலையிலும் தன்னை காண வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார். இந்த 48 நாட்களில் முக்கியமான நாட்கள் என்று, எந்த நாட்களும் வரையறுக்கப்படவில்லை. எனவே, பக்தர்கள் விருப்பப்பட்ட நாளில் அவர்களது வசதிக்கேற்ப வந்து தரிசிக்கலாம். ஆதி அத்திவரதரின் அருள் பெற்று செல்லலாம்.Trending Now:
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர் கருத்துக்கள் :

selvan 2019-07-16 17:00:40
super

Gopi m b 2019-07-08 22:55:04
Athi namma manasa suthi vara venduvom nam AthiVaradharai enrum !!!!

Manimegalai 2019-07-03 14:37:23
மிகவும் அருமை.... தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

Renuka 2019-07-02 23:26:35
அருமை Dinesh..மேலும் மேலும் உங்கள் ஆக்கங்களை எதிர்பார்கின்றோம்.

Lavanya 2019-07-02 19:52:20
Nice and informative artical

sathish 2019-07-02 17:01:50
அற்புதமான... ஆழமான தகவல்கள்.......