மும்பையில் கனமழை; இரண்டே நாளில் 54 சென்டிமீட்டர் மழை கொட்டியது

01-07-2019 06:44 PM

மும்பை

மும்பை நகரில் ஞாயிறு, திங்கள் ஆகிய 2 நாட்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த 2 நாட்களில் மட்டும் 54 சென்டிமீட்டர் மழை பெய்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இத்தகைய கனமழை பெய்தது இல்லை என வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் மும்பை நகரில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

ரயில்வே வழித்தடங்களில் வெள்ளம் ஓடிக் கொண்டிருப்பதால் புறநகர் ரயில்வே கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. சியான், மாதுங்கா ஆகிய 2 ரயில் நிலையங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. தண்டவாளங்களில் எல்லாம் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. அதனால்  ரயில்கள் தாமதமாக சென்று கொண்டிருக்கின்றன.

மேற்கு ரயில்வேயில் 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  மத்திய ரயில்வேயில் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கர்ஜாட் மற்றும் லோனோவாலா ஆகிய இரண்டு ரயில்வே நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விட்டது. அதனால் மும்பையில் இருந்து புனே செல்லும் ரயில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அவை வழக்கமாக எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட இரண்டு மூன்று மடங்கு கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு ஊர்ந்து செல்லுகின்றன.

மும்பை நகரின் போக்குவரத்துக்கு உயிர்த் துணையாக விளங்கும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது என்ற காரணத்தினால் அரசு அலுவலகங்களும் தனியார் அலுவலகங்களில் காலியாக கிடக்கின்றன.

மும்பை நகர சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கிற காரணத்தினால் கார் லாரி போன்றவை மிக மெதுவாக ஊர்ந்துதான் செல்ல முடிகிறது.

செம்பூர்,  படாதா, ஹிந்துமாதா, லால்பார்க், சேனாபதி பப்பட் ஆகிய இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விட்டன.

மும்பை நகரில் 12 இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துவிட்டதாக மாநகராட்சி அலுவலகம் தெரிவித்தது. ஆனால் நல்லவேளையாக இந்த 12 இடங்களிலும் யாருக்கும் காயம் எதுவும் இல்லை என மாநகராட்சி நிர்வாகம் கூறுகிறது.

மும்பை நகரில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் சிறுவர்கள் நீந்தி விளையாடுகிறார்கள் பல சிறுவர்கள் புதிதாக நீச்சல் கற்றுக் கொள்கிறார்கள்.

இன்னும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக ஜூலை 2, ஜூலை 4, ஜூலை 5 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பல அடுக்குமாடி வீடுகளில் அடித்தள பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ஆனாலும் சாலை போக்குவரத்து மற்றும் பிற சேவைகளை கண்காணித்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகமும் ரயில்வே நிர்வாகமும் உஷாராக விழிப்புடன் செயல்பட்டு வருகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.Trending Now:
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :