கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 185

24-06-2019 02:42 PM

கோல்கட்டா சாலைகளிலும் வசந்த மாளிகை!

நள்­ளி­ர­வில், கோல்­கட்டா நக­ரின் சாலை­க­ளில் நடந்த சம்­ப­வம் ஒன்று, சில நாட்­க­ளுக்கு முன் சேனல்­க­ளில் பர­ப­ரப்­பாக ஒளி­ப­ரப்­பா­னது, பத்­தி­ரி­கை­க­ளி­லும் முக்­கி­ய­மான செய்­தி­யாக வந்­தது.

உஷோஷி சென்­குப்தா என்ற மாஜி இந்­திய உலக அழ­கிக்கு ஏற்­பட்ட ஒரு கசப்­பான அனு­ப­வம் அது.

‘‘ஜூன் 17 அன்று, இரவு 11.40 க்கு ஜே.டபிள்யூ. மாரி­யட் ஓட்­ட­லில் ஒரு ஊபர் வண்டி பிடித்­தேன். என்­னு­டைய சக ஆண் ஊழி­யர் என்­னு­டன் பய­ணித்­தார். எக்­ஸைட் கட­வைத் தாண்டி இடப் பக்­கம் திரும்­பிய வண்டி,  எல்­ஜின் சாலையை நோக்கி சென்­று­கொண்­டி­ருந்­தது.

‘‘அப்­போது ஹெல்­மெட் அணி­யா­மல் ஒரு மோட்­டார் சைக்­கி­ளில்  சில வாலி­பர்­கள் வந்­தார்­கள். அவர்­க­ளின் பைக், எங்­கள் ஊபர் வண்­டி­யின் மீது இடித்­தது. எங்­கள் வண்டி நின்­றது. தங்­கள் பைக்கை நிறுத்­திய வாலி­பர்­கள், ஊபர் வண்­டி­யின் டிரை­வ­ரைப் பார்த்­துக் கூச்­ச­லி­டத் தொடங்­கி­னார்­கள்’’.

‘‘கண­நே­ரத்­தில் பதி­னைந்து வாலி­பர்­கள் வண்­டியை சூழ்ந்­து­கொண்­டார்­கள். தட­த­ட­வென்று காரின் கத­வு­க­ளைத் தட்ட ஆரம்­பித்­த­வர்­கள்,  டிரை­வரை வெளியே இழுத்து அடிக்க ஆரம்­பித்து விட்­டார்­கள்’’.

இந்த நிலை­யில், வாடகை வண்­டி­யின் டிரை­வர்­தானே, நமக்கு என்ன என்று உஷோஷி காருக்­குள்ளே அமர்ந்­து­கொண்­டி­ருக்­க­வில்லை. டிரை­வர் மீது கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட வன்­மு­றைக்கு எதி­ரா­கக் கூச்­ச­லிட்­டுக் கொண்டே வெளியே வந்­த­வர், தன்­னு­டைய செல்­போ­னைக் கொண்டு நடப்­ப­தைப் படம் பிடிக்க ஆரம்­பித்­தார்.

அப்­ப­டி­யும் தர்ம அடி பட­லம் தொடர்ந்­த­தால், எதி­ரில் உள்ள காவல் நிலை­யத்­திற்கு ஓடிச் சென்று, காவ­லர்­களை வரு­மாறு கதறி அழு­தார் உஷோஷி.

‘‘நீங்­கள்  செல்­ல­வேண்­டி­யது வேறொரு காவல் நிலை­யும்’’ என்று கூறி­னா­லும், காவ­லர்­கள் சம்­பவ இடத்­திற்கு வந்­த­தால், மேலும் தீவி­ர­மான தாக்­கு­த­லுக்கு ஆளா­கா­மல் ஊபர் வண்டி ஓட்­டு­னர்  உயிர் தப்­பி­னார்.

அதே வண்­டி­யில் ஏறி, உடன் வந்த நண்­பரை அவர் இல்­லத்­தில் விட்­டார் உஷோஷி. திரும்­பிப் பார்த்­தால், அத்து மீறிய வாலி­பர்­கள் மூன்று மோட்­டார் பைக்­கு­க­ளில் வந்து, உஷோ­ஷி­யைப் பிடித்து இழுத்து அவ­ரு­டைய செல்­போனை அடித்து நொறுக்­கப் பார்த்­தார்­கள்.  

அடுத்த நாள் இந்த கச­மு­சா­வெல்­லாம் பெரிய செய்­தி­யாகி, அல்­லோல கல்­லோ­லப்­பட்­டது. இத்­த­கைய சூழ்­நி­லை­க­ளில் தான் காட்­டும் வழக்­க­மான மெத்­த­னத்தை விட்டு, மேற்கு வங்க முதல்­வர் மமதா பானர்ஜி நட­வ­டிக்கை எடுக்க நேர்ந்­தது. ஷேக் ராகித், பர்­தீன் கான், ஷாபிர் அலி, கனி, இம்­ரான் அலி, வாசிம், அசிப் கான் ஆகிய ஏழு வாலி­பர்­கள் கைது செய்­யப்­பட்­டார்­கள்.

இந்த நிகழ்ச்­சிக்­குப் பிறகு பேட்டி தந்த உஷோஷி, ‘தன்­னு­டைய பணி, கலை உல­கம் மற்­றும் மீடியா தொடர்­பு­டை­ய­தாக இருப்­ப­தால், சில சம­யம் நள்­ளி­ரவு வரை­யும் பணி­யில் ஈடு­பட நேரி­டு­கி­றது. ஆனால் இந்த நிகழ்ச்­சிக்­குப் பிறகு தன்­னு­டைய பாது­காப்பு குறித்து பயந்த பெற்­றோர், ‘நீ வெளியே போகாதே’ என்று கூறு­கி­றார்­கள் என்­றார்!

‘வசந்த மாளிகை’ திரைப்­ப­டம் டிஜி­டல் முறை­யில் புதுப்­பிக்­கப்­பட்டு மீண்­டும் வெளி­யி­டப்­பட இருக்­கும் இன்­றைய நிலை­யில், உஷோஷி பற்­றிய செய்தி எனக்கு ‘வசந்த மாளி­கை’­­யின் நாயகி லதா (வாணிஸ்ரீ) சந்­திக்­கும் சூழ்­நி­லை­களை நினை­வு­ப­டுத்­தி­யது!

ஒரு ஏழைக்­கு­டும்­பத்­தில் வேலைக்­குப் போகும் ஒரே  நப­ரான லதா, விமா­னப்­ப­ணிப் பெண்­ணாக (ஏர் ஹோஸ்­டஸ்) வேலை செய்­கி­றார்.

 விமா­னப்­ப­ய­ணத்­தின் போது ஒரு நாள், ஒரு குடி­கார வாலி­பர் ஆனந்த் (சிவாஜி), பய­ணி­கள் மத்­தி­யில் பாடிக்­கொண்டு கூத்­த­டிக்­கி­றார். லதா­வுக்கு ஆனந்­தின் அறி­மு­கம் இப்­படி ஏற்­ப­டு­கி­றது.

மது, மாது என்று வாழ்க்­கையை அமைத்­துக்­கொண்ட ஆனந்­தைப் பற்றி அவ­னு­டைய வேலைக்­கா­ரர் (வி.எஸ்.ராக­வன்) தன்­னு­டைய அபிப்­ரா­யத்தை லதா­வுக்கு  பின்­னர் தெரி­விக்­கி­றார் -- ‘‘ஆனந்த் கெட்­டுப்­போ­ன­வன்­தான், ஆனால் கெட்­ட­வன் இல்லை’’! ஆகா, எத்­தனை சவு­க­ரி­ய­மான வேறு­பாடு!

 இத்­த­கைய ஆனந்­திற்­கும் லதா­வுக்­கும்

உரு­வா­கும் உற­வை­யும் பிரி­வை­யும் ‘வசந்த மாளிகை’ சித்­த­ரிக்­கி­றது. பணத்­தைத்  தண்­ணி­யா­க­வும் கன்­னி­யா­க­வும் செல­வ­ழிக்­கி­றான் ஆனந்த்.  அவ­னு­டைய இல்­லத்­தில், தன்­னு­டைய குடும்­பத்­தா­ருக்­குத் தேவை­யான பணத்தை

சம்­பா­திக்­கத்­தான் லதா பணி­யாற்­று­கி­றாள்.  ஆனால், அவ­ளு­டைய பணி­யில் எந்த அள­வுக்கு அக்­கறை தெரி­கி­றதோ, அதே அள­வுக்கு  அவ­ளு­டைய சுய­க­வு­ர­வ­மும் தெரி­கி­றது.  அது­தான், ஆனந்­திற்கு லதா மீதான காதலை வளர்க்­கி­றது. அது­வே­தான், லதா­விற்­காக ஆனந்த் எழுப்­பும் ‘வசந்த மாளி­கை’­­யைக் கசந்த மாளி­கை­யாக ஆக்­கி­வி­டக்­கூ­டிய ஆபத்­துக்­களை ஏற்­ப­டுத்­து­கி­றது!  

தேவ­தாஸ் கதை­யின் இன்­னொரு அவ­தா­ரம்­தான் ‘வசந்த மாளிகை’. ஆனால் சோகத்­தின் விளிம்­பில் ஊச­லா­டி­விட்டு, மங்­க­ல­மான இணை­வில் படம் முடி­கி­றது. ‘எழு­துங்­கள் என் கல்­ல­றை­யில் அவள் இரக்­கம் இல்­லா­த­வள் என்று’ என்று கத­றி­விட்டு, உடம்பு தேறி ஆஸ்­பத்­திரி அறை­யில்  ஆனந்­த­மாக லதாவை ஆனந்த் அணைத்­துக் கொள்­கி­றான்! ‘வசந்த மாளிகை’ உசந்த மாளிகை ஆகி­றது!

ஊர் மேயும் ஆட­வன், உண்­மை­யி­லேயே உயர்ந்த பண்பு கொண்ட பெண்ணை சந்­தித்­த­தும், வாலை சுருட்­டிக்­கொண்டு அவ­ளுக்கு வாக்­கப்­ப­டு­கி­றான் என்­கிற ‘இரு­வர் உள்­ளம்’ கதை­யும் ‘வசந்த மாளி­கை’­­யில் உண்டு.

கதா­நா­யகி லதா­வின் பாத்­தி­ரத்­தைப் படைத்­த­வர், ஒரு பெண் எழுத்­தா­ளர். அவர் ஒரு தெலுங்கு நாவ­லா­சி­ரியை. பெயர், ஆரெ­க­பூடி கொடூரி கவு­சல்யா தேவி. ஏரா­ள­மான நவீ­னங்­கள் எழு­திய இந்த பிர­பல தெலுங்கு நாவ­லா­சி­ரியை படைத்த ‘பிரேம நகர்’ என்ற நாவல்­தான், ‘வசந்த மாளி­கை’க்கு அஸ்­தி­வா­ரம். முத­லில்  நாவல் அதே பெய­ரி­லான தெலுங்­குப் பட­மா­னது. பட­மும் பிரம்­மாண்­ட­மான வெற்­றி­யாக அமைந்­தது. அதே தயா­ரிப்­பா­ளர் (டி.ராமா­நா­யடு), அதே இயக்­கு­ந­ரைக் கொண்டு (கே.எஸ்.பிர­காஷ்­ராவ்), தமி­ழி­லும் அதே அள­வி­லான வெற்­றி­யைப் பெற்­றார். தெலுங்­கில் ஏ.நாகேஸ்­வ­ர­ராவ் நடித்த பிர­தான வேடத்தை சிவாஜி ஏற்­றார்.  தெலுங்கு பதிப்­பின் நாய­கி­யான வாணிஸ்ரீ தமி­ழி­லும் சக்­கை­போடு போட்­டார். பட்டை தீட்­டிய வைரம் போல் ஜொலித்­தார். நடி­கர் தில­கத்­து­டன் நடித்து,   நல்ல பெயர் பெறும் அள­வுக்கு அவர் ஏற்ற கதா­பாத்­தி­ர­மும் அதற்­கான அவ­ரு­டைய நடிப்­பும் இருந்­தன.

‘வசந்த மாளி­கை’­­யின் ஒரு கட்­டத்­தில் லதா மீது ‘திருட்­டு’ப்­பட்­டம் கட்ட அவ­ளு­டைய பெட்­டி­யில் ஒரு வைர நெக்­லஸ் வைக்­கப்­ப­டு­கி­றது. பல­ரும் அவளை சந்­தே­கப்­ப­டு­கி­றார்­கள். நாய­கன் ஆனந்­தும் அவள் திரு­டி­யி­ருப்­பாள் என்று நம்­பி­வி­டு­கி­றான். இதை அவ­ளால் பொறுக்­க­மு­டி­ய­வில்லை. அவனை விட்டு வில­கி­வி­டு­கி­றாள். தற்­செ­ய­லாக உண்­மையை அறி­யும் ஆனந்த், லதா­வி­டம் மன்­னிப்­புக் கேட்க வரு­கி­றான்.

அப்­போது அவள் கூறு­கி­றாள், ‘‘சின்­ன­தொரை, உங்க அநி­யா­யங்­க­ளைக் கூட என்­னால் தாங்­கிக்க முடிஞ்­சது...ஆனால் நீங்க செய்ற நியா­யத்தை சகிக்க முடி­ய­வில்லை’’. இதை­விட அவ­ளு­டைய கசப்­பு­ணர்ச்­சி­யைத் தெரி­விக்க வேறு அற்­பு­த­மான வார்த்­தை­கள் இருக்க முடி­யாது.

‘வசந்த மாளிகை’ எடுக்­கும் போது, தெலுங்கு மூலத்­தி­லி­ருந்து சில மாற்­றங்­கள் செய்­தார்­கள். தெலுங்கு படத்­தில் காண்­பிக்­கப்­ப­டும் விமா­னப் பய­ணக் காட்­சி­யில், விமான ஓட்­டம் எந்­த­வித பிரச்­னைக்­கும் ஆளா­வ­தில்லை. ‘வசந்த மாளி­கை’­­யில் விமா­னம் காற்­றுச்­ச­ல­னத்­தால் அலைக்­க­ழிக்­கப்­ப­டு­வ­தா­கக் காண்­பிக்­கப்­ப­டு­கி­றது. பிறகு, பய­ணம் சக­ஜ­மாகி, விமா­னம் சேத­மின்றி இறங்­கு­கி­றது. வீடு திரும்­பி­ய­தும் இதை  கதா­நா­யகி லதா தன் தாயி­டம் (பண்­டரி பாய்) கூறு­கி­றாள். பயந்­து­போன தாய், இந்த விமா­னப்­ப­ணிப்­பெண் வேலையை விட்­டு­விட்டு, வேறு வேலை தேடிக்­கொள் என்­கி­றாள் (உஷோ­ஷி­யின் பெற்­றோர், நீ வெளியே போகாதே என்று கூறி­ய­தைப் போல்).  

‘பிரேம நக’­­ரில், கதா­நா­யகி நேர­டி­யாக நாய­க­னி­டம் வேலை தேடி வரு­வ­தாக உள்­ளது. ஆனால் ‘வசந்த மாளி­கை’­­யில் வேறு காட்­சி­கள் நுழைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஒரு பிர­பல ஓட்­ட­லில் வர­வேற்­பா­ளர் (ரிசப்­ஷ­னிஸ்ட்) வேலைக்­கான நேர்­கா­ண­லுக்­குக் கதா­நா­யகி செல்­கி­றாள். ஓட்­ட­லின் மேனே­ஜர் (வில்­லன் வேடங்­க­ளில் பிர­ப­ல­மான எஸ்.வி.ராம­தாஸ்), அவ­ளைத் தன்­னு­டைய மடி­யில் அம­ரு­மாறு கூறு­கி­றார்! கதா­நா­யகி மறுக்­கவே, அவ­ளைப் பல­வந்­தம் செய்­யப்­பார்க்­கி­றார். அன்­றைய தினம் அந்த ஓட்­ட­லில் பிறந்த நாள் விருந்­த­ளித்­துக் கொண்­டி­ருக்­கும் நாய­கன் ஆனந்த், மேனே­ஜரை நையப்­பு­டைத்து நாய­கி­யின் மானத்­தைக் காப்­பாற்­று­கி­றான்.  அடுத்த நாள், ஆனந்த் தனக்­குப் போர்த்தி விட்ட ‘கோட்’­­டை­யும் அதில் இருக்­கும் பணத்­தை­யும் லதா திருப்­பிக்­கொ­டுத்­து­விட்டு நன்றி கூற வரும் போது, அவ­னி­டம் வேலைக்கு அமர்­கி­றாள். இந்த வகை­யில் தமிழ் படம் தெலுங்கு படத்­தி­லி­ருந்து வேறு­ப­டு­கி­றது. தெலுங்கு படத்­தின் கதா­நா­யகி வாணிஸ்ரீ தமி­ழி­லும் நடித்­தது போலவே, தெலுங்­குப் படத்­திற்கு வெற்­றிப்­பா­டல்­கள் தந்த கே.வி.மகா­தே­வன்­தான் ‘வசந்த மாளி­கை’க்­கும் இசை­ய­மைத்­தார்.

‘யாருக்­காக’ (எவரி கோசம்), ‘இரண்டு மனம் வேண்­டும்’ ஆகிய தலை­சி­றந்த வெற்­றிப்­பா­டல்­க­ளின் மெட்­டுக்­கள் அப்­ப­டியே வைத்­துக்­கொள்­ளப்­பட்­டன. ஆனால் ‘இரண்டு மனம் வேண்­டும்’ என்ற பாடலை தெலுங்கு பாடல் மெட்­டிற்கு எழு­தும் போது, கண்­ண­தா­சன் புதிய கண்­ணோட்­டத்­தில் பாடல் வரி­களை எழு­தி­னார்.

மனசு கதி இந்தே (மன­தின் நிலை இது­தான்)

மனிசு பிர­து­கிந்தே (மனி­தன் நிலை இது­தான்)

மன­சுன்ன மனி­ஷிகி (மன­முள்ள மனி­தனுக்கு)

சுகமு லேதந்தே (சுகம் இல்லை என்­ப­து­தான்) என்­ப­து­தான் தெலுங்­குப் பாட­லின் பல்­லவி. அதே மெட்­டிற்­குக் கண்­ண­தா­சன் எழு­திய பல்­லவி:

    ‘‘இரண்டு மனம் வேண்­டும்

    இறை­வ­னி­டம் கேட்­டேன்

    நினைத்து வாட ஒன்று

    மறந்து வாழ ஒன்று’’ .

காத­லுக்­கும் சாத­லுக்­கும் இடை­யே­யான உணர்ச்­சி­க­ளின் மோத­லுக்கு ஆளா­கும் நாய­க­னின் மன­நி­லை­யைக் கண்­ண­தா­சன் முன்­வைத்­தார். அதை டி.எம்.எஸ். பாடும் போது, சோகம் சுக­மான சோக­மா­னது!

நடிப்­பின் சிக­ரத்­திற்கு போகக்­கூ­டிய சிவா­ஜிக்­காக டி.எம்.எஸ். ‘யாருக்­காக’ பாட­லைப் பாடிய போது, சோகத்­தின் உச்­சிக்கு செல்­லும் இந்த காட்­சி­யில் சிவா­ஜி­யின் நடிப்பு எப்­படி இருக்­கும் என்று கற்­பனை செய்து பார்த்­தார். பாட­லுக்கு எரி­ம­லை­யின் குமு­ற­லைப் போன்ற வெளிப்­பாட்டை டி.எம்.எஸ். கொடுத்­தார். இதை­யெல்­லாம் டி.எம்.எஸ். செய்­து­கொண்­டி­ருந்த போது, அவரை சாதா­ரண  பின்­ன­ணிப் பாட­க­ராக நினைத்­த­வர்­கள் ஒலிப்­ப­தி­வுக் கூடத்­தி­லேயே அவ­ருக்கு ஒத்­து­ழைப்பு தராத நிலை­யெல்­லாம் இருந்­தது. அதை­யெல்­லாம் மீறித்­தான் டி.எம்.எஸ். சுவடு பதித்­தார்.

‘கலை­ம­கள் கைப்­பொ­ருளே’, ‘மயக்­க­மென்ன இந்த மவு­னம் என்ன’ ஆகிய பாடல் காட்­சி­கள் தெலுங்­கி­லும் இருந்­தா­லும், இந்த பாடல்­கள் தமி­ழுக்­காக கே.வி.மகா­தே­வன் அமைத்த பிரத்­யேக மெட்­டுக்­கள்.  இவற்­றுக்­குக் கிடைத்த வர­வேற்பு மகத்­தா­னது.

இத்­த­கைய பாடல்­கள், ‘வசந்த மாளி­கை’­­யின் நினை­வு­களை மக்­கள் மன­தில் பசு­மை­யாக வைத்­தி­ருக்­கின்­றன. ‘வசந்த மாளிகை’ நம் மன­திற்கு இசைந்த மாளி­கை­யாக விளங்­கு­வ­தற்கு  அதன் இசை முக்­கிய கார­ண­மாக அமைந்­தி­ருக்­கி­றது.

(தொட­ரும்)Trending Now: