அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஜூன் 25ம் தேதி இந்தியா வருகிறார்

20-06-2019 08:55 PM

புதுடில்லி,

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ 3 நாள் பயணமாக ஜூன் 25ம் தேதி இந்தியா வருகிறார். அவரது இந்திய பயணம் ஜூன் 25ம் தேதி முதல் ஜூன் 27ம் தேதி வரை நீடிக்கும் என மத்திய வெளியுறவுத்துறை இன்று அறிவித்தது.

மக்களவை தேர்தலுக்கு பின் இந்தியாவுக்கு வருகை தரும் முதல் அமெரிக்க பிரதிநிதி மைக் பாம்பியோ. தேர்தலுக்கு பின் இந்தியா – அமெரிக்கா இடையே ஏற்படும் முதல் உயர்நிலை தொடர்பு இது.

மைக் பாம்பியோவின் வருகை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் ‘‘இந்தியாவுக்கு வருகை தரும் மைக் பாம்பியோ மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பல முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்’’

‘‘அவரது வருகை இந்தியா – அமெரிக்கா இடையேயான கூட்டணியை வலுமைப்படுத்துவதற்கு முக்கிய வாய்ப்பாக அமையும். அதனால் அவரது வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்’’ என்று ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மைக் பாம்பியோ-பிரதமர் நரேந்திர மோடி பேச்சு குறித்து ரவீஷ் குமார் எதுவும் கூறவில்லை.

இந்தியாவின் இரும்பு, அலுமினியம் மீதான வரியை அமெரிக்கா கடந்த ஆண்டு உயர்த்தியது. இது தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

அதை தொடர்ந்து கடந்த வாரம் அமெரிக்காவுக்கு பதிலடியாக இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் பாதாம், பயிறுவகைகள் உள்ளிட்ட 28 பொருட்கள் மீதான வரியை இந்தியா 75 சதவீதம் உயர்த்தியது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.

இருநாடுகள் இடையே இவ்வாறு வர்த்தக மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் மைக் பாம்பியோவின் வருகை அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

H-1B விசா பிரச்சினை

அமெரிக்க கம்பெனிகளில், அமெரிக்காவில் பணியாற்ற சிறப்புத் தகுதி உடைய வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசா H-1B விசா என அழைக்கப்படுகிறது.

இந்தியர்களுக்கு வழங்கப்படும் H-1B விசாக்களின் எண்ணிக்கைக்கு உயர்ந்த பட்ச அளவு நிர்ணயிக்கப்படும் என்று அமெரிக்க அரசு முடிவு செய்திருப்பதாக ராய்ட்டர் செய்தி வெளியிட்டது.

அமெரிக்க அரசு முறைப்படி எந்த எண்ணிக்கையையும் இந்தியாவிடம் தெரிவிக்கவில்லை என ரவிஷ் குமார் கூறினார்.

ஆனால் இந்திய அரசின் இரண்டு அதிகாரிகள் அமெரிக்க அரசு உயர்ந்த பட்ச எண்ணிக்கை பற்றிக் கூறி இருப்பதாகத் தெரிவித்தனர்,

அமெரிக்கா வழங்கும் மொத்த H-1B விசாக்களில் 10 முதல் 15 சதவீதம் மட்டுமே இந்தியாவுக்கு கிடைக்கும் எனக் கூறி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்,

பாம்பியோவிடம்  H-1B விசா பற்றி இந்தியா பேசுமா எனத் தெரியவில்லை.Trending Now: