ரயில் மூலம் குடிநீர் அனுப்பவா? கேரளா யோசனைக்கு 'இப்பொழுது வேண்டாம்' என தமிழகம் பதில்

20-06-2019 08:06 PM

திருவனந்தபுரம்

தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடுமையான குடிநீர் பஞ்சத்தில் அவதிப்படுவதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீரை ரயில் மூலம் அனுப்ப தயார் என தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்துக்கு இன்று வியாழக்கிழமை கேரள அரசு செய்தி அனுப்பியது,

அந்த செய்தி கிடைத்தது தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து, “இப்பொழுது கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் அனுப்ப வேண்டியது இல்லை” என பதில் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து இந்தச் செய்தி கேரள அரசு தலைமைச் செயலகத்துக்கு கிடைத்து இருப்பதாக கேரள அரசு செய்திக்குறிப்பு ஒன்றில் அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்துக்கும் இதுவரை கிடைத்த தென்மேற்கு பருவமழை மிகக்குறைவாக உள்ளது. ஆனாலும் தமிழகத்தின் குடிநீர் பற்றாக்குறையை போக்க கேரள அரசு முன்வந்தது. ஆனால் தமிழக அரசு என்ன காரணத்தினாலோ ரயில் மூலம் அனுப்பப்படும் குடிநீரை இப்பொழுது வேண்டாம் என கேரள மாநிலத்துக்கு மீண்டும் தகவல் அனுப்பி உள்ளது.

முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை

தமிழ்நாட்டின் குடிநீர் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக நாளை அரசு தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி கூட்டி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசு தமிழகத்துக்கு குடிநீர் வழங்க முன்வந்த செய்தி குறித்து அமைச்சரவைக்கு தெரிவிப்பதற்காக அமைச்சரவைக் கூட்டத்தை முதலமைச்சர் கூட்டி புதிய முடிவு எடுக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.