தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை 4 எம்.பிக்கள் பாஜகவில் சேர்ந்தனர்

20-06-2019 07:57 PM

புதுடில்லி,

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மொத்தம் ஆறு மாநிலங்களவை எம்.பிக்களில் 4 பேர் இன்று பாஜகவில் சேர்ந்தனர்.

தெலுங்கு தேசம் கட்சி மாநிலங்களவை உறுப்பினர்களான ஒய்.எஸ். சவுத்ரி, சி.எம்.ரமேஷ், காரிகாபதி மோகன் ராவ் மற்றும் டி.ஜி வெங்கடேஷ் ஆகிய 4 பேரும் இன்று மாநிலங்களவைத் தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவை சந்தித்தனர்.

நால்வரும் பாஜவில் சேர முடிவு செய்துள்ளதால் தங்களை பாஜக எம்.பிக்களாக அறிவிக்க வலியுறுத்தும் தீர்மானக் கடிதத்தை அவரிடம் சமர்ப்பித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த தலைமை அவரது வளர்ச்சிக்கான கொள்கைகள், தேச நலன் மீதான அக்கறை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு நாங்கள் பாஜகவில் இணைய முடிவெடுத்துள்ளோம் என்று எம்.பிக்கள் தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் கட்சி மாறினால் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பாஜக செயல்தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பாஜக மாநிலங்களவை தலைவர் திவார் சந்த் கெஹ்லாட் இருவரும் வெங்கையா நாயுடுவை சந்தித்தனர்.

தெலுங்கு தேசம் எம்.பிக்களை பாஜக உறுப்பினர்களுடன் இணைப்பதில் கட்சிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கூறி அதற்கான கடிதத்தை பாஜக தலைவர் அமித் ஷா சார்பில் வெங்கையா நாயுடுவிடம் வழங்கினர்.

அதற்கு பின் தெலுங்கு தேசம் எம்.பிக்கள் 4 பேரில் 3 எம்.பிக்கள் டில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பாஜக செயல்தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் சேர்ந்தனர்.

மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. இந்த சூழ்நிலையில் 4 தெலுங்கு தேசம் எம்.பிக்கள் பாஜகவில் சேர்ந்தது அக்கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

அதேசமயம் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெறும் 3 இடங்களையும் சட்டமன்ற தேர்தலில் வெறும் 23 இடங்களையும்  கைப்பற்றி படுதோல்வியை சந்துத்துள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கு எம்.பிக்களின் கட்சி தாவல் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.Trending Now: