வாக்குறுதிகள் ஏராளம் - விநியோகம் பூஜ்யம்: குடியரசுத் தலைவர் உரை குறித்து காங்கிரஸ் வர்ணனை

20-06-2019 07:20 PM

புதுடெல்லி

நாடாளுமன்றத்தில் ஏராளமான வாக்குறுதிகளை வழங்கி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துவதும் ஆனால் அவற்றில் எதையுமே நிறைவேற்றாமல் விட்டுவிடுவதும் பாஜக அரசின் வழக்கமான நடைமுறை ஆகும். அந்த வழியில் குடியரசுத் தலைவர் உரை ஏராளமான எதிர்பார்ப்புக்களை உருவாக்கி உள்ளது என காங்கிரஸ் தலைமை பேச்சாளர் ரந்தீப் சுர்ஜேவாலா என்று குறை கூறினார்

ரந்தீப் சுர்ஜேவாலா என்று கூறிய கருத்துக்கள்:

2019 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் இதுவரை 74 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 1 வார காலத்தில் மட்டும் இந்திய ராணுவ வீரர்கள் 10 பேர் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இந்தியாவின் பாதுகாப்பு கடும் அபாயத்தில் சிக்கி உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் புலனாய்வு அமைப்புக்கள் பயங்கரவாதிகளின் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்திட வகையின்றி தவிக்கும் நிலை உள்ளது.

புறநிலை ராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்திய இராணுவத்துடன் இணைந்து பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடிய போதிலும் அவர்கள் மரணத்துக்குப் பிறகு அவர்களுக்கு சாஹித் என்ற தியாகி பட்டம் வழங்கப்படுவதில்லை. இது புற நிலை ராணுவத்தினரின் கவுரவத்துக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி ஆகும்.

தண்ணீர்ப் பஞ்சம்

இந்தியா முழுக்க கடுமையான தண்ணீர் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கிறது வரும் 2030ஆம் ஆண்டில் 40 சதவீத இந்தியர்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு இல்லை என நிதி ஆயோக் கருத்து தெரிவித்திருக்கிறது.

இந்தியாவின் முக்கியமான 21 நகரங்களில் நிலத்தடி நீர் என்பதே இல்லாமல் போய்விடும் என்றும் நிதி ஆயோக் கூறியுள்ளது. விவசாயத்தை நம்பியுள்ள நமது இந்திய மாநிலங்கள் இத்தகைய கடும் தண்ணீர் பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்படும். ஆனால் மத்திய அரசு விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவதாக இப்பொழுதும் வாக்குறுதி வழங்குகிறது.

விவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்த்த வேண்டுமானால் வேளாண் துறையின் வளர்ச்சி 10.4% ஆக உயர்த்தப்பட வேண்டும். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் விவசாய வளர்ச்சி என்பது வெறும் 2.9% சதவீதமாகவே உள்ளது. கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த அளவில்தான் இந்திய விவசாயத்துறையின் வளர்ச்சி உள்ளது. இந்த நிலையில் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்துவதாகவும் வாக்குறுதி தந்துள்ளது மத்திய அரசு.

புதிய கல்விக் கொள்கை நாடாளுமன்றத்தில் 5 ஆண்டுகளாக நிலுவையில் போடப்பட்டிருந்தது. இப்பொழுது மத்திய அரசின் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் 4.3 சதவீதம் மட்டுமே கல்விக்கு ஒதுக்கப்படுகிறது. இதுதான் கடந்த 5 ஆண்டுகால கணக்காகும்.

இப்பொழுது, 2 கோடி ஆசிரியர்களைப் புதிதாக நியமிப்பதாக மத்திய அரசு வாக்குறுதி வழங்கி இருக்கிறது. ஆனால் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்ற நிலையையும் மத்திய அரசு அதே மூச்சில் தெரிவித்திருக்கிறது.

கங்கையைத் தூய்மை படுத்துவதற்கு புதிய அமைச்சரவையை மத்திய அரசு துவக்கியது. கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்காகத் துவக்கப்பட்ட திட்டங்களில் 70% இன்னும் முடியவில்லை. கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 80% செலவிடப்படாமல் உறங்கிக் கிடக்கிறது.

ஆனால் கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை மற்ற அமைச்சகத்துடன் இணைக்கப்பட்டுவிட்டது..

இந்த நிலையில் புதிய அமைச்சர் நாடு முழுக்க குடி தண்ணீரை கொண்டு வந்துகொடுப்பதற்காக திட்டங்களை வகுத்து வருகிறார்.

இவ்வாறு எதையும் செய்யாமல் ஏராளமான வாக்குறுதிகளையும் திட்டங்களையும் தாராளமாக வழங்கும் நடைமுறையை இந்த முறையும் பாஜக அரசு தொடர்ந்து பின்பற்றத் திட்டமிட்டு இருப்பதாகவே தோன்றுகிறது.

இவ்வாறு காங்கிரசின் தலைமை பேச்சாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.