ஏ.என் – 32 விமான விபத்தில் உயிரிழந்த 13 பேர் உடல்கள் மீட்பு

20-06-2019 07:07 PM

ஷில்லாங்,

விபத்துக்குள்ளான ஏ.என் – 32 விமானத்தில் பயணித்த 6 பேரின் உடல்களும் மீதி 7 பேரின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 3ம் தேதி அசாமின் ஜோஹ்ஹாத் பகுதியில் இருந்து அருணாச்சலபிரதேசத்தின் மெச்சுக்கா பகுதியை நோக்கி புறப்பட்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என் – 32 விமானம் சில மணி நேரங்களில் மாயமானது. அதில் பயணித்த 13 பேரின் நிலை குறித்து கவலை எழுந்தது.

அதன் பின் 8 நாட்கள் நடந்த தீவிர தேடுதல் பணியின் முடிவில் அருணாச்சல பிரதேசத்தின் லிபோ மாவட்டம் அருகே 12,000 அடி உயர்த்தில் உள்ள காட்டுப்பகுதியில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் பயணித்த 13 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது.

அதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆபத்தான மலைப்பகுதி என்பதால் உடல்களை மீட்பது ராணுவத்தினருக்கு கடினமான பணியாக இருந்தது.

உயிரிழந்த 13 பேரில் 6 பேரின் உடல்களும் மீதி 7 பேரின் உடல் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விங் கமாண்டர் ரத்னாகர் சிங் இன்று ஷில்லாங்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விமானத்தின் கருப்பு பெட்டி சேதமடைந்துள்ளதால் விபத்துக்கான காரணத்தை கண்டறிவதில் காலதாமதம் ஏற்படும் என்று கடந்த ஜூன் 17ம் தேதி இந்திய விமானப்படை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.