போலி விலைப்பட்டியல் மூலம் ஜிஎஸ்டி பணத்தை சட்ட விரோதமாக திரும்பப் பெற்ற ஏற்றுமதியாளர்கள் : மத்திய அரசு தகவல்

20-06-2019 06:34 PM

புதுடில்லி,

போலி விலைப்பட்டியல் மூலம் சட்டவிரோதமாக ஜிஎஸ்டி பணத்தை திரும்பி பெற்ற 5,106 ஏற்றுமதியாளர்களை அடையாளம் கண்டுள்ளதாக மத்திய அரசு இன்று தெரிவித்தது. எனவே அவர்களின் ஏற்றுமதி விலைப்பட்டியல் நேரடியாக சரிபார்க்கப்பட்ட பின்னரே ஜிஎஸ்டி பணம் திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஏற்றுமதியாளர்கள் இரண்டு வழிகளில் தாங்கள் செலுத்திய ஐஜிஎஸ்டி (IGST) வரிக்கான தொகையை திரும்ப பெறுகிறார்கள். முதல் வழி ஏற்றுமதி செய்யும்போது அதற்கான உத்தரவாத பத்திரம் அல்லது கடிதத்தை வெளியிடுவதன் மூலம் ஐடிசி (ITC) எனப்படும் உள்ளீட்டு வரித் தொகையை (input tax credit) பெறலாம்.

இரண்டாவது வழி ஏற்றுமதி செய்யும் நேரத்தில் ஐஜிஎஸ்டி வரியை ரொக்கமாக வழங்கினாலும் அந்தப் பணத்தை திரும்ப பெறலாம்.

இந்நிலையில் சில ஏற்றுமதியாளர்கள் சட்டவிரோதமாக தவறான ஆவணங்களை காட்டி ஐஜிஎஸ்டி தொகையைத் திரும்ப பெற்று வருவதாக தகவல்கள் வெளியானது. இவ்வாறு தவறான முறையில் வழங்கப்பட்ட ஜிஎஸ்டி வரி தொகையின் மதிப்பு 1000 கோடியை தாண்டும் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு மோசடி செய்பவர்களை அபாயகரமான ஏற்றுமதியாளர்கள் (risky exporters) என மத்திய அரசு அடையாளப்படுத்தியுள்ளது.

அதை தொடர்ந்து மத்திய அரசின் மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (சி.பி.ஐ.சி) தனது சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி பிரிவுகள் சரியான உள்ளீட்டு வரி அளவுக்கு மட்டுமே  திரும்ப வழங்கப்படுகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும் என்று கடந்த ஜூன் 17ம் தேதி உத்தரவிட்டது.

இது தொடர்பாக சி.பி.ஐ.சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் உண்மையான நேர்மையான ஏற்றுமதியாளர்கள் இதனால் கவலை கொள்ள வேண்டாம். அவர்களுக்கான ஜிஎஸ்டி பணம் உரிய நேரத்தில் திருப்பி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 1.42 லட்சம் ஏற்றுமதியாளர்களில் வெறும் 5,106 ஏற்றுமதியாளர்கள் தான் அபாயகரமானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த ஏற்றுமதியாளர்களில் இவர்கள் வெறும் 3.5 சதவீதம் தான்.

இந்த முறைகேடான வர்த்தகர்களின் பொருட்களும் தற்போது ஏற்றுமதிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கான ரீபண்ட் தொகை அவர்களின் உள்ளீட்டு வரிக் கடனை 30 நாட்களுக்குள் சரிபார்த்த பின்பு தான் வழங்கப்படும். அவர்களின் உள்ளீட்டு வரிக் கடன் எந்த தொழில்நுட்பமும் இன்றி கைகளாலேயே சரிபார்க்கப்படும் என்று மறைமுக வரிகளுக்கான மத்திய போர்டு  தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி ஜிஎஸ்டி அதிகாரிகள் ஏற்றுமதியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஐஜிஎஸ்டி தொகை சட்டத்திற்கு உட்பட்டு இருக்கிறதா இல்லையா என்பதை 30 நாட்களுக்குள் மத்திய வரிகளுக்கான தலைமை ஆணையரிடம் தெரிவிக்க வேண்டும் என்று மறைமுக வரிகளுக்கான மத்திய போர்டு உத்தரவிட்டுள்ளது.