டிஸ்மிஸ்ஸான குஜராத் ஐபிஎஸ் அதிகாரிக்கு ஆயுள்தண்டனை

20-06-2019 06:02 PM

ஜாம்நகர்

கடந்த 2015ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி பதவியிலிருந்து நீக்கப்பட்ட சஞ்சீவ் பட் என்ற குஜராத் மாநில அதிகாரிக்கு, கைதியை சித்திரவதை செய்து கொன்றதாக ஆயுள் தண்டனை வழங்கி குஜராத் மாநில ஜாம்நகர் மாவட்ட செஷன்ஸ்  நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உள்ள செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி டி என் வியாஸ் கடந்த புதன்கிழமையன்று இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

இந்த வழக்கு பற்றிய விவரம்

1990ம் ஆண்டு ஜாம்ஜோத்பூர் நகர கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக சஞ்சீவ் பட் பணியாற்றி வந்தார். பாஜக தலைவர் எல் கே அத்வானி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டுமென்று நடத்திய ரத யாத்திரையை தொடர்ந்து ஜாம்ஜோத்பூர் நகரில் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த பந்த் தொடர்பாக 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பெயர் பிரபுதாஸ் வாஸ்நானி விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தைச் சேர்ந்தவர். கைது செய்யப்பட்ட 150 பேரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர். பிரபுதாஸ் வாஸ்நானியும் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் உடல் நலம் இல்லாமல் இருந்த அவர் மருத்துவமனையில் அவரது குடும்பத்தாரால் சேர்க்கப்பட்டார். ஐந்து நாள் கழித்து மருத்துவமனையில் பிரபுதாஸ் வாஸ்நானி உயிரிழந்தார்.

சஞ்சீவ் பட் மற்றும் 6 போலீஸ் அதிகாரிகள் மீது பிரபுதாஸ் மரணம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்தார் வாஸ்நானி சகோதரர். காவல் நிலையத்தில் சஞ்சீவ் பட் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சித்திரவதை செய்ததால்  பிரபுதாஸ் வாஸ்நானி உயிரிழந்தார் என அவரது சகோதரர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு தொடர முதலில் குஜராத் அரசும் அனுமதி தந்தது

இதற்கு இடையில் கோத்ரா கலவரம் குறித்து உச்சநீதிமன்ற ஆணைப்படி நடந்த விசாரணையில் சஞ்சீவ் பட் ஆஜராகி சாட்சியம் அளித்தார். உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்துக்களின் கோபத்தை வடித்துக்கொள்ள அவர்களுக்கு போலீஸ் அதிகாரிகள் ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்று அன்றைய குஜராத் முதல்வர் மோடி கூறியதாக சஞ்சீவ் பட் உச்ச நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

இந்த சாட்சியத்தை அன்றைய முதலமைச்சரான மோடி மறுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்..

முதலமைச்சர் இல்லத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சஞ்சீவ் பட் வரவே இல்லை. ஏனென்றால் அப்பொழுது அவர் கீழ்நிலை அதிகாரியாகத்தான் இருந்தார் என மோடி தெரிவித்தார். புலனாய்வுப் பிரிவு ஐஜி விடுமுறையில் இருந்ததால்தான் அன்று முதல்வர் இல்ல கூட்டத்துக்குப் போனதாக சஞ்சீவ் பட் பின்னர் விளக்கம் அளித்தார்

வேறு புகாரின் பேரில் 2011ஆம் ஆண்டு சஞ்சீவ் பட் ஐபிஎஸ் அதிகாரி பதவியில் இருந்து தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டார். 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் பணியிடத்திலிருந்து அனுமதி பெறாமல் விடுமுறை எடுத்துக் கொண்டதாக குற்றம் சாட்டி சஞ்சீவ் பட்டை பதவியில் இருந்து நீக்கியது மத்திய உள்துறை அமைச்சகம்.

பிரபுதாஸ் வாஸ்நானி மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நடந்து செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு தண்டனை விதித்தது. அதனை எதிர்த்து குஜராத் மாநில அரசு முதலில் மேல்முறையீடு தாக்கல் செய்தது. ஆனால் பின்னர் தான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் அரசு வாபஸ் பெற்றுவிட்டது.

அதன்பேரில் சஞ்சீவ் பட் தனிப்பட்ட முறையில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். குஜராத் மாநில உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே அவரது தனிப்பட்ட மேல்முறையீட்டு மனு பரிசீலனைக்கு ஏற்கப்பட்டது ஆனாலும் மனுவை ஏற்று தண்டனை ரத்து செய்யப்படவில்லை. சஞ்சீவ் பட்டுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்த்து.

1990ம் ஆண்டு நடந்த சம்பவத்திற்காக 29 ஆண்டுகளுக்குப் பிறகு சஞ்சீவ் பட்டிற்கு இப்பொழுது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

அவருடன் பிரவீன் சிங் ஜாலா என்ற காவலருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. .

போதை மருந்து வைத்திருந்ததாக ஒருவரை ஆதாரம் இல்லாமல் கைது செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பேரில் இப்பொழுது சஞ்சீவ் பட் சிறையில் இருக்கிறார்.

சிறையில் உள்ள சஞ்சீவ் பட்டுக்கு கைதியை சித்திரவதை செய்து கொன்றதாக ஆயுள் தண்டனை  இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.