கேரளா மார்க்சிஸ்ட் செயலாளர் மகன் மீதான பாலியல் வழக்கு: விசாரணைக்கு ஆஜராக மும்பை போலீசார் நோட்டீஸ்

20-06-2019 03:24 PM

கன்னூர்,

கேரளாவின் மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மூத்த மகனான பினோய் கொடியேறி பாலகிருஷ்ணன் மீது மும்பை காவல்துறையில் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள மும்பை போலீசார் 72 மணி நேரத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி பினோய் கொடியேறி பாலகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

பிகாரை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் கடந்த வாரம் பினோய் கொடியேறி பாலகிருஷ்ணன் மீது மும்பை ஓஷ்னாரா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் பினோய் கொடியேறி பாலகிருஷ்ணன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்து ஏமாற்றி பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்தி கொண்டதாக அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

தங்கள் இருவருக்கும் 8 வயதில் ஒரு குழந்தை இருப்பதாக தெரிவித்துள்ள அந்த பெண், பினோய் கொடியேறி பாலகிருஷ்ணனுக்கு ஏற்கெனவே திருமணம் ஆன விஷயம் கடந்த ஆண்டுதான் தனக்கு தெரியவந்தது. அதை பற்றி கேட்டபோது தன்னை அவர் மிரட்டியதாக அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து பாலகிருஷ்ணன் மீது மும்பை போலீசார் பாலியல் வன்கொடுமை மற்றும் மோசடிக்கான ஐபிசி 376 மற்றும் 420 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை பினோய் கொடியேறி பாலகிருஷ்ணன் மறுத்துள்ளார்.

‘‘அந்த பெண்ணை எனக்கு முன்பே தெரியும் ஆனால் அவருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அந்த பெண் என்னிடம் 5 கோடி ரூபாய் பணம் கேட்டார். கொடுக்க மறுத்தால் காவல்துறையில் பொய் புகார் அளிப்பதாக மிரட்டினார்’’ என்று பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்ள தயார் என்றும் கூறினார்.

இந்நிலையில் மும்பையில் பதிவான வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த மும்பை காவல்துறை அதிகாரிகளான சப் இன்ஸ்பெக்டர்கள் விநாயக் ஜாதவ் மற்றும் தயானந்த் பவார் ஆகியோர் நேற்று கன்னூர் வந்தனர். இருவரும் நேற்று கன்னூர் காவல்துறை ஆய்வாளர் பிரதீஷ் குமாரை சந்தித்து பேசினர்.

அதை தொடர்ந்து அவர்கள் இருவரும் இன்று 2 உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுடன் கன்னூரில் உள்ள பினோய் கொடியேறி பாலகிருஷ்ணனனின் இல்லத்திற்கு சென்றனர். அங்கு அவர் இல்லாததால் அவரது உறவினர்களிடம் மும்பை காவல்துறையின் நோட்டீஸை அளித்தனர்.

அந்த நோட்டீஸில் ‘‘பீகாரை சேர்ந்த பெண் அளித்த புகார் தொடர்பாக பினோய் கொடியேறி பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த வேண்டும். எனவே 72 மணி நேரத்திற்குள் பினோய் கொடியேறி பாலகிருஷ்ணன் விசாரணைக்கு மும்பை போலீசார் முன் நேரில் ஆஜராக வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோட்டீஸை அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மும்பை சப் இன்ஸ்பெக்டர் விநாயக் ஜாதவ் ‘‘தங்களால் பினோய் கொடியேறி பாலகிருஷ்ணனை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது போன் ஸுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.Trending Now: