குழந்தை விற்பனை வழக்கு: கைதான 11 பேரின் காவல் மேலும் நீட்டிப்பு

20-06-2019 02:31 PM

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் - ராசிபுரத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான 11 பேரின் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற அரசு செவிலியர் அமுதா என்பவர்  பிறந்த பச்சிளம் குழந்தைகளை வாங்கி சட்ட விரோதமாக, விற்பனை செய்ததாக, கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

அதனைத் தொடர்ந்து, ராசிபுரம் போலீசார் மற்றும் சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு, குழந்தை கடத்தில் தொடர்புடைய அமுதா மற்றும் அவரது கணவர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.

அமுதாவின் சகோதரர் நந்தகுமார் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவ்வழக்கில் தொடர்புடைய 11 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 இந்த நிலையில், இவ்வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமுதா, கணவர் ரவிச்சந்திரன் உட்பட 11 பேரின் காவலை ஜூலை 4ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.