ஜமால் கஷோகி கொலையில் சவுதி பட்டத்து இளவரசருக்கு தொடர்பு: ஆதாரம் இருப்பதாக ஐநா நிபுணர் தகவல்

19-06-2019 08:03 PM

ஜெனிவா,

   சவுதி பத்திரிகையாளார் ஜமால் கஷோகி படுகொலையில் சவுதி அரேபியா பட்டத்து இளவரசருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக ஐநா மனித உரிமை நிபுணரும் சிறப்பு பதிவாளருமான ஆக்னெஸ் காலமார்ட் தெரிவித்துள்ளார். ஜமால் கஷோகி கொலை தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் சவுதி அரேபியாவை சேர்ந்த ஜமால் கஷோகி. இவர் கடந்த ஆண்டு தன் திருமணத்திற்காக துருக்கி சென்ற போது அங்குள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக எழுதி வந்ததால் அவர் கொல்லப்பட்டதாகவும் அவரை கொலை செய்ய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜமால் கஷோகி கொலையில் பட்டத்து இளவரசருக்கு தொடர்பு இருப்பதை சவுதி அரேபியா மறுத்துள்ளது. அதேசமயம் தங்கள் நாட்டின் சில ஏஜெண்டுகள் சட்டத்திற்கு புறம்பாக இந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டது.

இந்த விவகாரம் தொடர்பாக துருக்கி அரசு விசாரணை நடத்தி வருகிறது. அதேசமயம் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக சவுதி அரேபியாவில் 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மனித உரிமை ஆர்வலரும் அதிகார படுகொலைகள் தொடர்பான ஐநாவின் சிறப்பு பதிவாளருமான ஆக்னெஸ் காலமார்ட், பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலை தொடர்பாக தன் சுய முயற்சியில் விசாரணை மேற்கொண்டார்.

ஆக்னெஸ் காலமார்ட், தன் விசாரணைக்காக இந்த ஆண்டு துவக்கத்தில் தடவியல் மற்றும் சட்ட நிபுணர்கள் கொண்ட குழுவுடன் துருக்கி சென்றார். அங்கு துருக்கி அதிகாரிகளிடம் இருந்து ஜமால் கஷோகி கொலை தொடர்பான ஆதாரங்களை பெற்றார்.

கடந்த 6 மாதங்களாக நடத்திய விசாரணை முடிவில் ஜமால் கஷோகி கொலை தொடர்பான தன் 100 பக்க அறிக்கையை ஆக்னெஸ் காலமார்ட் இன்று சமர்ப்பித்தார். அதன் ஒரு பிரதியை சவுதி அரேபிய அரசுக்கும் முன்னதாகவே அனுப்பி வைத்தார்.

ஆதாரம் உள்ளது

ஜமால் கஷோகியின் படுகொலை, சட்டத்திற்கு புறம்பாக திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு அதிகார படுகொலை. சர்வதேச மனித உரிமை சட்டத்தின் கீழ் அவரது கொலைக்கு சவுதி அரேபியா அரசு தான் காரணம் என்று ஆக்னெஸ் காலமார்ட் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜமால் கஷோகி படுகொலையில் சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் மற்றும் சில மூத்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான நம்பத்தக்க ஆதாரங்கள் உள்ளன.

அவற்றுள் முக்கிய ஆதாரமான துருக்கி, சவுதி தூதரகத்தின் சிசிடிவி பதிவுகளில் ஜமால் கஷோகி கொல்லப்படும் காட்சிகளை நான் பார்த்தேன்.

இருப்பினும் ஜமால் கஷோகி கொலை குறித்து துருக்கி மற்றும் சவுதி அரேபியா நடத்திய விசாரணை சர்வதேச தரத்திற்கு இல்லை. எனவே ஜமால் கஷோகி கொலை தொடர்பாக அதிகாரப்பூர்வ சர்வதேச கிரிமினல் விசாரணைக்கு ஐநா பொது செயலாளர் ஆண்டோனியோ கட்டாரெஸ் உத்தரவிட வேண்டும்.

அந்த விசாரணைகள்தான் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனிப்பட்டமுறையில் எந்த அளவுக்கு இந்த கிரிமினல் நடவடிக்கையில் சமபந்தப்பட்டிருந்தார்கள என்பதை உறுதி செய்ய முடியும் என ஆக்னெஸ் காலமார்ட் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

ஜமால் கஷோகி வசித்து வந்த அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐயும் அவரது கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடக்க வேண்டும்.

சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், தான் ஒரு நிரபராதி என்பதை நிரூபிக்கும் வரை உலக நாடுகள் அவர் மீது பல தடைகளை விதிக்க வேண்டும். அவரது சொத்துக்களை முடக்க வேண்டும் என்று ஆக்னெஸ் கால்மார்ட் தன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

ஆக்னெஸ் காலமார்ட்டின் அறிக்கையில் ஜமால் கஷோகியின் கொலையில் தொடர்புள்ளவர்கள் என 15 பேரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் பல பெயர்கள் சவுதியில் விசாரிக்கப்பட்டு வரும் 11 பேர் பட்டியலில் இல்லை. எனவே சவுதியில் நடக்கும் விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று ஆக்னெஸ் கூறியுள்ளார்.

ஆக்னெஸ் கால்மார்ட் விசாரணை அறிக்கை தொடர்பாக சவுதி அரேபியா அரசு இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.