எம் எஸ் எம் இ நிறுவனங்களுக்கு பிணையமில்லாக் கடன் தொகையை இரு மடங்காக உயர்த்த இந்திய ரிசர்வ் வங்கி குழு பரிந்துரை

19-06-2019 04:41 PM

புதுடெல்லி

குறுந்தொழில் சிறுதொழில் நடுத்தர தொழில் நிறுவனங்கள்  (எம் எஸ் எம் இ நிறுவனங்கள் ) நலன் காக்க பரிந்துரைகளை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி செபி அமைப்பின் முன்னாள் தலைவர் உபேந்திர குமார் சின்கா தலைமையில் அமைத்த நிபுணர்கள் குழு எம் எஸ் எம் இ நிறுவனங்களுக்கான பிணையமில்லாக் கடன் தொகையை இரு மடங்காக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை வழங்கியுள்ளது.

பிணையம் இல்லாத கடன் தொகையை இருமடங்காக உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரை முத்ரா திட்ட நிறுவனங்களுக்கான கடன்களுக்கும் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடனகளுக்கும் பொருந்தும் என அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.

இந்திய ரிசரவ் வங்கி 2019ம் ஆண்டில் ஜனவரி மாதம் 2ந்தேதி யுகே சின்ஹா தலைமையிலான 8 உறுப்பினர் குழுவை அமைத்தது.

செபி நிறுவன தலைவர் யுகே சின்ஹா தலைமையிலான அந்த நிபுணர் குழு கடந்த 17ந்தேதி திங்களன்று தன்னுடைய பரிந்துரை அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாசியிடம் தாக்கல் செய்தது. யூகே சின்ஹா தாக்கல் செய்த அந்த அறிக்கையை ரிசர்வ் வங்கி வரும் வெள்ளிக்கிழமை அன்று பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடும் என்று தெரிகிறது.

குறுந்தொழில், சிறுதொழில், நடுத்தர தொழில்களுக்கான பிணையம் இல்லாக் கடன் இந்திய ரிசர்வ் வங்கியின் 2010ஆம் ஆண்டு சுற்றறிக்கை அடிப்படையிலும் கடன் காப்புறுதி திட்டத்தின் அடிப்படையிலும் வழங்கப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ரூ. 10 லட்சம் வரையிலான கடனுக்கு, குறுந்தொழில் சிறுதொழில் நடுத்தர தொழில்களிடமிருந்து பிணையம் கோரக் கூடாது என குறிப்பிடுகிறது.

கடன் காப்புறுதித் திட்ட விதிகளின்படி அந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் குறுந்தொழில் சிறுதொழில் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 2 கோடி வரை பிணையம் இல்லாமல் கடன் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூகே சின்ஹா குழு பரிந்துரைத்துள்ள படி இந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அடிப்படையில் வழங்கப்படும் பிணையம் இல்லாத கடனின் அளவு 20 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் அதே நேரத்தில் கடன் காப்புறுதித் திட்ட விதிகளின்படி ஆக பிணையம் இல்லாமல் வழங்கப்படும் கடன் ரூ. நாலு கோடி ஆக உயர்த்தப்பட வேண்டும்.

2017-18ம் ஆண்டு இந்தியாவில் உள்ள குறுந்தொழில் சிறுதொழில் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் அளவு ரூ. 14731 கோடி ஆகும்.

2019 மார்ச் 29ஆம் தேதி நிலவரப்படி குறுந்தொழில்கள், சிறு தொழில்கள், நடுத்தர தொழில்களுக்கு வழங்கப்பட்ட கடனின் அளவு ரூ. 15491 கோடி ஆகும். இது 5 சதவீத்த்துக்கும் சற்று கூடுதலான வளர்ச்சியைக் காட்டுகிறது.

முத்ரா திட்டத்தின் கீழ் மூன்று வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன. அதில் ஒரு கடன் திட்ட்த்தின் கீழ் உயர்ந்தபட்சமாக 50,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.

இரண்டாவது வகை கடனில் 50 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.

மூன்றாவது வகை திட்ட்த்தின் கீழ் ரூ.5 லட்சம் முதல் ரூ 10 லட்சம் வரை கடனாகப் பெறலாம்.  யுகே சின்ஹா கமிட்டி பரிந்துரைப்படி இந்த மூன்று வகையான கடன்களின் அளவும் இரண்டு மடங்காக உயர்த்தப்பட வேண்டும்.

2018-19 ஆண்டு கணக்குப்படி முத்ரா கணக்குகளின் எண்ணிக்கை 17.8 கோடியாகும் இவற்றுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை அளவு ரூ. 9.26 லட்சம் கோடியாகும்.

இந்தியாவில் மொத்தம் 2.6 கோடி எம் எஸ் எம் இ நிறுவனங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவை 6 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

உற்பத்தித் துறையில் எம் எஸ் எம் இ நிறுவனங்களின் பங்கு 45 சதவீதம் ஆகும் நாட்டின் ஏற்றுமதியில் 40 சதவீதத்தை எம் எஸ் எம் இ நிறுவனங்கள் வழங்குகின்றன.

குறுந்தொழில், சிறுதொழில், நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளில் மிகவும் முக்கியமானது கடன் பிரச்சினை. இந்த நிறுவனங்களுக்கு தேவையான அளவுக்கு கடன் கிடைப்பதில்லை. இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு வசூலிக்கப்படும் வட்டியும் கூடுதலாகவே உள்ளது. எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனளவு மிகக் குறைவாக இருப்பதற்கு வங்கிகள் காரணம் ஒன்றைக் கூறுகின்றன, எம் எஸ் எம் இ நிறுவனங்கள் வாங்கும் கடன் முறையாக திருப்பிச் செலுத்தப்படுவதில்லை. இந்த கடன்களை அபாயக் கடன்கள் என வங்கிகள் கருதுகின்றன. அதனால் அந்த அபாயத்தை ஈடுகட்ட வங்கிகள் பிணையத் தொகையை அல்லது பிணைய சொத்தை வலியுறுத்துகின்றன .

ஆனால் எம் எஸ் எம் இ நிறுவனங்கள் கையில் பிணையத் தொகைக்கு உரிய பணமோ பிணையச் சொத்துக்கு உரிய தகுதி உடைய  சொத்துகளும் பெரும்பாலும் இருப்பதில்லை என்பது முக்கியமான செய்தியாகும்.Trending Now: