இந்தியாவுக்கு வரியில்லாத ஏற்றுமதி சலுகையை மீண்டும் வழங்க அமெரிக்க எதிர்க்கட்சி எம்பி வலியுறுத்தல்

19-06-2019 02:32 PM

வாஷிங்டன், 

  இந்தியாவுக்கு வரியற்ற வர்த்தக சலுகையை மீண்டும் வழங்கும்படி அமெரிக்க வர்த்தக பிரதிநிதியான ராபர்ட் லித்திசைசரிடம் அமெரிக்காவின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி செனட்டர் ராபர்ட் மெனென்டெஸ் வலியுறுத்தினார்.

கடந்த மே 30ம் தேதி அமெரிக்காவின் ஜிஎஸ்பி திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு அளித்து வரும் வரியற்ற வர்த்தக  சலுகையை  ரத்து செய்வதாக அதிபர்  டொனால்டு டிரம்ப் அறிவித்தார்

இந்திய நிறுவனங்கள் அமெரிக்க சந்தைகளில் வர்த்தகம் செய்வதற்கு தடைகள் அற்ற வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கு போதுமான சந்தை வாய்ப்புகளை இந்தியா உருவாக்கவில்லை.

அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கு தேவையான சமத்துவமான, நியாயமான சந்தை வாய்ப்புகளை வழங்குவோம் என இந்தியா உறுதி அளிக்கவில்லை. அதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்தார்.

அதிபர் டிரம்பின் இந்த முடிவுக்கு இந்தியா வருத்தம் தெரிவித்தது. மேலும் இந்தியாவின் இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட பொருட்கள் மீது அமெரிக்கா வரிகளை உயர்த்தியதற்கு பதிலடியாக கடந்த வாரம் அமெரிக்காவின் 28 பொருட்கள் மீதான வரியை இந்தியா 75 சதவீதம் உயர்த்தியது. இந்த வர்த்தக மோதல் காரணமாக இருநாட்டு வணிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவுக்கு மீண்டும் வரியற்ற வர்த்தக சலுகையை வழங்க வேண்டும் என்று அமெரிக்க ஜனநாயக கட்சியை சேர்ந்த செனட்டர் ராபர்ட் மெனென்டெஸ் வர்த்தக பிரதிநிதியான ராபர்ட் லித்திசைசரிடம் வலியுறுத்தியுள்ளார்.

செனட் கமிட்டியில் நடந்த விசாரணையில் கலந்து கொண்ட ராபர்ட் மெனென்டெஸ் பேசுகையில் ‘‘இந்தியாவுடனான நமது பிரச்சனைக்கு நிச்சயம் தீர்வு காண முடியும் என நம்புகிறேன். அதனால் அவர்களுக்கு வரியற்ற வர்த்தக சலுகையை அமெரிக்கா மீண்டும் வழங்க வேண்டும்’’ என்று ராபர்ட் மெனென்டெஸ் கூறினார்.

அதேசமயம் இந்தியாவுடனான வர்த்தக பிரச்சனைகள் குறித்து அதிபர் டிரம்பின் கருத்துகளுக்கு ராபர்ட் மெனென்டெஸ் ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசினார்.

ராபர்ட் மெனென்டெஸின் வேண்டுகோளுக்கு ராபர்ட் லித்திசைசர் நேரடியாக பதிலளிக்கவில்லை. ஆனால் தான் பேசும் போது ஜிஎஸ்பி சலுகையை தகுதியான நாடுகளுக்கு வழங்குவது தொடர்பாக அமெரிக்க அரசு ஆய்வு நடத்தி வருகிறது. இது குறித்து பல நாடுகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அமெரிக்காவின் முந்தைய அரசுகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட சில தவறனான வர்த்தக கொள்கைகளால் இன்று உலக நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

அமெரிக்க விவசாயிகள், பண்ணையாட்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு அநீதியான வர்த்தக விதிமுறைகளை மாற்றுவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் என்று ராபர்ட் லித்திசைசர் தெரிவித்தார்.