சின்­னத்­திரை நடி­கர் சங்க நல­னுக்­காக மலே­சி­யா­வில் ஸ்டார்நைட்! * விஜய் சேது­பதி பங்­கேற்பு!

19-06-2019 02:22 PM

சின்­னத்­திரை நடி­கர் சங்­கம்  வரு­கிற ஆகஸ்ட் 17ல் மலே­சி­யா­வில் மாபெ­ரும் நட்­சத்­திர கலை விழாவை நடத்­து­கி­றது. அதில் நடி­கர் விஜய் சேது­பதி கலந்து கொள்­கி­றார்.                        

இது குறித்து  நடை­பெற்ற கூட்­டத்­தில், சின்­னத்­திரை நடி­கர் சங்­கத் தலை­வர் அ. ரவி­வர்மா  கூறி­ய­தா­வது:

“கடந்த 2003ல் மறைந்த நடி­கர் வசந்த் சின்­னத்­திரை நடி­கர் சங்­கத்தை ஆரம்­பித்­தார்.  சங்­கம் தொடங்­கப்­பட்டு இவ்­வ­ளவு ஆண்­டு­கள் ஆகி­யி­ருந்­தா­லும், அதற்­கென சொந்த கட்­ட­டமோ, பெரிய அள­வில் நிதியோ இல்லை.  எனவே, அந்த குறையை போக்­கும் வகை­யில் அதன் நல­னுக்­காக சின்­னத் திரை நடி­கர் சங்­கம் சார்­பில் வரு­கிற ஆகஸ்ட் 17ம் தேதி மலே­சி­யா­வில் உள்ள ஷா அலாம் – சிலாங்­கர் – மெலா­வட்டி அரங்­கத்­தில் மாபெ­ரும் சின்­னத்­திரை நட்­சத்­திர கலை விழா நடத்­தப்­ப­டு­கி­றது. இதற்கு முன், பொங்­கல், தீபா­வளி பண்­டி­கை­களை முன்­னிட்டு டிவி சேனல்­கள்­தான் இது போன்ற நட்­சத்­திர கலை விழாக்­களை பிரத்­யே­க­மாக நடத்தி வந்­துள்­ளன. ஆனால், சின்­னத்­திரை நடி­கர் சங்­கம் இத்­த­கைய விழாவை நடத்­து­வது இதுவே முதல் முறை­யா­கும்.

இது டிவைன் மீடியா நெட்­வொர்க் நிறு­வ­னத்­தின் முன்­னெ­டுப்­பில் நடை­பெ­று­கி­றது. இதில் ரசி­கர்­க­ளின் அபி­மா­னம் பெற்ற சின்­னத்­திரை நட்­சத்­தி­ரங்­கள் மட்­டு­மல்­லா­மல் சினிமா நட்­சத்­தி­ரங்­க­ளும் பிர­மு­கர்­க­ளும் பங்­கேற்று விழாவை சிறப்­பிக்­கி­றார்­கள். கண்­க­வர் மேடை­யில், சீரிய அரங்­கு­க­ளு­டன் இசை­யும், நட­ன­மும், சிறு நாட­கங்­க­ளு­மாக பிர­பல சின்­னத்­திரை கலை­ஞர்­கள் மகிழ்­விக்­கி­றார்­கள். அதே­போல், சினிமா கலை­ஞர்­க­ளும் விழா­வில் பங்­கேற்­ப­தாக உறு­தி­ய­ளித்­தி­ருக்­கி­றார்­கள். அவ்­வ­கை­யில், முத­லில் நடி­கர் விஜய் சேது­பதி விழா­வுக்கு வரு­வதை உறுதி செய்­தி­ருக்­கி­றார்.”

தென்­னிந்­திய நடி­கர் சங்க தலை­வர் நாசர் பேசும்­போது – “இந்த சங்­கம்­தான் எனது ஆதி சங்­கம். முதன்­மு­த­லில், ஒரு நடி­க­னாக என்­னு­டைய நடிப்பு வெளிப்­பட்­டது சின்­னத்­திரை ­யில்­தான். தூர்­தர்­ஷன்­தான் அந்த சம­யத்­தில் இருந்த ஒரே சேனல். அதில் சில 13 எபி­சோடு தொடர்­க­ளி­லும், ’பனங்­காடு’ டெலி­பி­லி­மி­லும் நடித்­தேன். அதன்­பின், கலை­ஞ­ரின் ‘தென்­பாண்டி சிங்­கம்’ வரை நடித்­தி­ருக்­கி­றேன். நடிப்­பில், சின்­னத்­திரை என்றோ பெரிய திரை என்றோ பாகு­பாடு காட்­டக்­கூ­டாது என்­ப­து­தான் எனக்கு நடிப்பை கற்­றுக்­கொ­டுத்த ஆசான்­கள் சொன்ன அறி­வுரை. அதை இன்­று­வரை கடைப்­பி­டித்து வரு­கி­றேன். ஏனெ­னில், எதில் இருந்­தா­லும் நடிப்பு என்­பது ஒன்­று­தான்” என்று குறிப்­பிட்­டார்.

சின்­னத்­திரை  நடி­கர் சங்க உப தலை­வர் மனோ­பாலா, செய­லா­ளர் ‘ஆடு­க­ளம்’ நரேன், ஐசரி கணேஷ், குட்டி பத்­மினி, வெங்­கட், சின்னி ஜெயந்த், தீபக், குறிஞ்சி, ஸ்ரீமன், விடி­யல் சேகர், சவுந்­த­ர­ராஜா, மலே­சி­யா­வில் இந்த நட்­சத்­திர கலை விழாவை  நடத்­தும் டத்தோ டாக்­டர். சுகு­மா­ரன், ஷீலா சுகு­மா­ரன், டிவைன் மீடியா நெட்­வொர்க்­கின் மலே­சியா பாலு, திருச்­சிற்­றம்­ப­லம், அம்­ச­ராஜ் உட்­பட பல­ரும் பேசி­னார்­கள்.