டிரம்பின் வர்த்தக போரால் இந்தியாவுக்கான கலிபோர்னியா பாதாம் ஏற்றுமதி பாதிப்பு : அமெரிக்க செனட்டர் சாடல்

18-06-2019 08:21 PM

வாஷிங்டன்,

இந்தியாவுடனான வர்த்தக உறவை அதிபர் டொனால்ட் டிரம்ப் தன் வர்த்தக போர் மூலம் சீர்குலைத்து வருவதால் அமெரிக்காவின் பாதாம் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கலிபோர்னியாவை சேர்ந்த செனட்டர் டையன் ஃபெயின்ஸ்டீன் சாடியுள்ளார்.

இந்தியாவின் ஸ்டீல் மற்றும் அலுமினியம் உள்ளிட்ட பொருட்கள் மீது அமெரிக்கா வரிகளை உயர்த்தியது. இது தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அதை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாதாம், வால்நட், பருப்பு வகைகள் உள்ளிட்ட 28 பொருட்கள் மீதான வரியை இந்தியா 75 சதவீதம் உயர்த்தியது.

இந்நிலையில் இந்தியாவின் வரி உயர்வு நடவடிக்கைக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் காரணம் என்று கலிபோர்னியா மாகாணத்தின் செனட்டர் டையன் ஃபெயின்ஸ்டீன் குற்றம்சாட்டியுள்ளார்.

கலிபோர்னியா மாகாணம் வருடந்தோறும் 6.5 கோடி டாலர் மதிப்பிலான பாதம் பருப்பை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. தற்போது அதிபர் டிரம்பின் வர்த்தக போர் காரணமாக அமெரிக்க பாதாம் மீதான வரியை இந்தியா 75 சதவீதம் உயர்த்தியுள்ளது.

இதனால் கலிபோர்னியா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கூட்டணி நாடுகளுடனான வர்த்தக உறவை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும் என்று செனட்டர் டையன் ஃபெயின்ஸ்டீன் சாடியுள்ளார்.

அதிபர் டிரம்பின் வரி உயர்வு நடவடிக்கைகளுக்கு பதிலடியாக இந்தியா மற்றும் சீனா விதிக்கும் வரி உயர்வால் அமெரிக்காவின் பாதாம் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கலிபோர்னியா பாதாம் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.