மனக்குறை தீர்ப்பாள் மாசாணி!

17-06-2019 11:45 AM

கோவை மாவட்டம் ஆனைமலையில் மாசாணியம்மன், சயனகோலத்தில் அருள்கிறாள். அமாவாசையன்று தரிசிக்க மனக்குறை தீரும்.

தல வரலாறு: நன்னன் என்னும் சிற்றரசன், அரண்மனை மாமரத்தின் பழங்களை, தன்னைத் தவிர மற்றவர் யாரும் சாப்பிட்டால் தண்டனைக்கு ஆளாக வேண்டும் என எச்சரித்தான். ஒரு சமயம் மரத்தில் பழுத்த பழம் ஒன்று ஆற்றில் விழ, நீராடிய கர்ப்பிணி ஒருத்தி விஷயம் தெரியாமல் சாப்பிட்டாள். திருடியதாக குற்றம் சாட்டி மரண தண்டனை விதித்தான் அரசன். கர்ப்பிணி இறந்த சில நாட்களுக்குள், மன்னன் எதிரியால் தோற்கடிக்கப்பட்டு நாட்டை இழந்தான்.

வீரம் மிக்கவனாக இருந்தும், கர்ப்பிணிக்கு இழைத்த கொடுமையின் காரணமாக போரில் மன்னன் தோற்றதை உணர்ந்த மக்கள், தெய்வமாக வழிபட ஆரம்பித்தனர். அவளை அடக்கம் செய்த உப்பாற்றின் வடகரை மயானத்தில் சயன நிலையில் சிலை வடித்தனர். 'மாசாணியம்மன்' என பெயர் பெற்றாள்.

ஸ்ரீசக்கரம்: 17 அடி நீளம் கொண்ட அம்மன் சிலையின் நெற்றியில் ஸ்ரீசக்கரம் உள்ளது. தெற்கில் தலை வைத்தபடி, கைகளில் கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தியபடி அருள்பாலிக்கிறாள். மனக்குறை நீங்க அமாவாசையன்று வழிபடுகின்றனர். விருப்பம் நிறைவேறியதும், அங்கப் பிரதட்சனம், முடி காணிக்கை, குண்டம் இறங்குதல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர். பிராகாரத்தில் உள்ள நீதிக்கல்லில் மிளகாய் அரைத்து பூசினால் திருடு போன பொருள் கிடைக்கும். எதிரி பயம் நீங்கும்.

இருப்பிடம்: பொள்ளாச்சியில் இருந்து 14 கி.மீ.,ல் ஆனைமலை.

விசேஷ நாட்கள்: தை மாதத்தில் 18 நாட்கள் திருவிழா – அமாவாசை, செவ்வாய், வெள்ளிக்கிழமை.

நேரம்: காலை 6.00 -– இரவு 8.00 மணி.

அருகிலுள்ள தலம்: 34 கி.மீ.,ல் கிணத்துக்கடவு முருகன் கோயில்.Trending Now: