அதிகாலை... சுபவேளை!

17-06-2019 11:22 AM

'சிறுவயதிலேயே குழந்தைகளின் மனதில் பக்தி என்னும் பயிரை விதைக்க வேண்டும்' என்று மகாபெரியவர் அடிக்கடி குறிப்பிடுவது வழக்கம்.

ஒருமுறை பக்தர் ஒருவர், ''சுவாமி! குழந்தைகளுக்கு பக்தியில் நாட்டம் வருவதில்லையே.... காலம் போகப் போகத்தான் பக்தியின் ருசி புரிய தொடங்கும். வாழ்வில் வரும் அனுபவங்களைப் பொறுத்து, அவர்களின் மனம் கடவுளை நாடத் தொடங்கும். அதுவரை பொறுமையுடன் இருக்கத்தானே வேண்டும்? வலுக் கட்டாயமாக பக்திப்பயிரை விதைத்தால் பலன் கிடைக்குமா?'' என்று கேட்டார்.

சுவாமிகள் கனிவுடன், ''உன் வீட்டில் தயிர் கடைந்து வெண்ணெய் எடுப்பதுண்டா?'' என்று கேட்டார்.

அவர், ''தினமும் தயிர்ப்பானையில் மத்தை வைத்து, கயிறு கட்டி இழுத்துக் கடைவார்களே..'' என்றார்.

''எந்த வேளையில் கடைவார்கள்.... காலையிலா, மத்தியானமா?''

''அதிகாலையில் தான் சுவாமி...''

''மத்தியானம் அல்லது சாயந்திரம் கடைவதில்லையே ஏன்?''

பதில் தெரியாமல் திகைத்தார் பக்தர்.

''அதிகாலை சுபமான வேளை. அந்நேரத்தில் வெயில் ஏறாததால் சுற்றுப்புறம் குளிர்ச்சியாக இருக்கும். அப்போது கடைந்தால் வெண்ணெய் பந்தாக திரளும். உருகாமல் கெட்டியாகவும் இருக்கும். சூரியன் வானில் உக்கிரமாகி விட்டால் போச்சு. வெண்ணெய் திரளாமல், கடையக் கடைய உருகி விடும். அதுபோல, வயதான காலத்தில் மனதில் பல சிந்தனைகளும் அலைமோதும். அப்போது பக்தி என்னும் வெண்ணெய் திரள்வது கடினம். குழந்தைகளின் மனம் குளிர்ச்சியானது. அதில் காம, குரோத சிந்தனை இருக்காது. அப்போது கடவுள் சிந்தனை என்னும் மத்தால் கடைய, பக்தி என்னும் வெண்ணெய் சுலபமாகத் திரளும். இதனால், பெற்றோர் வாரம் ஒருமுறையாவது குழந்தைகளை கோயிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்த பழக்கம் அவர்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்கும். துன்பம் வந்தாலும் கடவுள் அருளால் அது நம்மை பாதிக்காது என்ற சிந்தனை உருவாகும். அதனால் பக்திக்கு ஏற்ற வயது இளமைப் பருவம் தான். புரிகிறதா?'' என்றார்.

Trending Now: